Published:Updated:

காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா... ஆய்வு முடிவு சொல்வது என்ன? #AirPollution

காற்று மாசு-கொரோனா
காற்று மாசு-கொரோனா

பல நேரங்களில் நம்மை அச்சுறுத்தும் அம்சங்களை இன்றைய கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் தவிர்த்துவிடுவது நல்லதுதான். இருப்பினும் சில அச்சுறுத்தல்களை நமக்கான எச்சரிக்கையாக எடுத்து அக்கறை கொள்ளவேண்டியது அவசியம்.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கி, இன்று உலக நாடுகள் அனைத்திலும் தன் கோரமுகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா. நோய்த் தொற்று பாதிப்புகள் நாடுகளுக்கு நாடு வேறுபட்டுதான் காணப்படுகிறது. இதற்கான காரணங்கள், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சார்ந்ததாக இருப்பினும், வேறுசில காரணிகளின் தாக்கமும் பங்கு வகிக்கலாம் என்ற நோக்கில் இந்தத் தொற்றுநோய் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான ஆய்வுகள் மூலம் அடிக்கடி புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவற்றில் சில ஆய்வு முடிவுகள் நம்பிக்கையூட்டுபவையாகவும் சில எச்சரிக்கையளிக்கும் விதமாகவும் உள்ளன.

கொரோனா
கொரோனா

பல நேரங்களில் நம்மை அச்சுறுத்தும் அம்சங்களை, இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் தவிர்த்துவிடுவது நல்லதுதான். இருப்பினும், சில அச்சுறுத்தல்களை நமக்கான எச்சரிக்கையாக எடுத்து அக்கறை கொள்ளவேண்டியதும் அவசியம்.

இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் காற்றிலுள்ள மாசுத்துகள்களில் கொரோனா வைரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, தொடக்க நிலையில் மட்டுமே உள்ளது. இருப்பினும், காற்றில் மாசுபாடுகளுக்குக் காரணமாக இருக்கும் மாசுத்துகள்கள் வைரஸ் வாழ ஏதுவானதாக இருப்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மாசுபட்ட காற்று, நாம் சுவாசிக்கையில் நோய்ப்பரவலுக்கான காரணியாகச் செயல்பட்டு நீண்ட தூரம் நோயைப் பரப்பும் வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் இத்தாலிய அறிவியலாளர்கள்.

பொலோக்னா (Bologna) பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரான லியோனார்டோ செட்டி (Leonardo Setti) மற்றும் அவரின் குழுவினர் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். அவர்களின் கூற்றுப்படி இந்த ஆய்வானது காற்றுமாசுத் துகள்கள் வைரஸ் பரவுதலில் பங்கு வகிக்கிறதா அல்லது அவ்வாறு இல்லையெனில் அதை முற்றிலும் நிராகரித்து விடலாமா என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது.

லாக்டௌன்
லாக்டௌன்
கொரோனா இறப்புக்கு காரணமாகுமா வைட்டமின் டி குறைபாடு?..  மருத்துவர்கள் சொல்வது என்ன?!

லியோனார்டோ செட்டி குழுவினரின் ஆய்வானது, இத்தாலி ஆல்ஃபைன் லோம்பர்டி (Alpine Lombardy) பகுதியின் பெர்கமோ மாகாணத்தின் நகரம் மற்றும் தொழிற்சாலையின் திறந்தவெளிப் பகுதியில் `குவார்ட்ஸ் ஃபைபர் ஃபில்டர்' உதவியுடன் சேகரிக்கப்பட்ட காற்று மாதிரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் காற்றிலுள்ள மாசுத்துகள்களில் கொரோனா வைரஸில் இருக்கும் 'RtDR' என்ற மரபணு இருப்பது கண்டறியப்பட்டு, தனிப்பட்ட ஆய்வகத்தில் Blind test மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து, "மாசுத்துகள்களில் வைரஸ் இருப்பது உறுதியானாலும், அதன்மூலம் வைரஸ் மனிதர்களுக்குப் பரவுமா என்று ஆராய்வது மிக முக்கியம். அப்படிப் பரவுமென அறியப்பட்டால்தான் அதற்கான தீர்வைக் காண முடியும். இல்லையெனில் அதன் விளைவுகளைச் சந்தித்துப் பாதிக்கப்பட நேரிடும்" என்று அவர் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்ட 'RtDr' ஜீன் தான், காற்றுமாசுத் துகள்களில் கொரோனா வைரஸ் இருக்க முடியும் என்பதற்கான முதல்கட்ட ஆதாரம். வளிமண்டலத்திலுள்ள மாசுத்துகள்களின் நிலைத்தன்மை மற்றும் செறிவு அதிகமாக இருக்கும் நிலையில் வைரஸ் அதனுடன் பிணைந்து கொத்தாகத் திரள முடியும்.

இத்தாலியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களான லோம்பர்டி (Lombardy) மற்றும் போ வேலி (Po valley) ஆகியன மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் காற்றுமாசுத் துகள்களின் செறிவை அதிகளவு கொண்ட இடங்களாகும். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நிலவரப்படி, இத்தாலியில் கொரோனோ பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்ட மக்களில் 30 சதவிகிதம் பேர் இன்னும் லோம்பர்டி பகுதியில்தான் உள்ளனர். மேலும், எமிலியா ரோமக்னாவில் (Emilia Romagna) 13.5% பேருக்கு பைட்மன்ட் பகுதியில் (Piedmont) 10.5% பேருக்கு வெனடோ (Veneto) பகுதியில் 10% பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட ஐந்து இடங்களில்தான், இத்தாலியில் ஏற்பட்ட 80% உயிரிழப்புகளும் 65% மக்கள் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.

தொற்று பாதிப்பு
தொற்று பாதிப்பு
இதேபோல் காற்றின் மூலம் வைரஸ் பரவுதல் சாத்தியமா என்பது குறித்து இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

டையன் (Tian) மற்றும் அவரின் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்படி சீனாவின் பெய்ஜிங் காற்றிலுள்ள நுண்துகள்களின் அளவு PM2.5, அதாவது 2.5 மைக்ரோமீட்டர் அளவுடைய மாசுத்துகள்களின் நேரடித் தாக்கம் இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவுதலில் பங்கு வகித்தது. ஓசோன் மூலக்கூறு வைரஸ் பரவலில் பங்கு வகிப்பதில்லை. ஆனால், கார்பன் மோனாக்சைடு போன்ற மூலக்கூறுகள் வைரஸ் பரவலில் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, PM2.5-க்கும் குறைவான அளவுடைய லேசான துகள்கள், மற்ற கனமான துகள்களை விடக் காற்றில் அதிக நேரம் மிதந்துகொண்டிருக்க வாய்ப்புள்ளதால் அவை மூக்கு மற்றும் தொண்டை வழியாக நுரையீரலுக்குள் எளிதில் நுழைந்துவிடும். இதன் காரணமாகச் சளி போன்ற கோழை சுரத்தல் அதிகமாகி சிலியரி செயல்பாட்டைக் குறைத்துவிடும். எனவே, இவை நோய்ப்பரவுதலோடு நேரடியாகத் தொடர்பு படுத்தப்படுகின்றன.

மேலும், தற்போது அதிகளவில் Covid19 பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா மற்றும் இத்தாலிக்கு ஒரு பொதுவான தொடர்புள்ளது. இரண்டு நாடுகளிலுமே PM2.5-ன் செறிவு சராசரியாக ஒரு மணிநேரத்துக்கு, 75 μg/m3 என்ற அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும், இத்தாலியில் கொரோனா அதிகமாகப் பரவிய வடபகுதி இடங்களான லோடி(Lodi), க்ரிமோனா (Cremona) மற்றும் பெர்கமோ (Bergamo) ஆகியவை அதிகக் காற்று மாசுபாடு இருந்துகொண்டிருக்கும் நகரத்தின் பகுதிகளாகும். 20-ம் நூற்றாண்டில் 1960-களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி காரணமாக அந்தப் பகுதிகள் `இண்டஸ்ட்ரியல் ட்ரையாங்கில் (Industrial Triangle)' என அறியப்படுகிறது. முதலில், அதிகளவு கொரோனா பரவல் பதிவு செய்யப்பட்ட சீனாவின் ஹூபெய் (Hubei) பகுதியில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இதுவரை இல்லாத அளவில் மாசுபாடு இருந்துள்ளது.

0.1 முதல் 1 மைக்ரான் அளவுள்ள திவலைகள் தானாகப் பரவுவதைவிட 10 மைக்ரான் அளவு வரை உள்ள காற்றுமாசுத் துகளோடு ஒன்றிணைந்து பரவ அதிக வாய்ப்புள்ளது.
லியோனார்டோ செட்டி (Leonardo Setti)
``நோய் குணமாகி வந்தவர்கள், நோயாளிகள் அல்லர்!" - கொரோனா அச்சம் குறித்து மனநல மருத்துவர் விளக்கம்

குழந்தைகளுக்கு வரும் `கை பாத வாய்' நோய் (HFMD-Hand Mouth Foot disease), தட்டம்மை, பறவைக் காய்ச்சல்களைத் தோற்றுவிக்கும் வைரஸ் குறிப்பிட்ட தொலைவு வரை பரவக் காற்று மாசுத் துகள்கள் காரணியாக உள்ளதாக முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேற்கண்ட ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது போல தற்போது, கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பது மருத்துவ வல்லுநர்களால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், சார்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் தும்மலிலிருந்து வெளிப்படும் வைரஸ் நிறைந்த பெரிய திவலைத் துளிகள் 1-லிருந்து 2 மீட்டர் வரை மட்டுமே பரவும். ஆனால், 5 மைக்ரானுக்கும் குறைந்த அளவுள்ள திவலைத்துளிகள் காற்றிலேயே தங்கி, மேலும் பரவ வாய்ப்புள்ளது என்பது முன்னரே அறியப்பட்ட ஒன்றாகும்.

"0.1 முதல் 1 மைக்ரான் அளவுள்ள திவலைகள் தானாகப் பரவுவதைவிட 10 மைக்ரான் அளவு வரை உள்ள காற்றுமாசுத் துகளோடு ஒன்றிணைந்து பரவ அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், இவ்வாறு ஒருங்கிணைந்து உருவான துகள்கள் அந்தத் திவலைகளைவிட அளவில் பெரியதாகவும் அடர்த்தி குறைவாகவும் இருப்பதால் காற்றில் அதிக நேரம் மிதந்து கொண்டிருக்க முடியும். இந்தத் திவலைகள் காற்றுமாசுத் துகள்களோடு இணைந்து காற்றில் மிதந்து செல்ல வாய்ப்புள்ளது. இந்தக் காற்றுமாசுத் துகள்கள் வானூர்தி போலவும் திவலைகள் பயணிகள் போலவும் செயல்படுகின்றன" எனக் கூறுகிறார் செட்டி.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அயர்லாந்திலுள்ள கார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் சொடீயு (Professor John Sodeau), "மேற்கண்ட ஆய்வு நம்பத் தகுந்தது போலத்தான் உள்ளது. ஆனால், இந்தக் கருத்து மிகவும் அடிப்படை நிலையில்தான் இருக்கிறது. மேலே கூறியதுபோல, காற்றுமாசுத் துகள்களைக் காரணியாகக் கொண்டு வைரஸ் பரிமாற்றம் நடக்க உயிரியல் ரீதியாகச் சாத்தியக்கூறுகள் குறைவாகும். இந்த மாதிரியான அடிப்படை ஆய்வுகளின் முழுமையான முடிவுகளை உறுதி செய்ய 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும்" என்று கூறியுள்ளார்.

பொதுவாக, அதிகக் காற்று மாசுபாடு உள்ள இடங்களில் வாழ்வது மற்றும் கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற நம் நுரையீரலின் காற்றுப் பாதைகளில் உள்ள முதல் நிலை தடுப்பான "சிலியாக்களை" சேதமடையச் செய்து நீண்டகால தீவிர சுவாசக் கோளாறுகளை நுரையீரலில் உண்டாக்கும். இவ்வாறு ஏற்பட்ட பாதிப்பு கொரோனா தாக்கத்துக்கு வாய்ப்பாகவும் அமையலாம் என்று கணிக்கப்படுகின்றது. இதுகுறித்த ஆய்வுகள் இன்னும் ஆழமாகச் செய்யப்படுகின்றன. அவற்றின் முடிவுகள் வரும்போதுதான் அதற்குரிய தீர்வுகளையும் காணமுடியும்.

அடுத்த கட்டுரைக்கு