Published:Updated:

`இவர்களை உற்சாகப்படுத்தத் தேவையில்லை!'- இளைஞர்களுக்கு கடலூர் கலெக்டர் இன்ப அதிர்ச்சி

``கடல் போல் இருந்த எங்க ஏரி 40 ஆண்டுகளாக வறண்டு போய் கிடப்பதாக பெரியவர்கள் ஆதங்கத்தோடு கூறிக்கொண்டே இருந்தனர். இந்தச் சுற்று வட்டாரப்பகுதிக்கே இந்த ஏரிதான் நீர் ஆதாரமாக திகழ்ந்தது.''

ஏரி
ஏரி

பேராவூரணியில் உள்ள பெரியகுளம் ஏரி அப்பகுதி இளைஞர்களால் தூர்வாரப்பட்டு வருகிறது. இதை அனைவரும் பாராட்டி தங்களால் முடிந்த நிதி உதவியையும் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்ட கலெக்டர் ஏரி தூர் வாரும் பணியை பார்வையிட்டதோடு அந்த இளைஞர்களிடம், `உங்களை உற்சாகப்படுத்தத் தேவையில்லை. நீங்கள் தமிழக இளைஞர்களையே ஊக்கப்படுத்தி வருகிறீர்கள்' என பாராட்டி ஏரி தூர்வாரும் பணிக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு தொகையை நிதியாகக் கொடுத்து அவர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறார்.

கலெக்டர் அன்புசெல்வன்
கலெக்டர் அன்புசெல்வன்

பேராவூரணியில் உள்ளது பெரியகுளம் ஏரி. 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் கிடந்தது. அப்பகுதியின் மிகப்பெரிய நீர் ஆதரமாக விளங்கிய ஏரி தூர் வாரப்படாததால் புதர்மண்டிக் கிடந்தன. மேலும், ஏரிப் பகுதி ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கியிருந்தது. ஏரி தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால், எந்தப் பயனும் இல்லை.

இந்த நிலையில், பேராவூரணி பகுதியைச் சுற்றியுள்ள இளைஞர்கள் ஒன்றாக இணைந்து பெரியகுளம் ஏரியை தூர்வார முடிவு செய்தனர். இதற்காக கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம் தூர்வாரும் பணியைத் தொடங்கினர். இளைஞர்களின் ஆக்கபூர்வமான இந்தச் செயலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டி உற்சாகப்படுத்தி தங்களால் முடிந்த நிதி உதவியை தற்போதும் செய்துவருகின்றனர். தொடர்ந்து 18 நாள்களுக்கு மேலாக எந்த தொய்வும் இல்லாமல் இந்தப் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஏரி தூர் வாரும் பணி
ஏரி தூர் வாரும் பணி

இது குறித்து நிர்வாகக் குழுவைச் சேர்ந்த நவீன், பிரபாகர் என்பவர்களிடம் பேசினோம். ``கடல் போல் இருந்த எங்க ஏரி 40 ஆண்டுகளாக வறண்டு போய்க் கிடப்பதாக பெரியவர்கள் ஆதங்கத்தோடு கூறிக்கொண்டே இருந்தனர். இந்தச் சுற்று வட்டாரப்பகுதிக்கே இந்த ஏரிதான் நீர் ஆதாரமாக திகழ்ந்தது. எங்க பகுதி தஞ்சையின் கடைமடை ஏரியா. காவிரியில் தண்ணீர் வருவதே அரிது. அப்படியே தண்ணீர் வந்தாலும் கடைமடையான எங்க பகுதிக்கெல்லாம் வருவது ரொம்பக் கஷ்டம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டே செல்கிறது. இப்படியே போனால் நம்ம பகுதியும் தண்ணீருக்காக தவிக்கும் பாலைவனமாக மாறிவிடும் என்பதை உணர்ந்தோம்.

இதேபோல் கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அன்புச் செல்வன். இவர் இதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், தூர்வாரும் பணி குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். உடனே அவர் ஏரி தூர்வாரும் பணியைப் பார்வையிட வந்தார். அப்போது எங்க குழுவில் உள்ளவர்களையும், இதை முன்னின்று செய்யும் இளைஞர்களையும் பாராட்டி வாழ்த்தினார். அதோடு தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.25,000 பணத்தை நிதியாக ஏரி தூர் வாரும் பணிக்குக் கொடுத்தார். இது தொடர்பாக வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் என்னிடம் தயங்காமல் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் எனக் கூறினார்.

பிரான்சிஸ்
பிரான்சிஸ்

உடனே இளைஞர்களாகிய நாங்கள் களத்தில் இறங்கி பெரியகுளம் ஏரியை தூர்வார முடிவு செய்தோம். இதற்கு அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததோடு தங்களால் முடிந்த நிதி உதவியையும் செய்தனர். திட்டமிட்டப்படி வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அனைவரும் அறியும்படி உடனுக்குடன் தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். கனடாவிலிருந்து ஆராய்ச்சிக்காக வந்த பிரான்சிஸ் என்பவர் இதைக் கேள்விப்பட்டு வந்து பணியை பார்வையிட்டதோடு உங்களை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றார்.

பின்னர் இந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தத் தேவையில்லை. இவர்கள் தமிழக இளைஞர்களுக்கே முன்னுதாரணமாக திகழ்வதோடு அவர்களை ஊக்கப்படுத்தவும் செய்கிறார்கள் என்றார். கலெக்டரின் இந்த வார்த்தைகள் எங்கள் பொறுப்புணர்வை அதிகமாக்கியிருக்கிறது. இதுவரை எங்களுக்கு ரூ.12 லட்சம் நிதி வந்து சேர்ந்திருக்கிறது.

கலெக்டர் அன்புசெல்வன்
கலெக்டர் அன்புசெல்வன்

பிரமாண்ட ஏரியை தூர்வார இது போதுமான தொகை இல்லை என்றாலும் இதை வைத்துக்கொண்டே செம்மையாக பணியைச் செய்துவருகிறோம். இன்னும் பலர் நிதி தருவார்கள். அதைக் கொண்டு இந்தப் பணியை நிறைவு செய்த உடன் நாங்கள் சொன்னது போலவே மற்ற நீர் நிலைகளையும் தூர்வாரும் பணியைத் தொடங்க இருக்கிறோம்'' என்றார்.