Published:Updated:

நிவர் புயல் சென்னையைத் தாக்குமா? - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

'மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் நிவர் புயல் சென்னையைத் தாக்குமா?’ என்ற கேள்வி சென்னை வாசிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகரும் நிவர் புயல், மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே நாளை கரையைக் கடக்கும் என்றும் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ வேகத்துக்கு மேல் காற்றுவீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நிவர் புயல்
நிவர் புயல்

இந்நிலையில், தமிழகத்தில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புதுவையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே இடியுடன்கூடிய கனமழை பெய்துவருகிறது. இப்படியான சூழலில், `மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் நிவர் புயல் சென்னையைத் தாக்குமா?’ என்ற கேள்வி சென்னை வாசிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.

புயல் நிலவரம் குறித்து இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ``நிவர் நாளை மாலை அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் காரணமாக அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்குக் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுவையில் மிக பலத்த மழை பெய்யும். திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுவையில் மிக பலத்த மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிவர் புயல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையில் கரையைக் கடக்கும் என்பதால், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் வீசும். காற்றின் வேகம் சுமார் 100 முதல் 120 கி.மீ வேகத்தில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

நிவர் புயல்
நிவர் புயல்

நிவர் புயல் சென்னையைத் தாக்க வாய்ப்புள்ளதா என அவரிடம் கேட்டோம், ``புயல் எறும்பு மாதிரி சின்ன சைஸ் கிடையாது. அதனுடைய சைஸ் ரொம்ப பெரியது. புயலுக்கு கண் பகுதி, வால் பகுதி என்றெல்லாம் இருக்கின்றன. சென்னைக்கும் புதுச்சேரிக்கும் பயண நேரமாக நமக்கு வேண்டுமானால் மூன்று மணி நேரம் இருக்கலாம். ஆனால், புயலுக்கு அந்த தூரமெல்லாம் ஒரு பெரிய தூரமே கிடையாது. ஆகையால், இந்த நிவர் புயல் சென்னையை நேரடியாகப் பலமாகத் தாக்குவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கணிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, சற்று வீரியம் குறைந்த தாக்கம் கடலோரப் பகுதிகளில் இருக்கத்தான் செய்யும். எனவே, அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு