Published:Updated:

வெடித்து வெளியேறும் தொன்மையான வைரஸ்கள்... மனிதனுக்குக் காத்திருக்கும் `பெர்மாஃப்ராஸ்ட்' ஆபத்து!

பூங்குழலி

கடல்மட்டம் அதிகரிப்பது, நகரங்கள் மூழ்குவது எனப் பருவநிலை மாற்றத்தின் அபாயங்களை மிகச் சிலவற்றுள் சுருக்கிவிட முடியாது. நாம் எண்ணிப்பார்த்திட முடியாத அளவுக்கு அதன் ஆபத்து அதிகம். அதில் ஒன்றுதான் இந்த பெர்மாஃப்ராஸ்ட் சம்பவங்கள்.

Melting Ice
Melting Ice ( AP )

புவிவெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் சூழலியல் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. சூழலியல் சார்ந்த பிரச்னைகள் அனைத்தையும் பெரும்பான்மை சமூகம் அலட்சியப்போக்குடன் கடந்து விடுவதற்கு காரணம் இந்தப் பிரச்னைகள் எப்போதும் எதிர்காலத்தில்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அலட்சியம்தான். ஆனால், நாம் அனைவரும் உடனடியாக கவனித்து கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் உலகில் மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் பெர்மாஃப்ராஸ்ட் பிரச்னை. அறிவியல் உலகம் இப்போதுதான் அச்சத்துடன் இந்தப் பெயரை உற்றுநோக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போதைக்கு ரஷ்யா, சைபீரியா, கனடா போன்ற துருவப்பகுதிகள்தான் இதன் பாதிப்புகளை அதிகமாக அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் இவை உலகின் மற்றப் பகுதிகளிலும் ஆபத்தை விளைவிக்கலாம்.

Polar
Polar

நமது காவிரிச் சமவெளிகளில் இருப்பதைப் போலவே அந்த நிலப்பகுதியின் அடிப்பகுதியிலும் மீத்தேன் எரிவாயு இருக்கிறது. இவை துருவப்பகுதி நாடுகள் என்பதால், அந்த நிலப்பரப்பின் மேல்பகுதி உறைபனியில் மூடப்பட்டிருக்கும். இந்த அமைப்பு இப்படியே தொடர அனுமதித்தால் சிக்கல் இல்லை. ஆனால், இப்போது புவி வெப்பமயமாதல் காரணமாக அந்தப் பகுதிகளின் வெப்பநிலை பலமடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கனடாவில் உள்ள யூகான் நகரம் கடந்த 13,600 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலையை அனுபவித்து வருகிறது. அங்கு இருக்கக்கூடிய பல்வேறு பெருநகரங்களின் நிலையும் இதுதான். எனவே, இந்த உறைபனி வெகுவேகமாக விரிசல் விட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விரிசல்களின் வழியாக மீத்தேன் வாயு வெளியேறும்போது எரிமலை வெடிப்பதை போன்று மீத்தேன் வாயு வெடித்து வெளியேறுகிறது. இதுபோன்ற சமயங்களில் நிலத்தின் அடிப்பகுதியிலிருந்து சல்பியூரிக் அமிலம் வெளியேறி அந்தப் பகுதியில் உள்ள பாறைப்பகுதி உட்பட அனைத்தையும் அரித்துவிடும்.

மீத்தேன் எரிவது என்பது சாதாரணமாக கார்பன் டை ஆக்சைடை விட நூறு மடங்கு அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். புவியின் வெப்பநிலையை பராமரிப்பதில் எப்போதும் துருவப்பகுதிகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்தப்பகுதிகளின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெடிக்கும் பெர்மாஃப்ராஸ்ட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதன் விளைவாக பூமியின் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரிக்கும்.

Permafrost
Permafrost
AP

இதைத்தாண்டிய அச்சுறுத்தல் ஒன்றையும் பெர்மாஃப்ராஸ்ட் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மீத்தேன் எரிவாயு வெடித்துச் சிதறும்போது உறைபனியினால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மட்கிப்போகாமல் இருந்த விலங்குகளின் சடலங்கள் வெளியேறுகின்றன. ரஷ்யாவின் ஷைலாக் நதிக்கரையிலும், சைபீரியாவிலும் இதைப் போன்ற மேமோத்கள் பெர்மாஃப்ராஸ்ட்டின்போது வெளியே தெரிகின்றன. இந்த விலங்குகள் பெரும்பாலும் ஆந்த்ராக்ஸ் போன்ற கொள்ளை நோய்களால் உயிரிழந்தவை. இத்தனை ஆண்டுகளாக இந்த விலங்குகளின் உடல்கள் உறைபனியில் இருந்ததால், இந்த நோய்க்கிருமிகளும் அதே செயல்வீரியத்துடன் இருந்திருக்கின்றன. பெர்மாஃப்ராஸ்ட்டின்போது இந்த வைரஸ்களும் பெருக ஆரம்பிக்கின்றன. இந்த ஒட்டுண்ணி வகை வைரஸ்கள் இப்போதிருக்கும் வைரஸ்களைவிட பலமடங்கு செயல்திறன் கொண்டவை. இப்போது இருக்கும் வைரஸ்களுக்கு எதிரான வேதிமருந்துகள் டெங்கு காய்ச்சல் விஷயத்தில்கூட அவ்வளவாக எடுபடவில்லை. இந்த நிலையில் இன்னும் சில புதிய வைரஸ்கள் திரும்ப வந்துகொண்டிருக்கின்றன. இது அச்சத்தையே ஏற்படுத்துகிறது. சைபீரியாவில் ஏமல் தீபகற்பத்தில், 12 வயது சிறுவன் உயிரிழந்து பல மக்களும் பாதிக்கப்பட்ட பிறகுதான் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2016-ம் ஆண்டிலிருந்துதான் இதைப்பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அதிகமாக எழுதப்பட்டு வருகின்றன. தற்போழுது துருவப்பகுதி நாடுகள்தான் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றன என்றாலும் மற்ற பகுதிகளில் உள்ள பனிமூடியமலைகளான ஆல்ப்ஸ் மலைத்தொடர்களிலும் இந்தியாவில் உள்ள இமயமலை பகுதிகளிலும் இதுபோன்று நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்றும் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதைப்பற்றிய விழிப்புணர்வை உலகளாவிய அளவில் ஏற்படுத்துவதற்காக உலகளாவிய பெர்மாஃப்ராஸ்ட் கூட்டமைப்பு (International association of permofrost) ஒன்று ஏற்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதனுடைய மாநாடு சீனாவில் உள்ள லான்சூ (lanzhou) நகரில் 2020 ஜூன் மாதம் நடைபெறுகிறது. இதில் இனிவரும் நாள்களில் பெர்மாஃப்ராஸ்ட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகளாவிய அளவில் விரிவாக பேசப்படவிருக்கிறது .

இயற்கையிடமிருந்து அபாயத்துக்கான ஒவ்வோர் எச்சரிக்கையும் எழுந்துகொண்டிருக்கிறது. மனித சமூகம் இதற்கு என்ன மறுவினை ஆற்றப்போகிறது என்பதில்தான் நம் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.