Election bannerElection banner
Published:Updated:

மீண்டும் புத்துயிர் பெறும் கோயில் நந்தவனம்... பக்தியோடு ஒரு பசுமை சேவை!

நந்தவனம்- மரம் நடும் பணி
நந்தவனம்- மரம் நடும் பணி

ஒரு காலத்தில் இயற்கை எழிலோடு காட்சி அளித்த நந்தவனங்கள், தற்போது மிகவும் மோசமான பரிதாப நிலையில் கிடக்கின்றன. இந்நிலையில்தான் கோயில் நந்தவனங்களை மீட்டெடுக்கும் உன்னத முயற்சியில் இறங்கியுள்ளார்கள் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பினர்.

ஆன்மிகத்தை மட்டுமல்ல, மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கக்கூடிய இடமாகவும் நம்முடைய பழங்கால கோயில்கள் திகழ்ந்தன. நம் முன்னோர்கள் கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைத்து, அதில் மருத்துவகுணம் கொண்ட மரங்களை வளர்த்தார்கள். அம்மரங்களில் இருந்து வீசும் நறுமணக் காற்று பக்தர்களுக்கு புத்துணர்வை வழங்கியது. இதனால் ஏகாந்தமான சூழல் நிலவியது. நிழலும் கிடைத்தது. கடவுளுக்கு செய்யும் தொண்டாக நினைத்து, பக்தி பரவசத்தோடு அம்மரங்களுக்கு மக்கள் தண்ணீர் ஊற்றுவார்கள்.

நந்தவனம்- மரம் நடும் பணி
நந்தவனம்- மரம் நடும் பணி

கீழே கிடக்கும் இலை, சருகுகளைக் கூட்டி சுத்தம் செய்வார்கள். பூக்களைப் பறித்து கடவுள்ளுக்குச் சூடுவார்கள். இது உடற்பயிற்சி போல் பக்தர்களுக்கு பலன் கொடுத்தது. ஆனால், காலப்போக்கில் கோயில் நந்தவனங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் போயின. அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டன. புதிதாக மரங்கள் வளர்க்கப்படவும் இல்லை. இதனால் நந்தவனம் இருந்த இடங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டன. பல கோயில்களில் ஒரு காலத்தில் இயற்கை எழிலோடு காட்சி அளித்த நந்தவனங்கள், தற்போது மிகவும் மோசமான பரிதாப நிலையில் கிடக்கின்றன. இந்நிலையில்தான் கோயில் நந்தவனங்களை மீட்டெடுக்கும் உன்னத முயற்சியில் இறங்கியுள்ளார்கள் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பினர்.

டெல்டா மாவட்டங்களில் ஏராளமான பழங்கால கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தப் படுகிறது. அதே வேளையில் கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. இதை அறிந்த கிரீன் நீடா அமைப்பினர், அறநிலையத்துறையின் அனுமதியைப் பெற்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தை செப்பனிட்டு 300-க்கும் மேற்பட்ட பூ வகை மரங்களை நடவு செய்துள்ளனர்.

ஜெசிபி மூலம் சுத்தம் செய்யும் பணி
ஜெசிபி மூலம் சுத்தம் செய்யும் பணி

இது குறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு கூறுகையில், ``பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. பாதுகாப்பு கூண்டுக்கே அதிக செலவாகிறது. தனிப்பட்ட பொது அமைப்புகள் இதைச் செய்வதில் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்படும் மரக்கன்றுகள் சாலை விரிவாக்கத்தின்போது வெட்டப்படுவது வேதனையளிக்கிறது. ஆற்றுக்கரை ஓரம் நடப்படும் மரக்கன்றுகள் கரைகள் விரிவாக்கத்தின்போது வெட்டி சாய்க்கப்படுகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டே திருக்கோயில்களில் உள்ள நந்தவனங்களில் மரக்கன்றுகளை வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டோம். நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது. புதர் மண்டிக்கிடந்த நந்தவனத்தை நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சா.சங்கர்- செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தங்கள் ஜெசிபி மூலம் கிட்டத்தட்ட 20 மணி நேரத்துக்கும் மேல் இயக்கி சுத்தம் செய்து கொடுத்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் உதவியுடன் மரக்கன்றுகளை நட்டோம்.

மு.ராஜவேலு
மு.ராஜவேலு

300 மரக்கன்றுகளுக்கும் தண்ணீர் தூக்கி ஊற்றுவதை அறிந்த நீடாமங்கலம் அடுத்த வையகளத்தூர் செந்தில், பாலு ஆகியோர் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுத்தனர். தற்போது வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களைக்கொண்டு நந்தவனத்தைப் பராமரிப்பு செய்து வருகிறோம்.

மற்ற இடங்களில் மரம் வளர்த்து பராமரிப்பதைவிட கோயில்களில் பம்புசெட் வசதி உள்ளதால் எளிமையாக மரம் வளர்க்க முடிகிறது. 15 அடிக்கும் உயரமான மதில் சுவர்கள் நான்கு பக்கங்களிலும் உள்ளதால் பாதுகாப்பு கூண்டு செலவு மிச்சமாகிறது.

தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் வளர்க்கும் தன்னார்வ அமைப்புகள் பழங்கால கோயில்களில் உள்ள நந்தவனங்களில் மரக்கன்றுகளை வளர்க்க முன் வர வேண்டும். இந்ந நந்தவனத்தில் இருந்து பறிக்கப்படும் பூக்கள் தினம்தோறும் சுவாமியின் பூஜைக்கு பயன்படுத்தப்படும். கோயில் வளாகத்தில் நடப்பட்டுள்ள பெரும்பாலான மரங்கள் வாசனை மிகுந்த பூக்களை பூத்துக்குலுங்கும். ஆலயத்தைச் சுற்றி வலம் வருபவர்களுக்கும், ஆலயத்தைச் சுற்றி குடியிருப்பவர்களுக்கும் நறுமணம் மிகுந்த காற்று கிடைக்கும். இதனால் பொதுமக்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். மன அமைதி கிடைக்கும். நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் மட்டுமல்லாமல், திருத்துறைப்பூண்டி தாலுகா, விளக்குடியில் உள்ள வேதமகாகாளியம்மன் கோயில் வளாகத்தில் நந்தவனம் உருவாக்க, 100 மரக் கன்றுகளை நட்டுள்ளோம்’’ என்று சொன்னவர், தமிழக அரசுக்கு ஓர் முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தினார்.

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பினர்
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பினர்

``ஆலய வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் மரக்கன்றுகள் நட அனுமதி பெறுவது என்பது சற்றுக் கடினமாக உள்ளது. இதை எளிமைப்படுத்தி கோயில் செயல் அலுவலரே அனுமதி வழங்கிட வேண்டும். மரக்கன்றுகள் வளர்க்க முன்வரும் பொதுநல அமைப்புகளுடன் கோயில் நிர்வாகமும் இணைந்து பணி செய்திட வேண்டும். கோயில் பணியாளர்கள், இரவுக் காவலர்களை இச்சேவையில் ஈடுப்படச் செய்ய அறநிலையத்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு