Published:Updated:

`மாறுபட்ட உடல்நிறம், குட்டை வால்!' - குன்னூரில் உலவும் விசித்திர காட்டுமாடு; அதிர்ச்சியில் வனத்துறை

காட்டுமாடு
காட்டுமாடு

காட்டுமாடுகளின் முழங்கால் வரை வெள்ளையாகவும் உடல் கறுப்பு நிறத்திலும் இருப்பதுதான் இயல்பு. ஆனால், இந்தக் காட்டுமாடு மாறுபட்ட நிறத்தில் காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்ட சாலையைக் காட்டுமாடு கூட்டம் ஒன்று கடந்துள்ளது. 20-க்கும் அதிகமான காட்டுமாடுகள் இருந்த அந்தக் கூட்டத்தில் ஒரு காட்டுமாடு மட்டும் மாறுபட்ட நிறத்தில் காணப்பட்டுள்ளது. இதைப்பார்த்த குன்னூர் கரன்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

காட்டுமாடு
காட்டுமாடு

இயல்பற்ற நிறத்துடன் காணப்படும் இந்தக் காட்டுமாட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து குன்னூர் வனச்சரகர் சசி குமாரிடம் பேசினோம். ``இந்தப் பகுதியில் இப்படி ஒரு காட்டுமாடு இருப்பது உண்மைதான். இந்தக் காட்டுமாடு உடலின் பாதியளவு வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து கண்காணித்து வருகிறோம். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி காட்டுமாட்டின் நிற மாற்றத்துக்கான காரணத்தை ஆய்வு செய்யவுள்ளோம்" என்றார்.

காட்டுமாடு
காட்டுமாடு

காட்டுமாட்டின் இயல்புக்கு மாறான நிறம் குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் ஹரிஹரன்,``காட்டுமாடுகளின் முழங்கால் வரை வெள்ளையாகவும் உடல் கருப்பு நிறத்திலும் இருப்பதுதான் இயல்பு. ஆனால், இந்தக் காட்டுமாட்டு மாறுபட்ட நிறத்தில் காணப்படுகிறது. மேலும், இதன் வால் மிகக் குட்டையாகக் காணப்படுகிறது. இது நிறமிக்கோளாரா அல்லது மரபணு சார்ந்த பிரச்சனையா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.இத்தகைய பாதிப்புடன் மேலும் சில காட்டுமாடுகள் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு