Published:Updated:

`வீட்ல குடிக்க கஞ்சி இல்லைன்னாலும்கூட, சிட்டுக்குருவிகளை பட்டினி போட்டதில்ல!' - உருகும் அலோன் ராஜ்

சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி

கரிசம்பட்டி கிராமத்தில், `சிட்டுக்குருவி வீடு’ என்று சொல்லும் அளவிற்கு, தனது வீட்டையே சிட்டுக் குருவிக்காக அர்ப்பணித்துள்ளார் அலோன் ராஜ். அவரைச் சந்திக்க கரிசல்பட்டி சென்றிருந்தோம்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ளது கரிசல்பட்டி கிராமம். அங்கு வசிக்கும் அலோன் ராஜ் என்பவர், தன்னுடைய சொந்த செலவில், சிட்டுக்குருவி கூடு செய்து, அதனை இலவசமாக வழங்கியுள்ளது, ஊர் மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று (மார்ச் 20) உலக சிட்டுக் குருவி தினம்.

சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
Vikatan

கரிசம்பட்டி கிராமத்தில், `சிட்டுக்குருவி வீடு’ என்று சொல்லும் அளவிற்கு, தனது வீட்டையே சிட்டுக் குருவிக்காக அர்ப்பணித்துள்ளார் அலோன் ராஜ். அவரைச் சந்திக்க கரிசல்பட்டி சென்றிருந்தோம். வீட்டின் மேற்கூரையின் பக்கவாட்டில், மூங்கில் கம்புகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதில் போடப்பட்டிருந்த துளைகளில், சிட்டுக்குருவிகள் இருந்தன. அதனைப் பார்க்கவே ஆச்சர்யமாக இருந்தது.

அலோன் ராஜிடம் பேசினோம். ``நான், கரிசல்பட்டி கிராமத்துல, மாலை நேர இட்லி கடை வச்சுருக்கேன். இப்ப நான் இருக்குற வீடு வாடகை வீடுதான். அஞ்சு வருசத்துக்கு முன்னால, சிட்டுக்குருவி எங்க வீட்டு பக்கத்துல வந்துச்சு. அதுக்கு சோறு வச்சோம். தொடர்ச்சியா வரவே, நாங்களும் சோறு வச்சுகிட்டே இருந்தோம். ஒரு கட்டத்துல, நிறைய சிட்டுக்குருவிகள் வர ஆரம்பிச்சது. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல. வெறும் சோறு மட்டும் வைக்க வேண்டாம்னு நினைச்சு. திணை வாங்கி போட்டேன். ரொம்ப விரும்பி சாப்பிட ஆரம்பிச்சது. நாலு நாளைக்கு ஒரு முறை 100 ரூபாய் செலவு ஆகும். இட்லி கடை வருமானல் இருந்தாதான் எங்க வீட்ல அடுப்பு எரியும். ஆனாலும், சிட்டுக்குருவிக்காக செலவு செய்யுறதுல எங்க குடும்பத்துக்கு ரொம்ப சந்தோசமாதான் இருந்துச்சு. ஒரு நாள் அதுக்கு உணவு போடலைனா போதும், வீட்டுக்குள்ள வந்து சத்தம் போட்டு அலப்பறை செய்யும்.

அலோன்ராஜ் வீடு
அலோன்ராஜ் வீடு

இப்படியே வருசம் போயிடுச்சு. வீட்டுப் பக்கத்துல இருக்க பெரிய கொய்யா மரத்துலதான் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி இருந்துச்சு. ராத்திரி நேரத்துல அதை பூனைகள் பிடிச்சு திண்ண ஆரம்பிச்சதும், எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. வீட்டு ஓனர்கிட்ட பேசி, மூங்கில் கம்புல ஓட்டை போட்டு, வீட்டோட பக்கவாட்டு பகுதியில கட்டிவச்சேன். இப்போ அதுலதான் கூடு கட்டி இருக்குதுங்க. கொரோனா காலத்துல, வியாபாரமே இல்லாம, ரொம்ப சிரமப்பட்டேன்.

எங்க வீட்ல குடிக்க கஞ்சி இல்லாம இருந்தாலும், தெரிஞ்சவுங்க, பழகுனவுங்ககிட்ட கேட்டு, திணை வாங்கி போட்டு, சிட்டுக்குருவிகளை பட்டினி போடாம பாத்துக்கிட்டேன். எனக்கு சிட்டுக்குருவி தினம் எல்லாம் தெரியாது. ஒரு நண்பர் சொல்லிதான் தெரிஞ்சுகிட்டேன். நம்ம வீட்டுல மூங்கில் கம்பு மாட்டுன மாதிரி மத்தவங்க வீட்டுல மாட்டுவாங்கனு சொல்ல முடியாது. அதுனால, சிட்டுக்குருவி கூடு செஞ்சு, அதை மத்தவங்களுக்கு கொடுக்கலாம்னு நினைச்சேன்.

அலோன்ராஜ்
அலோன்ராஜ்
10,000 செயற்கை கூடுகள், சிறப்பு காப்பிடங்கள்... சிட்டுக்குருவிகளுக்காகப் பாடுபடும் `குருவி' கணேசன்!

பிளைவுட் வாங்கி, 10 கூடு செஞ்சேன். யாரை வச்சு இதை கொடுக்கலாம்னு நினைச்சப்போதான், கொரோனா காலத்துல சிட்டுக்குருவிகளுக்கு உதவி செஞ்ச நபர்கள் நியாபம் வந்தாங்க. அவுங்கள கூப்பிட்டு, ஊர்ல சிட்டுக்குருவி வளர்க்க ஆர்வமா இருக்குற நபர்களுக்கு கொடுத்தேன். என்னோட வருமானத்துல இதைதான் செய்ய முடிஞ்சது. காண்டாமிருகம், யானைனு அழியும் விலங்குகள் எல்லாம் காட்டுக்குள்ளதான் இருக்கும். நம்ம கண்ணு முன்னாடி, அழிஞ்சு போகுற ஒரே இனம் சிட்டுக்குருவிதான். அதைப் பாத்துட்டு நாம சும்மா இருக்கக் கூடாது. வெயில் காலம் வேற வந்துருச்சு. தண்ணி கிடைக்காம, சாப்பாடு கிடைக்காம சிட்டுக்குருவி ரொம்ப கஷ்டப்படும். ஒவ்வொருத்தர் வீட்லயும் சிட்டுக்குருவி கூடு வைங்க. தண்ணீர் வைங்க. அதுவே போதும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு