Published:Updated:

இப்போதாவது உணர்வோமா எதிர்கால அபாயத்தை?

காலநிலை மாற்றம்
பிரீமியம் ஸ்டோரி
காலநிலை மாற்றம்

இதுவரை வெளியான ஐபிசிசி அறிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது.

இப்போதாவது உணர்வோமா எதிர்கால அபாயத்தை?

இதுவரை வெளியான ஐபிசிசி அறிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது.

Published:Updated:
காலநிலை மாற்றம்
பிரீமியம் ஸ்டோரி
காலநிலை மாற்றம்
பனிப்பாறை உருகுதல், பருவம் தவறிய மழை, பெருவெள்ளம், வறட்சி, காட்டுத் தீ, வெப்ப அலைகள், கடல்மட்ட உயர்வு என உலகில் உயிர்களின் இருத்தலை அச்சுறுத்தும் நிகழ்வுகள் அதிகமாகிவருகின்றன. இந்தியாவில்கூட இதற்கு உதாரணங்களைக் கூறமுடியும். ஹைதி நிலநடுக்கத்தில் 1,000 பேரை ஒரே வாரத்துக்குள் இயற்கைக்குக் காவு கொடுத்திருக்கும் சூழலில்தான் IPCC அறிக்கையை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது.

புவியில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை ஆராயும் நோக்கில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த அறிவியலாளர்களைக் கொண்ட காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக்குழு (Intergovernmental Panel on Climate Change), 1988-ல் உருவாக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக ஐபிசிசி மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்டு வந்தாலும், அவை பொதுமக்கள் தகவல்தொடர்பு ஆவணங்கள் அல்ல என்பதால் வெகுஜன உரையாடலில் காலநிலை மாற்றம் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. இந்நிலையில் ஐபிசிசி-யின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை ஆகஸ்ட் 9 அன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போதாவது உணர்வோமா எதிர்கால அபாயத்தை?

மேம்பட்ட அறிவியல் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ஐபிசிசி-யின் இந்தப் புதிய அறிக்கை, அது கடந்த 30 ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ‘ஒட்டுமொத்தமாக மனிதச் செயல் பாடுகளே காலநிலை மாற்றத்துக்குக் காரணம்; பசுங்குடில் வாயு உமிழ்வை மிகப் பெரிய அளவில் குறைக்கவில்லை என்றால், 1.5 டிகிரி செல்சியஸ் அல்லது 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது என்பது கைமீறிச் சென்றுவிடும்’ என எச்சரிக்கிறது இந்த அறிக்கை. புவியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவதே, வளிமண்டலத்தில் கரியமில வாயு மேலும் சேர்வதைத் தடுக்கும். தற்போதைய நிலையில், பெருங்கடல்கள், நிலம், காடுகள் ஆகியவை இணைந்து வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயுவில் சுமார் 50 சதவிகிதத்தை உறிஞ்சுகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவால், இந்த அமைப்புகள் தங்கள் உறிஞ்சும் திறனை இழந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலை தொடரும்பட்சத்தில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸையும் தாண்டி மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும்.

அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான நாடுகள், உமிழ்வைக் கட்டுப்படுத்தி, இந்த நூற்றாண்டின் மத்தியில் பூஜ்ய அளவை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்திருக்கின்றன. இந்தியா அப்படியான இலக்கு எதுவும் இதுவரை நிர்ணயிக்கவில்லை. இந்தியாவின் இடம் இதில் என்ன என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த ஆண்டு கோவிட்-19 பரவலின்போது நடை முறைப்படுத்தப் பட்ட கடுமையான பொதுமுடக்கத்தின் பாதிப்பு களிலிருந்தே இந்தியா இன்னும் மீண்டிருக்கவில்லை. 3 கோடிப் பேர் நடுத்தர வர்க்கத்திலிருந்து கீழிறங்கி யிருக்கிறார்கள்; 7.5 கோடிப் பேர் ஏழ்மையில் வீழ்ந்துள்ளார்கள். ஏற்கெனவே அதிதீவிர புயல்கள், வெள்ளங்கள், வறட்சிகள், வெப்ப அலைகள் என காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படும் நிகழ்வுகள் இந்தியாவில் வலுப்பெறத் தொடங்கிவிட்டன. சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் கடற்கரை நகரங்கள் கடல்மட்ட உயர்வினால் மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கிறது; இதனால், 2.86 கோடிப் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கை அச்சம் தெரிவிக்கிறது.

த.வி.வெங்கடேஸ்வரன்
த.வி.வெங்கடேஸ்வரன்
எஸ்.ஜனகராஜன்
எஸ்.ஜனகராஜன்

“இதுவரை வெளியான ஐபிசிசி அறிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இந்தியாவின் காலநிலை குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்ட Assessment of Climate Change Over the Indian Region: A Report of the Ministry of Earth Sciences என்ற அறிக்கை, இந்தியாவின் கரியமில வாயு உமிழ்வு, மழைப்பொழிவு, பருவமழைக் கால அமைப்பில் மாறுதல், வேளாண்மையில் அது ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் எனப் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பேசுகிறது. ஐபிசிசி அறிக்கையுடன் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ அமைப்பின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

“தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள் இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைக் கவனப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் சார்ந்த மிக மிக அடிப்படை விஷயங்களே மக்களிடம் இன்னும் சென்று சேரவில்லை; புயல், மழை, வெள்ளத்தின்போது மட்டும் இதைப் பற்றிப் பேசி எந்தப் பலனும் இல்லை. தொடர்ச்சியாக இதுகுறித்துப் பேசும்போதுதான் மக்கள் கவனிக்கத் தொடங்குவார்கள். அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும்” என்கிறார், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஜனகராஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism