`இந்தக் கிளி பேசுறதைப் பாருங்களேன்', `அட, இந்த மைனா பேசுதே' - இதுபோன்ற தலைப்புகளுடன் சில வீடியோக்கள் அடிக்கடி வாட்ஸ் அப்பில் ஃபார்வர்டு ஆகிக்கொண்டிருக்கும். சமீபத்தில்கூட, மைனா ஒன்று `அக்கா' என்று பேசுவதையும், அதை வளர்க்கும் குடும்பத்தினர் சிரிப்பதையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் உலவ விட்டிருந்தார்கள். உண்மையிலேயே பறவைகள் பேசுமா? பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தி வருகிற பறவைகள் ஆர்வலர் முனைவர் த.முருகவேளிடம் கேட்டோம்.

``கிளி, மைனா, கரிச்சான் குருவி என்றழைக்கப்படுகிற இரட்டை வால் குருவி, ஆள்காட்டி பறவை, அக்கா குருவி என்று சில பறவைகளை மக்கள் பேசும் பறவைகள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்தப் பறவைகள் பேசுவதில்லை. மைனாவுக்கு சில வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தால், அது அந்த வார்த்தைகளை அப்படியே தன் குரலில் மிமிக்ரி செய்யும். அதை நாம், நம்முடைய வார்த்தைகளுடன் அதைப் பொருத்திப் பார்த்துக்கொள்கிறோம். அதன் காரணமாகவே, அது கேட்பதற்கு நாம் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளைப் போலவே நமக்குக் கேட்கும். இதைத்தான் நாம் 'கிளி பேசுது; மைனா பேசுது' என்று சொல்லி விடுகிறோம் அல்லது நம்பிவிடுகிறோம்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? கரிச்சான் குருவி, வல்லூறு உட்பட கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பறவைகளின் சத்தத்தை அப்படியே தன் குரலில் மிமிக்ரி செய்யும். கரிச்சான் குருவிக்கு யாரும் பேச சொல்லிக் கொடுப்பதில்லையே...'' என்றவர், இன்னும் சில பறவைகள் குறித்த இன்ட்ரஸ்டிங்கான தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.
``நம் ஊரில் ஆள்காட்டி குருவி என்றொரு பறவை இருக்கிறது. அது இருக்கும் பகுதியில் பறவைகளை வேட்டையாடும் எதிரிகளோ அல்லது மனிதர்களோ நுழைந்துவிட்டால், உடனே ஒலியெழுப்பி மற்ற பறவைகளுக்குத் தகவல் சொல்லிவிடும். அதனாலேயே அதை ஆள்காட்டிப் பறவை என்று அழைக்கிறோம். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருக்கும்போது இந்தப் பறவையை 'did u do it bird' என்று அழைத்திருக்கிறார்கள்.

காரணம் என்ன தெரியுமா? அதனுடைய கி... கி கீ க்... குரல் did u do it என்பது போலவே கேட்கும் என்பதால்தான். கூகுளில் ஆள்காட்டிக் குருவியின் குரலைக் கேட்டீர்களென்றால், `அட... ஆமாம்' என்போம். இதேபோல அக்கா குருவியையும் 'brain fever bird' என்று அழைப்பார்கள். காரணம், இந்தக் குருவியின் சத்தம் பிரெய்ன் ஃபீவர்... பிரெய்ன் ஃபீவர்... என்று சொல்வதுபோலவே நமக்குக் கேட்கும். கடவுளை நாம் பார்த்ததில்லை. ஆனால், கடவுளுக்கு மனித முகம்தானே கொடுத்திருக்கிறோம். அப்படி எல்லாவற்றையும் மனித கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகிவிட்டதால், பறவைகள் எழுப்பும் ஒலிகளும் நாம் பேசும் வார்த்தைகள் போலவே நமக்குக் கேட்கின்றன'' என்று சொல்லி முடித்தார் முருகவேள்.