Published:Updated:

`இது நம்ம ஊர் வெட்டுக்கிளிதான்; பயப்பட வேண்டாம்!’ -கிருஷ்ணகிரியில் ஆய்வு நடத்திய வேளாண் அதிகாரிகள்

வெட்டுக்கிளிகளைப் பார்வையிட்ட வேளாண் அதிகாரிகள்
வெட்டுக்கிளிகளைப் பார்வையிட்ட வேளாண் அதிகாரிகள்

இந்த வெட்டுக்கிளிகள் எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. 200, 300 வெட்டுக்கிளிகள் இருந்தன. அடுத்தடுத்து செடிகளை சாப்பிட்டுவிட்டு நகர்ந்துகொண்டே இருந்தன.

இந்தியாவின் பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பெருந்திரளாகப் படையெடுத்து உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசப்படுத்திவருகின்றன. இந்த நிலையில், கிருஷ்ணகிரியிலும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்துள்ளதாகத் தகவல் பரவியதால், தமிழக விவசாயிகளிடம் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த நேரலகிரி கிராமத்தில்தான் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளை அப்பகுதி மக்கள் நேற்று பார்த்துள்ளனர். இந்தக் கிராமம், கர்நாடக மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ளது. எனவே, ‘கர்நாடகாவிலிருந்து வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்திருக்கலாம்’ என்று அச்சமடைந்த மக்கள் உடனடியாக வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ முருகனுக்குத் தகவல் கொடுத்தனர்.

ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பிரபாகர்
ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பிரபாகர்

நேற்று மாலையே அந்த கிராமத்திற்குச் சென்ற எம்.எல்.ஏ முருகன், எருக்கன் செடிகளில் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருப்பதை உறுதி செய்துகொண்டு மாவட்ட கலெக்டர் பிரபாகருக்குத் தகவல் தெரிவித்தார். அதையடுத்து, இன்று காலை கலெக்டர் தலைமையில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேரலகிரி கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு, ‘‘இவை பாலைவன வெட்டுக்கிளிகள் கிடையாது. நம்ம ஊரில் வழக்கமாக இருக்கும் சாதாரண வெட்டுக்கிளிகளின் வகைதான். விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்’’ என்று வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டுச் சென்றனர்.

வெட்டுக்கிளி படையெடுப்பு... அழிவுக்கான ஆதாரமா? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ முருகனிடம், இதுதொடர்பாகக் கேட்டோம். ‘‘இந்த வெட்டுக்கிளிகள் எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. 200, 300 வெட்டுக்கிளிகள் இருந்தன. அடுத்தடுத்து செடிகளை சாப்பிட்டுவிட்டு நகர்ந்துகொண்டே இருந்தன. படையெடுத்துவரும் வெட்டுக்கிளிகள் மாதிரியும் தெரியவில்லை. படையெடுக்கும் வெட்டுக்கிளிகளின் நிறம் வேறு மாதிரி இருந்தன. இது, சாதாரண வெட்டுக்கிளிகள் என்று வேளாண் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், இதுகூட அதிகமான உற்பத்தியைப் பெருக்குமாம். சாதாரணப் பூச்சிக்கொல்லி மருந்துக்கு இந்த வெட்டுக்கிளிகள் சாகவில்லை. கொஞ்சம் தீவிரம் உள்ள மருந்தினைத் தெளித்த பிறகே இந்த வெட்டுக்கிளிகள் மயங்கி விழுந்தன’’ என்றார்.

வெட்டுக்கிளிகளைப் பார்வையிட்ட வேளாண் அதிகாரிகள்
வெட்டுக்கிளிகளைப் பார்வையிட்ட வேளாண் அதிகாரிகள்

வேளாண் இணை இயக்குநர் ராஜசேகரிடம் பேசினோம். ‘‘இந்த வெட்டுக்கிளிகளால் விவசாயப் பயிர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. இவ்வகை வெட்டுக்கிளிகளைக் கோடைக்காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் காணலாம். இந்த வெட்டுக்கிளிகள் எருக்கன் செடி போன்ற பால் சுரக்கும் செடிகளில் மட்டுமே அமர்ந்திருக்கும். மேலும், வடமாநிலங்களில் பயிர்களைத் தாக்கக் கூடிய பாலைவன வெட்டுக்கிளிகள் இவை கிடையாது. இந்த வகை வெட்டுக்கிளிகளைச் சாதாரணத் தண்ணீரில் வேப்பம் எண்ணெய்யைக் கலந்து தெளித்தால் கட்டுப்படுத்தி விடலாம். இவை விவசாயப் பயிர்களை தாக்காது என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார் விளக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு