Published:Updated:

`காற்று மாசு... போயே போச்சு...'; ஊரடங்கு கொடுத்த பரிசு! -பசுமை மண்டலங்களான டெல்லி, மும்பை

Mumbai
Mumbai

சில மாதங்களுக்கு முன்பு மாசுபாடு நிறைந்த பல இடங்கள் தற்போது பசுமை மண்டலங்களாக மாறியிருக்கின்றன.

கொரோனா தொற்று மிகப்பெரிய பேரிடர். அதே நேரம், இந்தப் பேரிடர் காலத்தில் இயற்கையில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் ஆச்சர்யமளிக்கின்றன. மனிதர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ள இயற்கை செய்துகொண்ட ஏற்பாடாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் காற்று மாசு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு காற்று மாசினால் பெரும் சிக்கலுக்கு உள்ளான தலைநகர் டெல்லியில் தற்போது காற்று மாசு குறைந்திருக்கிறது. டெல்லிக்கு அடுத்த இடத்திலிருந்த மும்பையிலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

சென்னை காற்று மாசு
சென்னை காற்று மாசு

ஊரடங்கு காலத்துக்கு முன், ஊரடங்கு காலத்துக்குப் பின் என இரண்டு விதமான காலகட்டத்தின் `மும்பை, டெல்லி மாநகரங்களின் காற்று மாசுபாடு அளவை ஒப்பிடும்போது, ஊரடங்கு காலத்தில், டெல்லியில் காற்றில் நுண்துகள்களின் அளவு, பி.எம் 2.5, 36 சதவிகிதமும், பி.எம் 10ன் அளவு 43 சதவிகிதம் மற்றும் NO2 அளவு 52 சதவிகிதம் குறைந்துள்ளது. மும்பையில் பி.எம். 2.5 ன் அளவு 39%, பி.எம் 10 ன் அளவு 43%, NO2 அளவு63 % குறைந்திருக்கிறது' என்கிறது மத்திய காற்று தர வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கை.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தனது அறிக்கையில், ஊரடங்கு காலகட்டத்துக்கு முன்பு இருந்ததைவிட, ஊரடங்கு காலகட்டத்தில் பி.எம் 2.5 செறிவுகளில் 46% குறைவு மற்றும் பி.எம் 10 செறிவுகளில் 50% குறைந்திருப்பதாக அறிவித்துள்ளது.

Mumbai
Mumbai

மேலும், மும்பை, டெல்லி ஆகிய இரண்டு மாநகரங்களில் 12-க்கும் மேற்பட்ட மாசுபாடான இடங்கள், தற்போது பசுமை மண்டலங்களாக மாறியிருக்கின்றன. குறிப்பாக டெல்லியில், மாசுபடுத்தும் இடங்களாக இருந்த 8 இடங்கள், இப்போது பசுமை மண்டலங்களாக மாறிவிட்டன என்கிறார் மத்திய காற்று தர வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் குஃப்ரான் பேக்.

வினோபபுரி, ஆதர்ஷ் நகர், வசுந்தரா, சாஹிபாபாத், ஆசிரம சாலை, பஞ்சாபி பாக், ஓக்லா மற்றும் பதர்பூர் ஆகிய பகுதிகள் தான் அவை. மும்பை, வொர்லி, போரிவாலி மற்றும் பாண்டப் ஆகியவை மும்பை பெருநகரத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தூய்மையான காற்றைப் பதிவு செய்த பகுதிகளாக இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தப் பகுதிகள்தான் டெல்லியில் மாசுபாடான பகுதிகளாக இருந்தன.

காற்று மாசு
காற்று மாசு

தொழில்துறை செயல்பாடு, வாகனப் போக்குவரத்து இரண்டுக்கும் தடையிருப்பதால்தான் காற்று மாசுபாடு இவ்வளவு குறைந்திருக்கிறது என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். காற்றின் தரக் குறியீடு தற்போது `நல்ல’ அல்லது `திருப்திகரமான’ வகையில் இருக்கிறது எனக் காற்று தர வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு