Published:Updated:

`யானை வரும் பின்னே; எஸ்.எம்.எஸ் வரும் முன்னே..!’ யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தவிர்க்க புது யுக்தி

ஊருக்கு அருகில் உயரமான கம்பம் ஒன்று நடப்படும் இரவில் யானை நடமாட்டம் இருந்தால் உடனே கம்பத்தின் உச்சியில் உள்ள சிவப்பு விளக்கு எரியும்.

Early warning alarm system
Early warning alarm system ( Arun.K )

குடியிருப்பு அருகில் யானை நடமாட்டம் இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சோலார் மூலம் இயங்கும் கருவிகளுடன்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

elephant
elephant

கடந்த வாரம் எல்லமலைப்பகுதியில் காளி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார். இதேபோல கடந்த மாதம் பந்தலூர் மேங்கோ ரேஞ்ச் பகுதியைச் சேர்ந்த கருப்பையா அதிகாலை வீட்டிலிருந்து கழிவறைக்கு நடந்து செல்கையில் யானை தாக்கி பலியானார். இது போன்ற சம்பவங்கள் இன்று நேற்று அல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. மேலும், யானை மனித எதிர்கொள்ளல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணமே உள்ளன.

இந்திய அளவில் வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் நடைபெறும் இடங்களில் கூடலூர் முக்கிய பகுதியாக உள்ளது. வனப்பகுதிகள், பணப்பயிர் தோட்டங்கள், குடியிருப்புகள் நிறைந்த கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தமிழகத்திலேயே யானை மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளது. பணப்பயிர்களுக்காகப் பல ஏக்கர் பரப்பிலான வனப் பகுதிகளும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டுவிட்டன. உணவும் தண்ணீரும் தேடி காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் உலவுகின்றன‌.

Early warning alarm system
Early warning alarm system

உணவு தேடி ஊருக்குள் வரும் காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டுவதே வனத்துறையினரின் 24 மணி நேரப் பணியாக உள்ளது. எச்சரிக்கையுடன் இருந்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் யானை மனித எதிர்கொள்ளல் குறைந்தபாடில்லை. யானை தாக்கி மனிதர்கள் இறப்பதும் மனிதர்களால் யானைகள் இறப்பதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது யானை மனித எதிர்கொள்ளல்களை தவிர்க்கும் வகையில் சோலார் மூலம் இயங்கும் புதிய எச்சரிக்கை கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. குடியிருப்பு அருகில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் புகுந்தால் சமிக்ஞை மூலம் கம்பத்தில் உள்ள சிவப்பு விளக்கு எரியும் இதைப் பார்த்து யானை நடமாட்டம் உள்ளது என மக்கள் விழிப்புடன் இருக்க உதவும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து பிதர்காடு வனச்சரகர் மனோகரன் கூறுகையில், ``மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் கூடலூர் பிதர்காடு பந்தலூர் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் கம்பங்கள் பொருத்தி வருகிறோம். சோலார் மூலம் இயங்கும் இந்தக் கம்பத்தில் உள்ள எந்திரத்தில் சிம்கார்டு பொருத்தப்பட்டிருக்கும் இதில் வனத்துறை ஊழியர்கள் 10 பேரது மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஊருக்குள் யானை புகுந்தால் உடனே குறுஞ்செய்தி மூலம் சமிஞ்சை அனுப்பப்பட்டு கம்பத்தின் உச்சியில் உள்ள சிவப்பு விளக்கு எரியும். எனவே, மக்கள் எச்சரிக்கை அடைந்து வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பதன் மூலம் யானை மனிதன் எதிர்கொள்ளல்கள் தவிர்க்கப்படும்" என்றார்.

Early warning alarm system
Early warning alarm system

இதுகுறித்து பிதர்காடு பகுதியைச் சேர்ந்த வடிவேலன் கூறுகையில், ``பகல் நேரங்களில் வனப்பகுதிகளில் இருக்கும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு உணவு தேடி வருகின்றன. யானை இருப்பதை அறியாமல் பலரும் மாட்டிக் கொள்கின்றனர். தற்போது ஊருக்கு அருகில் 20 அடி உயரத்தில் கம்பங்களைப் பொருத்துகின்றனர். இந்தப் பகுதியில் யானை நடமாட்டம் இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும் எனத் தெரிவித்துள்ளனர். இது எங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.