Published:Updated:

வீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது? பதில் இதோ! #DoubtOfCommonman

தண்ணீர்
News
தண்ணீர்

கழிவுநீர் சுத்திகரிப்பு வீடுகளில் கடைப்பிடிக்கப்படும்போது பற்றாக்குறை காலங்களில் பல நன்மைகளை நாம் அடைய முடியும். அதுமட்டுமன்றி, நம் அன்றாட தண்ணீர்த் தேவையும் குறைகிறது.

Published:Updated:

வீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது? பதில் இதோ! #DoubtOfCommonman

கழிவுநீர் சுத்திகரிப்பு வீடுகளில் கடைப்பிடிக்கப்படும்போது பற்றாக்குறை காலங்களில் பல நன்மைகளை நாம் அடைய முடியும். அதுமட்டுமன்றி, நம் அன்றாட தண்ணீர்த் தேவையும் குறைகிறது.

தண்ணீர்
News
தண்ணீர்

வீட்டில் குடிநீரை எளிமையாகச் சுத்திகரிக்கும் வழிமுறைகள் என்ன, கழிவுநீரை எப்படிச் சுத்திகரித்துப் பயன்படுத்துவது என விகடனின் #DoubtOfCommonman பகுதியில் கேட்டிருந்தார் திருச்சி வாசகர் குமரேசன். அவருக்கான பதில் இதோ.

அனைத்துத் தட்டு மக்களும் குடிநீர் சுத்திகரிப்பு என்பதை எளிமையாகச் செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், குடிநீரைத் தவிர்த்து மற்றவற்றுக்கு நாம் பயன்படுத்தும் தண்ணீரைச் சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல பல எளிமையான தொழில்நுட்பங்கள் உள்ளன. தற்போது பல வீடுகளிலும் குடிக்கத்தக்க நீரையே அனைத்துக்கும் பயன்படுத்துகிறோம். வீட்டு வேலைகள், பாத்திரங்கள் கழுவுதல், வாகனங்களைக் கழுவுதல், தோட்டங்களுக்கு என்று அனைத்துக்கும் ஒரே நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் குடிநீருக்குக் கேன் வாங்கப்படுகிறதே தவிர மற்ற பகுதிகளில் குடிநீரும் தண்ணீரும் ஒன்றுதான்.

குடிநீர்
குடிநீர்

கேன் தண்ணீரைத் தவிர்த்துப் பொதுவாக அனைத்துப் பகுதிகளையும் வைத்துச் சிந்தித்துப் பார்த்தால், நாம் குடிக்கப் பயன்படுத்தும் அதே நீரைத்தான் கழிவறைகளிலும் பயன்படுத்துகிறோம். அத்தகைய சூழலை மாற்றி, நாம் பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். அந்த நீரைக் கழிவறைகளுக்கு, தோட்டங்களுக்கு என்று பயன்படுத்தலாம். அதற்கான செயல்முறைகள் நாம் எந்த மாதிரியான நில அமைப்பில் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்து மாறுபடும். நகர்ப்புற வீடுகளைப் பொறுத்தவரை மையப்படுத்தப்பட்ட கழிவுநீர் மேலாண்மைதான் கையாளப்படுகிறது. ஆனால், கிராமப்புற வீடுகளில் கழிவுநீர் எங்கு உற்பத்தியாகிறதோ அங்கேயே அது கையாளவும் படுகிறது. நீங்கள் தங்கியிருப்பது நகர்ப்புறங்களிலா கிராமப்புறங்களிலா என்பதைப் பொறுத்து அங்கு என்ன மாதிரியான கழிவுநீர் மேலாண்மை முறை கையாளப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக, நம் வீட்டில் இரண்டு விதமான கழிவுநீர் உற்பத்தியாகும்.

ஒன்று, பழுப்பு நீர். நம் வீட்டின் சமையல் கழிவுகள், தோட்டக்கழிவுகள் போன்றவற்றைச் சுமந்துவரும் நீர்.

இரண்டாவது, கறுப்பு நீர். கழிவறைகளிலிருந்தும் குளியலறையிலிருந்தும் வெளியாகும் கழிவுகளைச் சுமந்துவரும் நீர். இது முதலாவதிலிருந்து வேறுபட்டது. இதில் நோய்க்கிருமிகளும் அடங்கியிருக்கும். இது அதைவிடச் சற்றுக் கூடுதல் கவனத்தோடு சுத்திகரிக்கப்பட வேண்டும்.

இரண்டுமே தனித்தனியாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும். இதில் சுத்திகரிக்கப்பட்ட பழுப்பு நீரைத் தோட்ட வேலைகளுக்கு, வாகனங்கள் கழுவுவதற்கு, துணி துவைப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு என்று சமையல் தவிர இதர வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.

கறுப்பு நீரை உயிரியல் மற்றும் வேதியல் சுத்திகரிப்புக்கு ஆட்படுத்த வேண்டும். அதன் பிறகுதான் அதைப் பயன்படுத்த முடியும். கறுப்பு நீரைச் சுத்திகரிக்கும் செயல்முறைகளுக்குக் கொஞ்சம் செலவு பிடிக்கும். அதைவிட, ஆரம்பகட்டத்தில் பழுப்பு நீரை மட்டும் சுத்திகரிப்பு செய்யத் தொடங்கலாம். அதற்கு ஆகும் செலவும் அதன் செய்முறையும் கறுப்பு நீர் சுத்திகரிப்பு முறையைவிட எளிமையானதுதான்.

பழுப்பு நீரைச் சுத்திகரிக்கும் முறை:

1. வீட்டில் தாவரங்களை வைத்துச் சுத்திகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்

வீட்டைச் சுற்றியிருக்கும் பயன்படுத்தப்படாத நிலத்தில் நாணல் புற்கள், வாழை மற்றும் இதர உள்நாட்டுச் செடிகளை வைத்துச் சிறிய தோட்டத்தைத் தயாரிக்கலாம். அந்தத் தோட்டத்துக்கும் கீழே நிலத்துக்கு அடியில் நீர் சேகரிக்கும் தொட்டி ஒன்றை அமைத்து வைக்க வேண்டும். மிதமான சூரிய வெளிச்சத்தில் செடிகள் இருக்குமாறு அமைக்க வேண்டும். அதோடு, அவற்றின் வேர்கள் நிலைகொள்ளத் தேவையான மூன்று வார அவகாசத்தை அவற்றுக்குக் கொடுத்துவிட்டுப் பொறுமை காக்க வேண்டும்.

கறுப்பு நீர்
கறுப்பு நீர்

2. வெளியாகும் பழுப்பு நீர் அனைத்தையும் சேகரிக்க வேண்டும்

இப்போது, பழுப்பு நீர் எங்கெல்லாம் வெளியாகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, வீட்டில் கழிவு நீர் வெளியாகும் குழாய்வழித்தடங்களைக் குறிப்பெடுக்க வேண்டும். உதாரணத்துக்குக் குளியலறை, துணி துவைக்கும் இயந்திரம், சமையலறை போன்றவற்றிலிருந்து நீர் வெளியாகும் இடங்களைக் கவனியுங்கள். பெரும்பாலான வீடுகளில் இந்தக் கழிவுநீர் அனைத்தும் நேரடியாகச் செப்டிக் டேங்கில் சென்று சேரும்படிதான் அமைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து அதைத் திசைதிருப்பக் குழாய்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்படும் குழாய்கள் நேரடியாக ஒரே தொட்டியில் பழுப்பு நீர் மொத்தத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் வகையில் அமைக்க வேண்டும். அந்தத் தொட்டியில் சேகரிக்கப்படும் நீரில் சோப்பு, சலவைக்குப் பயன்படும் வேதிமப் பொருள்கள், கழிவுகள் என்று பலவும் கலந்திருக்கும். அவற்றைச் சுத்திகரிக்கப் படிகங்கள் (Alum), பிளீச்சுகள் (Bleach) போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். ஆனால், அனைத்துக் குழாய்களிலிருந்தும் இந்தத் தொட்டிக்குக் கொண்டுவந்து சேகரிக்கப்படும் நீரை ஒன்றிரண்டு நாள்களுக்குள் அடுத்த சுத்திகரிப்புச் செயல்முறைக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும். இல்லையென்றால் இதுவும் கறுப்பு நீரைப்போல் மாறிவிடும்.

அதன் பிறகு, பழுப்பு நீரைச் சேகரித்து அடிப்படைச் சுத்திகரிப்பைச் செய்து வைத்திருக்கும் தொட்டியிலிருந்து தண்ணீரை ஏற்கெனவே அமைத்துவிட்ட நீர் சுத்திகரிப்புத் தோட்டத்துக்கு அனுப்புங்கள். தாவரத்திலும் மண்ணிலும் இருக்கும் நுண்கிருமிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு நீரைச் சுத்திகரிப்பதில் பங்கு வகிக்கும். தாவர வேர்களும் மண்ணும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அங்கு பாயும் பழுப்பு நீரிலிருந்து கழிவுகளை வடிகட்டிக் கீழே அனுப்பிக்கொண்டிருக்கும். அப்படி வடிகட்டி அனுப்பப்படும் நீர், கீழே வைக்கப்பட்டிருக்கும் நிலத்தடித் தொட்டியில் சேகரிக்கப்படும். அதை அப்படியே நிலத்தடி நீர் மீள்நிரப்புக்குப் பயன்படுத்திவிட்டு அருகிலேயே கிணறு ஒன்றை வெட்டி அங்கிருந்து நீர் எடுத்துப் பயன்படுத்தலாம். அதுவே மேலும் அதிகமான சுத்திகரிப்பை இயற்கையாகச் செய்து நிலத்தடி நீராகச் சேமித்து வைத்துக்கொள்ளும். கிணற்று நீராகப் பின்னர் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை, கிணறு வெட்டுவதற்கான இட வசதி இல்லையென்றால் நிலத்தடித் தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீரை மீண்டும் மேலே கொண்டு வர வேண்டும்.

தாவரங்கள்
தாவரங்கள்

3. பராமரித்து, இறுதிச் சுத்திகரிப்பு முறையைச் செய்து பயன்படுத்த வேண்டும்

இந்தச் செயல்முறையில் தோட்ட அமைப்பு மூலமாகத் தாவரங்களின் உதவியுடன் தண்ணீர் வடிகட்டப்படுவதால், நீர் தேங்கி நிற்க வேண்டிய அவசியம் கிடையாது. அதனால், கொசுக்கள் உற்பத்தியாகும் என்ற அச்சமில்லை. இருந்தாலும் முறையான பராமரிப்பு இங்கு மிக முக்கியம். தாவரங்கள் அடிக்கடி மாற்றப்பட வேண்டும். அழுகும் தாவரங்களை அப்படியே விட்டுவைக்கக் கூடாது. செடிகளைச் சுற்றி மண் திட்டுகள் உருவாவதை அவ்வப்போது சரி செய்ய வேண்டும். இல்லையேல் அந்தப் பரப்பு முழுவதும் இருக்கும் நீரின் சீரான ஓட்டம் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே தேங்கத் தொடங்கிவிடும்.

இப்படி முறையாகப் பராமரிக்கப்படும் அமைப்பில் வடிகட்டப்பட்டு மீண்டும் மேலே கொண்டுவரும் வடிகட்டப்பட்ட தண்ணீரை மற்றுமொரு தொட்டிக்கு அனுப்ப வேண்டும். தொட்டியின் மேல் பகுதியில் சரளைக்கற்கள், கூழாங்கற்கள், மரக்கரி போன்றவற்றைக் கொண்ட சில அடுக்குகளை அமைக்க வேண்டும். அவை அடுத்தகட்ட சுத்திகரிப்பைச் செய்து பயன்படுத்தத்தக்க தண்ணீரைக் கீழேயிருக்கும் தொட்டிக்கு அனுப்பிவிடும். இப்போது, சுத்திகரிக்கப்பட்ட நீரை எடுத்து நீங்கள் வாகனங்கள் கழுவ, வீட்டைச் சுத்தம் செய்ய, கழிவறைகளில் பயன்படுத்த, வீட்டில் போட்டிருக்கும் காய்கறித் தோட்டத்துக்கு, மாடித் தோட்டத்துக்கு என்று பயன்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட பழுப்பு நீரைக் காய்கறி வளர்ப்பில் பயன்படுத்துவதால் எந்தவிதப் பிரச்னையும் வராது. இன்னும் சொல்லப்போனால், இந்த நீர் அவற்றின் வளர்ச்சிக்கு உகந்ததாகத்தான் இதுவரை இருப்பதாகச் சில ஆய்வுகள் சொல்கின்றன.

மொத்த வீட்டுப் பயன்பாட்டில் பங்கு வகிக்கும் தண்ணீரின் அளவு நாளொன்றுக்கு சராசரியாக 920 லிட்டர் என்றால் அதில் 70% நீர் சமையல், குளியல் மற்றும் துணி துவைக்கவே பயன்படுகிறது. இந்த 70 சதவிகிதமும் பழுப்பு நீராக உற்பத்தியாகிறது, மீதி 30 சதவிகிதம்தான் கறுப்பு நீராகச் செல்கிறது.
2011-ம் ஆண்டில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் (Centre for Science and Environment) என்ற அமைப்பு செய்த ஆய்வின் முடிவு.

ஆக, இந்தப் பழுப்பு நீர் சுத்திகரிப்பு முறையே பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான தண்ணீரை மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிடுகிறது. இதன்மூலமே நாம் பெருமளவில் நீர் சேமிப்பில் ஈடுபடலாம். இதைச் செய்யாமல் இருப்பதால், நம்மால் உருவாக்கவே முடியாத தண்ணீர் என்ற அரிய வளத்தைக் கறுப்பு நீரோடு சேர்த்துக் கழிவாக அனுப்பிவிட்டுத் தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கிறோம்.

இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் சில இந்திய நகரங்கள் ஆரோக்கியமான முன்னேற்றத்தைச் சந்தித்து வருகின்றன. பெங்களூரில் 500 குடும்பங்கள் இதைப் பின்பற்றத் தொடங்கியபின் அந்தக் குடியிருப்புகளின் நீர்த் தேவையில் 70 சதவிகிதம் குறைந்துவிட்டது. அந்தக் குடும்பங்கள் நீரியல் ரீதியாக மட்டுமன்றிப் பொருளாதார ரீதியாகவும் செலவுகள் குறைந்ததால் சுமார் 10 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளனர். இதனால், அங்கு நிலவி வந்த நிலத்தடி நீர்ச் சுரண்டலும் குறைந்துள்ளது.

காய்கறிகள்
காய்கறிகள்
Pixabay

பழுப்பு நீர் சுத்திகரிப்பு, சுற்றுச்சூழலுக்குப் பல வகைகளில் பயனளிக்கிறது. அதோடு பற்றாக்குறை நிலவும் காலங்களில்கூட இதுபோன்ற முயற்சிகள் நமக்குப் பல இன்னல்களைத் தீர்த்து வைக்கின்றன. உலகின் நன்னீர் இருப்பு குறைந்துகொண்டே வரும் சூழலில் நாம் இதுபோன்ற முயற்சிகளைக் கையாளுவது அந்த நன்னீர் இருப்பை அதிகப்படுத்த மட்டுமன்றி மக்களை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றவும் வழி செய்யும்.

#DoubtOfCommonman
#DoubtOfCommonman