Published:Updated:

முன்பு யானை, இப்போது சிறுத்தை... நீலகிரியில் தொடரும் சோகம்!

elephant
elephant

பந்தலூர் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தையும் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானையும் இறந்து கிடந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, சிறிய ஓடையின் அருகில் யானை ஒன்று இறந்துகிடப்பதைப் பார்த்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கால்நடை மருத்துவர்களுடன்‌ சென்ற வனத்துறையினர் இறந்த யானையின் உடலைக் கூறாய்வு செய்தனர். இதில் இறந்தது பெண் யானை என்றும் சுமார் 15 வயது இருக்கலாம் என்றும் உறுதி செய்தனர்.

மரணித்த யானை
மரணித்த யானை

யானையின் இறப்பு குறித்து வனத்துறையினர், "கக்கநல்லா பீட் தொட்டக்கட்டி பகுதியில் வந்த யானை கீழே விழுந்து உயிரிழந்திருக்கக்கூடும். யானையின் உடல் பாகங்கள் சிலவற்றை புலி உண்டு சென்றதற்கான அடையாளங்களும் தென் படுகின்றன. கூறாய்வு முடிவுகளுக்குப் பின்னரே, இறப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும்" என்றனர்.

இதைத் தொடர்ந்து பந்தலூர் அருகிலுள்ள சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாகக் கூடலூர் வனத்துறையினருக்கு இன்று காலை தகவல் வந்தது.

நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள், ஆய்வு மேற்கொண்டனர். இறந்தது சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். சிறுத்தையின்‌ உடலைக் கூறாய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பந்தலூர் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தையும், முதுமலை புலிகள் காப்பகத்தில் யானையும் இறந்துக்கிடந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை
சிறுத்தை

முதுமலை பொக்காபுரம் பகுதியில் கடந்த வாரம் 5 செந்நாய்கள் உடலில் எந்தக் காயமும் இன்றி மர்மமான முறையில் பரிதாபமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷமேறிய இறைச்சியைச் சாப்பிட்டு இவை இறந்திருக்கலாம் என வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 -ம் தேதி, நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துறை கரளிக்கண்டி பகுதியில் உள்ள ஒரு நீரோடையில் பின்னங்காலில் தோட்டா துளைத்த காயத்துடன் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள யானை மற்றும் சிறுத்தையின் மரணம் காட்டுயிர் ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு