Published:Updated:

`குட்டி இறந்ததை அறியாத தாய் யானை!' -பந்தலூர் வனப்பகுதியில் நடந்த 3 நாள் பாசப் போராட்டம்

பந்தலூர் அருகே பள்ளத்தில் தவறிவிழுந்த குட்டி யானையை மீட்கச் சென்ற வனத்துறையின் வாகனத்தைச் சேதப்படுத்தி கடந்த மூன்று நாள்களாகத் தாய் யானை பாசப் போராட்டம் நடத்தி வந்தது.

இறந்த குட்டி யானை
இறந்த குட்டி யானை

நீலகிரி மாவட்டம், பந்தலூர் நாயக்கன் சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7 யானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று உலா வந்தன. கடந்த 26-ம் தேதி இரவு நாயக்கன் சோலைப் பகுதியில் இந்த யானைக்கூட்டம் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்தக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்தது.

இறந்த குட்டி யானை
இறந்த குட்டி யானை

தவறிவிழுந்த குட்டியை மீட்கத் தாய் யானை மற்றும் கூட்டத்திலிருந்த சில யானைகள் முயன்றும் பலனளிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகக் குட்டி யானை உயிரிழந்தது. இதை அறியாமல் தாய் யானை உட்பட சில யானைகள் குட்டியைக் காட்டுக்குள் அழைத்துச் செல்ல பலமணி நேரமாகப் போராடின. காலால் உதைத்தும் தும்பிக்கையால் தூக்க முயன்றும் பிளிறல் சத்தங்களை எழுப்பியும் முயற்சி செய்தன.

வழக்கத்துக்கு மாறான பிளிறல் சத்தத்தைக் கேட்ட ஊர்மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் இறந்த குட்டி யானையின் அருகில் தாய் யானை நின்று கொண்டிருப்பதைப் பார்த்தனர். தாய் யானையை விரட்டிவிட்டு குட்டியைக் கயிறுகட்டி டிராக்டர் வாகனம் மூலம் இழுக்க முயற்சி செய்தனர்.

பாசப்போராட்டம் நடத்திய தாய் யானை
பாசப்போராட்டம் நடத்திய தாய் யானை

இதனால் ஆத்திரமடைந்த தாய் யானை வனத்துறையினரின் இரண்டு வாகனங்கள் மற்றும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் உட்பட எட்டு வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தியது. மேலும், அருகில் இருந்த கோயிலையும் ஆவேசத்தில் யானைகள் கூட்டம் தாக்கியது. இதைத் தொடர்ந்து, இறந்த குட்டி யானையின் அருகில் யாரையும் நெருங்கவிடாமல் மூன்று நாள்களாகப் பாசப் போராட்டம் நடத்தி வந்தது தாய் யானை. ஒருவழியாக நேற்று இரவு வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர்.

குட்டி இறந்து இருப்பதை தாய் யானை உணர்வதற்கு அரைநாள் தேவைப்படும். ஆனால், அதற்குள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டி அதன் கோபத்தைத் தூண்டியுள்ளனர்.
சூழல் ஆர்வலர்கள்

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், "இறந்த குட்டி யானைக்கு 1 வயது இருக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்துள்ளது. மேய்ச்சலுக்கு வந்த இடத்தில் பள்ளத்தில் தவறிவிழுந்து இறந்திருக்கக்கூடும். குட்டி இறந்ததை உணராத தாய் யானையும் மற்ற யானைகளும் எப்படியாவது குட்டியைக் காட்டுக்குள் கூட்டிச் செல்ல வேண்டும் என நினைத்து உணவு, தண்ணீர்கூட உட்கொள்ளாமல் மூன்று நாள்களாகப் போராடி வந்தன. இறுதியில், குட்டி இறந்திருப்பதை உணர்ந்துகொண்ட தாய் யானை தானாக விலகிச்சென்றுவிட்டது. அதன் பின்னரே, குட்டியை மீட்க முடிந்தது" என்றார் வேதனையான குரலில்.

கோயிலை சேதப்படுத்திய காட்டு யானை
கோயிலை சேதப்படுத்திய காட்டு யானை

காட்டுயிர் ஆர்வலர்கள் பேசுகையில், `` கூட்டத்தில் இருக்கும் ஒரு யானை இறந்தால் மற்ற யானைகள் எளிதில் விட்டுச் செல்லாது. முயன்று பார்த்து உணர்ந்த பின்னரே நகரும். குட்டி இறந்து இருப்பதை தாய் யானை உணர்வதற்கு அரைநாள் தேவைப்படும். ஆனால், அதற்குள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டி அதன் கோபத்தைத் தூண்டியுள்ளனர். அதனால்தான், மூன்று நாள்களாகத் தாய் யானை பாசப் போராட்டம் நடத்தியது" என்கின்றனர் கொதிப்புடன்.