Published:Updated:

தண்ணீர் குடிக்கச் சென்ற இரண்டு மாத குட்டி யானைக்கு நேர்ந்த சோகம்!

மாயார் அணைக்கு செல்லும் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து கிடந்த 2 மாத ஆண் குட்டி யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.

elephant calf found dead
elephant calf found dead

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவு காணப்படுகின்றன. அருகில் உள்ள மாயார் மற்றும் மாயார் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகளவு காட்டு யானைகள் உலவுகின்றன. இந்த யானைகள் முதுமலையில் இருந்து மாயார் வழியாக தெங்குமரஹாடா மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன.

elephant calf found dead
elephant calf found dead

முதுமலை யானைகளின் முக்கிய வழித்தடமாக இந்த பகுதி உள்ளதால், எப்போதும் இந்த இடங்களில் யானைகள் நடமாட்டம் காணப்படும். இந்த நிலையில் நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாயார் அணைக்கு செல்லும் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு மாயார் அணை நுழைவு வாயில் பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, அங்குச் சென்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அணையில் இருந்த குட்டி யானையை மீட்டனர்.

elephant calf found dead
elephant calf found dead

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது " இறந்தது இரண்டு மாதமே ஆன ஆண் குட்டி யானை எனத் தெரியவந்தது. தண்ணீர் குடிக்க சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம். நாளை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தனர்.

இது குறித்து காட்டுயிர் ஆய்வாளர்கள் கூறுகையில் "இந்த யானையின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நம் காடுகளில் ஆண் யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாகவே உள்ளது. ஆண் யானைகளின் இழப்பு வனத்துக்கு பேரிழப்பாகும்" என்றனர்