Published:Updated:

மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த யானை... விசாரணையில் இறங்கிய நெல்லை வனத்துறை!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை
மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சட்ட விரோதமான மின்வேலி அமைப்பதால் யானை உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன. மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்து வருகிறார்கள்.

கோவை: கைகொடுக்காத வனத்துறையின் முயற்சி! - காயத்துடன் சுற்றிய யானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு

வனப் பகுதியில் இருந்து விலங்குகள் விவசாய நிலத்துக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகச் சில விவசாயிகள் சட்ட விரோதமாக மின்சார வேலை அமைக்கும் ஆபத்தான செயலில் ஈடுபடுகிறார்கள்.

அபாயம் மிகுந்த மின்வேலிகளை அமைக்கக் கூடாது என வனத்துறையினர் பலமுறை எச்சரித்ததுடன், சில இடங்களில் அபராதமும் விதிக்கிறார்கள். ஆனால், அதை எல்லாம் மீறி திருட்டுத்தனமாக மின்வேலிகள் அமைக்கும் செயல்கள் தொடர்கதையாகி வருகின்றன.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி என்ற விவசாயி, மலையடி கிராமத்தில் உள்ள தனது வயலைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருக்கிறார்.

மின்சாரம் செலுத்தப்பட்ட மின்சார வேலியைக் கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் வனச் சரகர் பாரத் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

யானை
யானை

பின்னர், வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையில், கால்நடைத்துறை மருத்துவர்கள் அர்னால்ட், முத்துக்கிருஷ்ணன் அடங்கிய குழுவினர் அதே இடத்தில் யானையை உடற்கூறு ஆய்வு செய்து அங்கேயே உடலை அடக்கம் செய்தார்கள். இது தொடர்பாக விவசாயி செல்லகுட்டியிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு