சமீபத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம் நாடாளுமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களைக் கோரினார். ரயில்வே அமைச்சகம் அதற்கான தரவுகளை அளித்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில் மோதி 45 யானைகள் உயிரிழந்திருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 45 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. 2019 -ல் 10 யானைகளும், 2020-ல் 16 யானைகளும், 2021-ல் 19 யானைகளும் ரயில் மோதி உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அதில் தெற்கு ரயில்வேய்க்கு உட்பட்ட வழித்தடங்களில் மட்டும் மூன்று ஆண்டுகளில் 9 யானைகள் உயிரிழந்தது வேதனையின் உச்சம். ஆண்டுக்கு ஆண்டு ரயில் மோதி உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், ``ரயில்வே துறைக்கு காடுகளைப் பற்றியும், யானைகளைப் பற்றியும் அக்கறை இருக்க வேண்டும். ரயில்களை இயக்குவது தான் தன் வேலை காடுகள் தன் துறைக்கு கீழ் வரவில்லை என்று எண்ணுவது தவறு" என்றார்.

கோவையில் நிகழ்ந்த யானைகளின் உயிரிழப்பு பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அத்தகவல் நம்மை பேரதிர்ச்சிக் குள்ளாக்கியது. கோவையின் புறநகர் பகுதியான எட்டிமடை, வாளையாறு, கஞ்சிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் 30 யானைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறினார். இதுகுறித்து மேலும் கேட்டபொழுது, அப்பகுதியில் இரவு நேரங்களில்தான் பெரும்பாலான யானைகளின் உயிரிழப்பு நிகழ்வதாகத் தெரிவித்தார்.
இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன?
பிரச்னைகளை சுட்டிக்காட்டிய பாண்டியராஜன் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார். ``அப்பகுதியில், யானைகளின் உடல் வெப்பத்தை அறிந்து யானைகளின் நடமாட்டத்தைத் தெரிவிக்கும் கேமராக்களை (thermal sensing camera) ரயில் வழித்தடங்களில் பொருத்த வேண்டும்.

அதற்கான கட்டுப்பாட்டு அறையை வாளையாறு ரயில் நிலையத்தில் அமைக்க வேண்டும். அதன் மூலம் ரயில் மோதி உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம், அதே சமயம் இது ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் இருக்கும். அந்தக் குறிப்பிட்ட ரயில் வழித்தடங்களை உயர்மட்ட ரயில்வே பாதையாக மாற்றியமைப்பதே நிரந்தர தீர்வாக அமையும்!
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது ரயில்வே துறையின் பிரச்னை என்று வனத்துறை ஒதுங்கிவிட முடியாது. காடுகளும் வன விலங்குகளும் நம் நாட்டின் வளங்கள். அவற்றைப் பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்'' என்று அக்கறையுடன் தெரிவித்தார்.
- மாணவப் பத்திரிகையாளர்: நீலம் இளமுருகு. ந