Published:Updated:

`பிட்காயின்களை இனி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!' - எலான் மஸ்க் சொல்லும் சூழலியல் காரணம் சரியா?

க்ரிப்டோ கரன்சி மீது அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும்கூட, எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய க்ரிப்டோ கரன்சியான பிட்காயினை நிராகரித்துள்ளார்.

எலான் மஸ்க் கடந்த வாரம், டெஸ்லா வாகனங்களின் விற்பனையில் பிட்காயின்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். அவருடைய ட்வீட்டில், ``காலநிலை பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, டெஸ்லா நிறுவனம் இனி பிட்காயின்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், ``பிட்காயின் மைனிங் செய்வதற்கும் பரிமாற்றிக் கொள்வதற்கும், அதிகளவில் புதைபடிம எரிபொருள் பயன்படுவது, குறிப்பாக ஆற்றல் உற்பத்தியில் நிலக்கரி பயன்படுவது, அதிக வாயு உமிழ்வுகளைச் செய்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

Elon musk
Elon musk
John Raoux

கடந்த பிப்ரவரி மாதம், எலான் மஸ்க் 1.5 பில்லியன் டாலர்களை பிட்காயினில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருந்ததோடு, தங்களுடைய கார்களை வாங்க பிட்காயின் மூலம் பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்து வருவதாகக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவருடைய இந்தத் திடீர் அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு பிட்காயின் மதிப்பிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. அதேநேரம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிட்காயின் உற்பத்தியில் நிகழும் கரிம வாயு உமிழ்வு குறித்தும் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிட்காயின் மைனிங் என்பது, ஒரு புதிய பிட்காயினை பல்வேறு நுட்பமான கணித புதிர்களைக் கையாள்வதன் மூலம் உருவாக்கும் செயல்முறையாகும். ஒரு பிட்காயினை உருவாக்க 72,000 ஜிகாவாட் மின்சாரம் தேவைப்படும். ஆகவே, இதைத் தயாரிப்பதற்கு மிகப்பெரிய அளவிலான மின்சாரமும் அதிக கட்டமைப்புகளும் தேவை. இதற்கான ஆற்றல் தேவைக்கு, பெரும்பாலும் நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையே நம்பியுள்ளனர். பிட்காயின் விலை உயரும்போது, அந்த விலைக்கேற்ற பிட்காயினை உற்பத்தி செய்வதற்கான ஆற்றல் தேவையும் அதிகரிக்கிறது.

Bitcoin Mining
Bitcoin Mining

நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தியை அதிகம் மேற்கொள்ளும், சீனாவில் அதிகளவிலான பிட்காயின் தயாரிக்கும் கட்டமைப்புகள் இருக்கின்றன. நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியான ஓர் ஆய்வின் படி, ஏப்ரல் 2020 வரையிலான கணக்குப்படி, உலகளவிலான பிட்காயின் தயாரிப்பில் சீனா 75% பங்கு வகித்திருப்பதாகக் கூறுகின்றது. குறிப்பாக, சீனாவில் குறைவான மின்சார விலையைக் கொண்ட ஊர்ப்புறங்கள் தான் பிட்காயின் தயாரிப்பதற்கான மையங்களாகவே செயல்படுகின்றன. அங்கிருக்கும் குறைவான மின்சார விலையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு பகுப்பாய்வு, பிட்காயின் தயாரிப்பதற்கு ஓராண்டுக்கு 120 Twh தேவைப்படுவதாகக் கூறுகிறது. இது, மலேசியா, ஸ்வீடன், அர்ஜென்டினா போன்ற நாடுகள் ஓராண்டில் மொத்தமாகப் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தின் அளவுக்குச் சமம். மேலும், ``பிட்காயின் உற்பத்தி மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால், உலகளவில் அதிக ஆற்றலை நுகரும் முதல் 30 நாடுகளில் ஒன்றாக அது இடம் பிடித்திருக்கும்" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுமட்டுமின்றி, டிஜிகானமிஸ்ட் என்ற அமைப்பு நடத்திய ஓர் ஆய்வின்படி, உலகளவில் செயல்படும் அனைத்து டேட்டா சென்டர்களும் பயன்படுத்துகின்ற ஆற்றலை பிட்காயின் நெட்வொர்க் ஒன்று மட்டும் பயன்படுத்துகிறது. அதோடு, லண்டன் அளவுக்கு இதன் கரிமத் தடங்கள் (carbon footprint) இருக்கின்றன என்பதும் தெரியவந்தது. பிட்காயின் உற்பத்தி மட்டுமே, தனியாக, அடுத்த 30 ஆண்டுகளில் புவியின் வெப்பநிலையை மேலும் 2 டிகிரி அதிகரிக்க வைக்கும் அளவுக்கு அதிகமான கரிம வாயுவை வெளியிடுகிறது. இதுமட்டுமன்றி, வழக்கமான ஒரு பிட்காயின் பரிமாற்றம் 680,000 விசா பரிமாற்றங்களுக்குச் செலவாகும் ஆற்றல் அல்லது 51,210 மணிநேரம் யூடியூப் பயன்படுத்த ஆகும் ஆற்றலுக்கு நிகராக இருக்கும்.

பிட்காயின்
பிட்காயின்

2018-ம் ஆண்டு ஒஹையோவிலுள்ள ஓக் ரிட்ஜ் நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வின்படி, ஒரு டாலர் மதிப்புள்ள பிட்காயினை தயாரிக்க 17 மெகாஜூல்ஸ் ஆற்றல் தேவைப்படுகிறது. அதாவது, தங்கம், பிளாடினம், காப்பர் போன்ற உலோகங்களில் ஒரு டாலரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஆற்றலைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான ஆற்றல் ஒரு டாலர் மதிப்பிலான பிட்காயினை தயாரிக்கச் செலவாகிறது. அதோடு, 2018-ம் ஆண்டு பிட்காயின் தயாரிக்கத் தேவைப்பட்ட கணினி ஆற்றலைவிட நான்கு மடங்கு அதிகத் திறன் வாய்ந்த கணினிகள் 2019-ம் ஆண்டு தேவைப்பட்டது. அதாவது ஒரே ஆண்டில், அதை உற்பத்தி செய்வதற்குத் தேவையான கணினி திறன், நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது.

இதுகுறித்துப் பேசிய பிட்காயின் தயாரிப்புக்கு ஆதரவான வழக்கறிஞர்கள்,  ``பிட்காயின் மிகவும் பாதுகாப்பான, தரமான உலகளாவிய பரிமாற்றத்தை உறுதி செய்கிறது. இதனால், அதற்கு அதிகம் செலவாகவும் செய்கிறது. அதோடு, கணினி மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள், டைப்ரைட்டர்கள் மற்றும் தந்திகளைவிட அதிகம் கரிமத் தடங்களைக் கொண்டுள்ளன. அதற்கு என்ன செய்வது? சிலநேரங்களில் ஒரு தொழில்நுட்பம் புரட்சிகரமானதாகவும் மனித இனத்துக்கு அவசியமானதாகவும் இருக்கும்போது அதைத் தவிர்க்க முடியாது" என்று கூறுகிறார்கள்.

ஆனால், எத்தீரியம் என்ற க்ரிப்டோ கரன்சியை உருவாக்குபவர்கள், ``வணிக அடிப்படையிலான ஒரு தொழில்நுட்ப மாற்றம் நிகழும்போது, அது சுற்றுச்சூழலில் சீர்கேடுகளைச் செய்தே ஆக வேண்டும் என்றில்லை. எத்தீரியம் என்ற க்ரிப்டோ கரன்சியை உருவாக்குவதை இயன்ற அளவுக்கு சுற்றுச்சூழலுக்குக் கேடில்லாத வகையில் செய்ய முடியும்" என்று கூறுகிறார்கள்.

Bitcoin
Bitcoin
எலான் மஸ்க் குறிப்பிட்ட `அஸ்பெர்கர் குறைபாடு' - சாதனையாளர்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

க்ரிப்டோ கரன்சி மீது அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும்கூட, எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய க்ரிப்டோ கரன்சியான பிட்காயினை நிராகரித்துள்ளார். அதோடு, பிட்காயின் பயன்படுத்தும் ஆற்றலில் ஒரு சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான ஆற்றலைப் பயனபடுத்தக்கூடிய க்ரிப்டோ கரன்சிகளையும் தேடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிட்காயின்களை உற்பத்தி செய்யும் கணினிகளுக்குத் தெரியாது ஆற்றல் எங்கிருந்து வருகிறதென்று. அதற்குத் தேவை மின்சாரம், அவ்வளவுதான். அந்த ஆற்றல், புதைபடிம எரிபொருள் மூலம் கிடைக்கிறதா அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கிடைக்கிறதா என்பதை, க்ரிப்டோ கரன்சியைத் தயாரிப்பவர்கள்தாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைச் செய்தால், நிச்சயம் பெரியளவிலான மாற்றத்தைச் சந்திக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு