பறவைசூழ் உலகு - 11
அரிவாள் மூக்கன் குடும்பத்தில் உள்ள இன்னொரு பறவை வெள்ளை அரிவாள் மூக்கன். இப்பறவைக்கு தலைக்கத்தி சுண்டன் என்ற வழங்கு பெயரும் உள்ளது. ஆங்கிலத்தில் இப்பறவையை Black-headed Ibis என்று சொல்வார்கள். இப்பறவையின் அறிவியல் பெயர் த்ரெஷ்கியார்னிஸ் மெலனோசெபாலஸ். வெண்ணிறப் பறவை. கறுப்பு நிற தலை மற்றும் கழுத்து முடியின்றிக் காணப்படும். கறுப்பு நிற கால்களைக் கொண்டிருக்கும். கறுமை நிற கனத்த அலகு கீழ் நோக்கி வளைந்திருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் சாம்பல் நிற மென்தூவி இறகுகள் வால் பகுதியில் காணப்படும். பறக்கின்றபோதும் இறக்கைகளை விரிக்கின்ற போதும் இறக்கைகளின் அடிப்புறத்தில் உள்ள சிவப்பு நிற பட்டைத் தெளிவாகத் தெரியும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிறு கூட்டமாகவோ, பெருங்கூட்டமாகவோ, இப்பறவைகள் நீர் நிலைகளிலும் அறுவடை முடிந்த ஈரமான நெல் வயல்களிலும் அலகுகளை துழாவிக்கொண்டு இரை தேடும். நண்டு, நத்தை, பூச்சி, புழுக்கள், தவளைகள் போன்றவற்றை உண்ணும். சில சமயங்களில் மீன்கள் மற்றும் சிறு பாம்புகளைக்கூட உண்ணும். கூட்டமாகப் பறந்து வருகிற போது `V’ வடிவில் அணியாகப் பறக்கும். வேகமாக இறக்கைகளை அடித்துக்கொண்டு பறக்கும் சமயத்தில் இறக்கைகளை அசைக்காமல் காற்றில் மிதந்து வரும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் உள்ள மரங்களில் சிறிய அல்லது பெரிய எண்ணிக்கைகளில் கூடமைக்கும். பெரும்பாலும் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரைக்கும் இப்பறவைகள் கூடமைத்து, அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.
பன்னாட்டு இயற்கைவள பாதுகாப்பு நிறுவனத்தின் (IUCN) செம்பட்டியலில் இப்பறவை கூடிய விரைவில் அழிவுக்குள்ளாகக் கூடிய (Near Threatened) பறவை இனமாக வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இப்பறவையின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இப்பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

வெள்ளை அரிவாள் மூக்கனை பெரிய எண்ணிக்கையில் நான் பார்த்தது 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் முள்ளிமலை என்றழைக்கப்படும் பொத்தை ஒன்று உள்ளது. அந்தப் பொத்தையில் கூகை ஆந்தையைப் பார்ப்பதற்காக அதிகாலை 6 மணி அளவில் சென்றோம். அப்போது மலை உச்சியில் ஏறி கதிரவன் மேலெழும்பி வரும் நேரத்தில் கிழக்கே நோக்கி பைனாகுலர் கொண்டு பார்த்தபோது குளத்தில் உள்ள மரங்களில் வெள்ளை நிறத்தில் சீரியல் பல்புகள் அடுக்கடுக்காக ஒளிர்வது போல் தோன்றியது. என்னவென்று பார்த்து விடலாம் என்று முள்ளி மலையிலிருந்து கீழ் இறங்கி அந்த இடத்துக்கு வந்தபோது எங்கள் கண்களுக்கு நூற்றுக்கணக்கான வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் விருந்தளித்தது. அதோடு சேர்ந்து நீர்க்காகங்கள், வக்கா, ஜம்பு நாரைகள் போன்ற ஆயிரக்கணக்கான பறவைகள் அங்கு கூடமைத்து அடைகாத்து வந்தன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது அருகில் உள்ள சிறுவர்களிடம் விசாரித்தபோது அந்தக் குளத்தின் பெயர் வாகைக்குளம் என்பது தெரிய வந்தது. மேலும், விசாரிக்கையில் குளத்தில் ஆயிரக்கணக்கான கருவேல மரங்கள் இருந்ததாகவும் அவற்றில் நான்கில் மூன்று பங்கு வெட்டப்பட்டு விட்டதாகவும் கூறினார்கள். மழை பெய்து குளத்தில் தண்ணீர் வந்துவிட்டதால் இந்த மரங்கள் வெட்டுப்படுவதில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவித்தார்கள். இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டப் பிறகு வாகைக்குளத்தில் உள்ள மரங்களையும் அதில் உள்ள பறவைகளையும் பாதுகாப்பதற்காக எங்களுடைய அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் மூலம் முழு வேகத்தில் பணிகளை மேற்கொண்டோம்.

குளக்கரையில் அமைந்துள்ள நாணல்குள கிராமச் சிறுவர்களுக்கு குளங்களில் உள்ள பறவைகள் குறித்தும் அதன் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பறவைகள் கண்காணிப்பில் தொடர்ந்து அச்சிறுவர்கள் ஈடுபட்டார்கள். இந்தப் பறவைகளையும் மரங்களையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அச்சிறுவர்களுக்கு எண்ணம் மேலோங்கியது.
தங்கள் பெற்றோர்களிடமும் பெரியவர்களிடமும் பறவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி அவர்களின் ஒத்துழைப்பை யும் பெற்றுக்கொண்டதுடன், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணிகள், கையெழுத்து இயக்கங்கள் மூலமாகப் பக்கத்து கிராமங்களுக்கும் சென்று பறவைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டார்கள். தொடந்து ஊராட்சி மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. வன அதிகாரிகள் பார்வையிட்டு குத்தகையை புதுப்பிக்காமல் வைத்தார்கள். அதன் பிறகும், அரசியல் பின்புலம் வாய்ந்த குத்தகைத்தாரர் தன்னுடைய அசுர பலத்தை பயன்படுத்தி குத்தகையைப் புதுப்பித்துக் கொண்டு வந்தார்.
மரங்களை வெட்ட பெரிய இயந்திரங்களுடன் குளத்துக்கு வந்த போது செய்வதறியாது திகைத்தனர் அச்சிறுவர்கள். சிறுவர்களின் நிலையைக் கண்ட ஊர் பெரியவர்கள் குளத்தில் இறங்கி மரங்களை வெட்டக் கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். கிராம மக்களின் செயலைக் கண்ட ஒருவர் கிராம மக்களுக்கு ஆதரவாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொது நல வழக்கைத் தொடர்ந்து மரங்களை வெட்ட தடை உத்தரவை பெற்றார்.
தற்போது வாகைக்குளம் உயிரிபல்வகைமை சட்டம் 2022-ன் படி பல்லுயிர் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்க முன்மொழியப் பட்டுள்ளது. விரைவில் அறிவிக்கப்பட்டுவிடும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சிறுவர்களின் முயற்சி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகைக்குளத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன்களை பார்க்கிறபோது என் கண்களில் மகேஷ், ரமேஷ், முருகன், ஸ்ரீதர், வசந்த், விஜய், ரகுபதி, வெண்ணிலா, பாலசுந்தரி, சந்துரு போன்ற சிறுவர்களே தெரிகிறார்கள். இந்த சிறுவர்களின் முயற்சி போற்றப்பட வேண்டியவை.
- பறக்கும்