Published:Updated:

அழிவின் விளிம்பில் தேவாங்குகள்... ஆதரித்துக் காப்பாற்றுமா அரசு?

தேவாங்கு
பிரீமியம் ஸ்டோரி
தேவாங்கு ( நா.ராஜமுருகன் )

சுற்றுச்சூழல்

அழிவின் விளிம்பில் தேவாங்குகள்... ஆதரித்துக் காப்பாற்றுமா அரசு?

சுற்றுச்சூழல்

Published:Updated:
தேவாங்கு
பிரீமியம் ஸ்டோரி
தேவாங்கு ( நா.ராஜமுருகன் )

குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த இரவாடி பாலூட்டி இனம் தேவாங்கு. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி காலத்தில் இருந்த கடற்படையில் திசைகாட்ட இந்த தேவாங்குகளைத்தான் பயன் படுத்தியதாக செவி வழிச் செய்திகள் சொல்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 30 மலையடிவாரக் கிராமங்களில் தேவாங்குகள் குறித்து, ‘சீட்ஸ் அறக்கட்டளை’ விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் இயக்குநர் முத்துசாமியிடம் பேசினோம்.

“நான்கு வகை தேவாங்குகள் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த நான்கு வகை தேவாங்குகளும் வாழ் கின்றன. சாம்பல் நிறத் தேவாங்குகள் பல பகுதிகளில் வாழ்ந்தாலும், உலக அளவில் அய்யலூர், கடவூர் காப்புக் காடுகளில்தான் அதிகம் வசிக்கின்றன. அதேபோல், தேவாங்கு இனத்தின் புகலிடமாகக் கருதப்படுவதும் இங்குள்ள மலைக்குன்றுகள்தான். இப்படிப்பட்ட, சாம்பல் நிற தேவாங்கு களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதற்கு காரணம், அந்த மலைக்குன்றுகளையொட்டி வாழும் மக்களின் தவறான புரிதல்களும் வாழ்வியலும்தான்.

முத்துசாமி
முத்துசாமி


அய்யலூர் வனப்பகுதிகளில் உள்ள வறண்ட நிலப் புதர்களான காப்புக்காடுகள்தான் தேவாங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளன. தேவாங்குகள் 100 முதல் 800 மீட்டர் உயரம் வரையிலான மலைக்கரடுகளில்தான் வசிக்கும். மலை, அடுத்து கிராமங்கள், அதைத்தொடர்ந்து வரும் மலை என்று இருக்கும் இடம்தான் தேவாங்குகள் வசிப்பதற்கு ஏற்ற இடம். இத்தகைய சூழல் உள்ள அய்யலூர் வனப்பகுதியில் உள்ள தேவாங்கு இனம் அழியும் தறுவாயில் இருக்கிறது.

சிறுவன மகசூல்

அதற்கு, அங்கு வசிக்கும் மக்கள் காடுகளில் மேற்கொள்ளும் ‘சிறுவன மகசூல்’ ஒரு காரணம். அதாவது, இங்குள்ள காப்புக்காடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் 33 வகையான உணவு பொருள்கள் மற்றும் மூலிகைப் பொருள்களை அங்கு வசிக்கும் மக்கள் எடுப்பதால், காடுகளின் தன்மை மாறி, தேவாங்குகள் வசிப்பதற்குரிய தன்மை தடுக்கப்படுகிறது. சுண்டைக்காய், உசுல், பிரண்டை, புளி, ஆவாரை, சாரநத்தி வேர், துளசி, வள்ளிக்கிழங்கு, கொடிக்கிழங்கு, தேன், சீத்தாப்பழம், குருஞ்சாண் பழம் மற்றும் மூலிகைகள் என்று பல வகையான சிறுவன மகசூலை எடுக்கிறார்கள். அதோடு, விறகுக்காகவும், வீடு அமைக்கவும் மரங்களை அழிக்கிறார்கள். அதன் விளைவாகவும், தேவாங்குகள் அருகிப்போகத் தொடங்கிவிட்டன.

அய்யலூர் மலை
அய்யலூர் மலை


வேட்டையால் அழியும் தேவாங்குகள்

தேவாங்குகளுக்கு மறைமுகமான பாதிப்பு ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் நேரடியாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஜோசியம் பார்க்க, முடக்குவாதத் துக்கு எண்ணெய், ஆண்மை விருத்தி எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லி தேவாங்குகள் வேட்டையாடப் படுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் தேவாங்கைப் பார்க்க நேர்ந்தால், பிறக்கும் குழந்தையும் தேவாங்கு மாதிரி அமைப்புடன் பிறக்கும் என்ற மூடநம்பிக்கையிலும் தேவாங்கைக் கொல்கிறார்கள்.

தேவாங்குகள் இரவு 7 மணிக்குத்தான் காடுகளை விட்டு இரை தேடி வெளியே வரும். நள்ளிரவு 1 மணி வரை உணவு வேட்டை நடத்தும். இனப்பெருக்கத்துக்கான நேரமும் அதுதான். இந்த நேரங்களில் சாலையைக் கடக்கும் தேவாங்குகள் வாகனங்களில் அடிப்பட்டு இறக்கின்றன. அதேபோல், இந்த மலைக்கரடுகளையொட்டி உள்ள வயல்களில் விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதாலும் தேவாங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காப்புக்காடுகளின் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் மின்வயர் களாலும் தேவாங்குகள் விபத்துக்குள்ளாகி இறக்கின்றன. சிறுவர்கள் அணிலை அடிப்பதுபோல், தேவாங்கை விளையாட்டுக் காக அடித்துக் கொல்கிறார்கள். இப்படி, பல வகையில் தேவாங்குகள் அழிக்கப்படுகின்றன.

விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி


இதைத் தடுக்க, ‘ஹேபிடேட் அறக்கட்டளை’, காந்திகிராமம் பல்கலைக்கழக தாவரவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் ராமசுப்பு மற்றும் வனத்துறையோடு நாங்களும் சேர்ந்து, 2015-16 முதல் தேவாங்குகள் குறித்து ஆய்வுச் செய்ய ஆரம்பித்தோம். இந்த மக்கள் தீவனம், உணவு மற்றும் பழம் பறிக்க, விறகு தேவை மற்றும் மரப் பயன்பாடு ஆகிய மூன்று விஷயங்களுக்காகக் காட்டை அழிக்கிறார்கள். அதைத் தடுக்க, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 30 கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேவாங்கைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இறங்கினோம்.

வனப்பொருள்களை மதிப்புக்கூட்டலாம்

மக்களுக்கு 3 வகையான மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். தேவாங்குகளுக்கான வாழ்விடங்கள் அதிகரிக்க, கிராமங்களில் உள்ள ஊராட்சிக் கரடுகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தோம். காடுகளில் நடக்கும் சிறுவன மகசூலைக் குறைக்க மக்களுக்கு சில வழிமுறைகளைச் சொன்னோம். அதாவது, காடுகளில் 1,000 கிலோ உணவுப் பொருள்களை எடுத்து, அதை ரூ.2,000-க்கு விற்பதற்குப் பதிலாக, வெறும் 100 கிலோ உணவுப் பொருள்களை மட்டும் எடுத்து, அதை மதிப்புக்கூட்டி ரூ.5,000-க்கு விற்கும் வியாபாரப் புரிதலை ஏற்படுத்தினோம். அதாவது, 100 சதவிகிதம் வனத்தை நம்பியிருக்கும் மக்களை, 50 சதவிகிதம் மட்டுமே நம்பியிருப்பவர்களாக மாற்றினோம். கிராமப் பகுதிகளில் விவசாயம் நன்றாக நடக்க ஏதுவாக, 300 தேனீப்பெட்டிகளை வழங்கினோம். தேவாங்கு மீது மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகளைப் போக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேட்டையாடு வதையும் தடுத்து வருகிறோம். இதன்முலமாக விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்திக்கொண்டு உடனே இந்தப் பகுதியை, தேவாங்குகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்” என்றார்.

விழிப்புணர்வு வாசகம்
விழிப்புணர்வு வாசகம்


உடனே அறிவிக்க வேண்டும்!

கடவூர் தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி “இந்தப் பகுதியைத் தேவாங்குகள் சரணாலயமாக அறிவிக்க வலியுறுத்தி, கடந்த 15 வருடங்களாகப் போராடி வருகிறோம். ஆனால், அரசு அதைச் செய்யவில்லை. இதனால், தேவாங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்திய வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தேவாங்கு பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் (பிரிவு அ) முதலிடத்தில் உள்ளது. சர்வதேச இயற்கை பாதுகாப்புக் கழகமும் பாதுகாக்க வேண்டிய உயிரினப் பட்டியலில் இதைச் சேர்த்திருக்கிறது. தேவாங்குகளைப் பாதுகாக்க, இந்தப் பகுதியைத் தேவாங்குகள் சரணாலயம் அல்லது வனப்பாதுகாப்பு பகுதியாக உடனே அறிவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரபுசங்கர், பாலசுப்ரமணி
பிரபுசங்கர், பாலசுப்ரமணி

அரசுக்குப் பரிந்துரை செய்வோம்!

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கரிடம் பேசினோம். “கடவூர் மலைப்பகுதியில் ஆய்வு செய்திருக்கிறேன். அந்தக் காப்புக்காட்டில் 3,200 தேவாங்குகள் இருப்பதாக வனத்துறையினர் சொல்கிறார்கள். அதோடு, அதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க கோரிக்கை வைத்தார்கள். தேவாங்குகளைப் பற்றி இன்னும் அதிகம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. தேவாங்குகள் மீது மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகளைப் போக்கவும், மருந்துக்காக வேட்டையாடுவதைத் தடுக்கவும் தக்க நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வை மேற்கொள்ள இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் காப்புக்காடுகளைத் தேவாங்குகள் சரணாலயமாக அறிவிக்க, அரசுக்குப் பரிந்துரை செய்ய இருக்கிறோம்” என்றார்.

தேவாங்கு
தேவாங்கு

தேவாங்குகள் பாதுகாக்கப்படும்

தேவாங்குகள் பாதுகாப்பு குறித்துப் பேசிய கரூர் உதவி வன பாதுகாவலர் (பொறுப்பு) அல்லிராஜ், “தேவாங்குகளைப் பாதுகாப்பது சம்பந்தமாக கரூர் வனத்துறை அரசுக்கு திட்ட வரைவு அனுப்பியுள்ளது. பத்தாண்டு செயல் திட்டங்களில் இதுவும் ஒன்று. கரூர் மாவட்ட ஆட்சியரும் கடவூர் மலைப்பகுதியை ஆய்வுசெய்து சென்றுள்ளார். அதனால், தேவாங்குகளைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இருக்கிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism