Published:Updated:

`சதுப்பு நிலத்துல மரத்த நட்டுட்டுப் போயிட்டாங்க!’ - ஜல் சக்தி அபியானால் சூழலியலாளர்கள் வேதனை

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் மரம் நட்டே ஆக வேண்டும் என கோத்தகிரி பேரூராட்சி சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த சம்பவம் அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள்
சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள் ( கே.அருண். )

விண்ணை முட்டும் மலைத்தொடர்கள், மழைப் பொழிய குளிர்ந்த காற்றைத் தரும் சோலை மரங்கள், நீரை சேமிக்கும் புல்வெளிகள், இயற்கையின் நீர் வங்கிகளான சதுப்பு நிலங்கள் என மிக நேர்த்தியான தகவமைப்பை பெற்றுள்ளது நீலகிரி. அதிலும் குறிப்பாக சதுப்பு நிலங்கள் நீர் சேமிப்பு மட்டும் அல்லாது காற்றையும், நீரையும் தூய்மையாக்கும் தன்மை கொண்டது. மேலும், வெட் லேண்ட் எனப்படும் சதுப்பு நிலங்கள் நீரை சேமித்து கடும் வறட்சியிலும் நீரை கசியச் செய்து பல்லுயிர்களின் தாகம் தீர்க்கும்.

சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள்
சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள்

பணப்பயிர் சாகுபடி, கட்டுமானங்கள், சாலை விரிவாக்கம், மக்கள்தொகை பெருக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுவருகின்றன. மலைக்காய்கறி, வீட்டுமனை போன்றவையால் கடந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதேபோல் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்பெட்டா ரைபிள் ரேஞ் பகுதியில் சதுப்பு நிலம் ஒன்று உள்ளது. 120 ஏக்கர் பரப்பளவில் இருந்ததாகக் கூறப்படும் இந்த சதுப்பு நிலம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தற்போது 8 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது என சூழலியலாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்களின் வேதனையை கூட்டும் வகையில் தற்போது கோத்தகிரி பேரூராட்சி சார்பில் ஜல் சக்தி அபியான் திட்டம் என்ற பெயரில் சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.

இது குறித்து கோத்தகிரி லாங்வுட் ஷோலா பாதுகாப்புக் குழு ராஜு கூறுகையில், ``இயற்கை ஆர்வலர்கள் மூலம் கலந்தாலோசித்து மரங்களை நடுவதும், இயற்கை நில அமைப்புக்கு, கால சூழலுக்கு, மண் வளத்துக்கு ஏற்ற மரங்களை நடவேண்டியது அவசியம். பெயரளவிற்கு, கணக்கு காண்பிக்க மரம் நடுவது இயற்கையை அழிப்பதற்கு சமம். மரம் நடுவது இயற்கையை காக்கவும், சுற்றுச் சூழலை மேம்படுத்தவும்தான். ஆனால், கோத்தகிரியில் நடப்பட்ட 600 மரங்களில் ஒன்று கூட நீலகிரியில் வளரக் கூடிய பாரம்பர்ய மரங்களாக இல்லை. இவற்றால் சுற்றுச் சூழல் மாசுபடுமே தவிர பாதுகாக்கப்படாது. சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்ததும் ஜெகரண்டா, போடோகோர்ப்ஸ் போன்ற வெளிநாட்டு மரங்கள் சதுப்பின் தன்மையை அழித்துவிடும்” என்றார்.

சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள்
சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள்

கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த சங்கீதா கூறுகையில், ``மீதம் இருக்கும் இந்த சதுப்பு நிலத்தில் 7 கிணறுகள் அமைக்கப்பட்டு இதன் மூலம் கிடைக்கும் நீர் கோத்தகிரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. சதுப்பு நிலங்களில் பல்வேறு வகை புற்கள், தவளைகள், பூச்சிகள் காணப்படும். தற்போது இந்த மரங்களை நடவு செய்ததன் மூலம் இந்த சதுப்பு நிலம் அழிக்கப்பட உள்ளது" என்றார்.

சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகள் நடவுசெய்தது தொடர்பாக கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``கோத்தகிரி பகுதிகளில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம்.

கோத்தகிரி சதுப்பு நில பகுதி
கோத்தகிரி சதுப்பு நில பகுதி

சதுப்பு நிலத்தில் சுமார் 500 மரக்கன்றுகளை நடவு செய்தோம். ஆனால், சூழலியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே தாவரவியலாளர்களைக் கொண்டு தேவையற்ற மரங்கள் அகற்றப்படும்” என்றனர்.