Published:Updated:

``கஜா புயலில்கூட சாயாத மரங்களை இப்படி அநியாயமா அழிச்சிட்டாங்களே!" - ஆதங்கத்தில் மன்னார்குடி மக்கள்

``மேற்குக் கரை முழுக்க, நல்லா நீளமா, மரக்கிளைகளால் பந்தல் போட்ட மாதிரி இருந்துச்சு. இதை வெட்டி அழிக்க எப்படி மனசு வந்துச்சோ தெரியலை. கஜா புயல் அடிச்சப்பகூட இங்கயிருந்த வேப்பமரங்களும் புங்கன் மரங்களும் கம்பீரமா நின்னுகிட்டு இருந்துச்சு."

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலின் தெப்பக்குளத்தின் கரையில் கடந்த பல ஆண்டுகளாக நிழல் தந்துகொண்டிருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டிருப்பது இப்பகுதி மக்களையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மனித குலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ மரங்கள் மிகவும் அவசியம் என்ற விழிப்புணர்வு நாளுக்கு நாள் மக்களிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களில் பெரும்பாலானோர், மரங்களை பாதுகாப்பதில் அக்கறையோடு செயல்படுகிறார்கள். சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்கள் பலர், தங்களது சொந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பொது இடங்களில் மரங்களை வளர்த்தெடுக்க, பெரும் அர்ப்பணிப்போடு தொண்டாற்றி வருகிறார்கள்.

வெட்டப்பட்ட மரங்கள்
வெட்டப்பட்ட மரங்கள்
பெட்ரோ கெமிக்கல் மண்டலம்: அச்சத்தில் 50,000 குடும்பங்கள்; போராட்டத்துக்கு ஆயத்தமாகும் விவசாயிகள்!

ஆனாலும் இன்றைக்கும் கூட, மரங்களின் மகத்துவங்களைப் பற்றி கவலைப்படாத சிலர், பொது இடங்கலில் உள்ள மரங்களை ஏதேனும் ஒரு காரனத்தைச் சொல்லி வெட்டி அழிப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த வகையில்தான் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் தெப்பக்குளத்தின் கரையில் அழகாகக் காட்சி அளித்துக்கொண்டிருந்த மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.

மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரம் வளர்ப்பு, பனை விதைப்பு, நீர்நிலைகள் தூர் வாருதல் போன்ற சமூகநலப் பணிகளில் ஈடுபட்டு வரும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜசேகரன் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, ``ராஜகோபாலசுவாமி கோயில் தெப்பக்குளம்னு சொன்னாலே மன்னார்குடி மக்களுக்கு இங்கயிருந்த மரங்கள்தான் முதல்ல நினைவுக்கு வரும். காரணம், அந்தளவுக்கு நல்லா உயரமா, நிறைய கிளைகளோடு படர்ந்து விரிஞ்சு நிழல் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. வரிசையா பத்து மரங்கள்... பார்க்கவே மனசுக்கு இதமா ரம்மியமா இருக்கும். தெப்பக்குளத்தோட மேற்குக் கரை முழுக்க, நல்லா நீளமா, மரக்கிளைகளால் பந்தல் போட்ட மாதிரி இருந்துச்சு.

இதை வெட்டி அழிக்க எப்படி மனசு வந்துச்சோ தெரியலை. கஜா புயல் அடிச்சப்ப டெல்டா மாவட்டங்கள் முழுக்க லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாஞ்சது. ஆனால், இங்கயிருந்த வேப்பமரங்களும் புங்கன் மரங்களும் கம்பீரமா நின்னுகிட்டு இருந்துச்சு. இங்க இருந்த மரங்கள் எல்லாம் 25, 30 வயசுடைய மரங்கள். இதுமாதிரியான மரங்களை இனிமே வளர்த்து உருவாக்குறங்கறது சாதாரண காரியமில்லை. கடந்த சில ஆண்டுகளா மன்னார்குடி பகுதிகள்ல ஏகப்பட்ட மரக்கன்றுகளை நட்டோம்.

ராஜசேகரன்
ராஜசேகரன்

எங்களை மாதிரி இன்னும் பல அமைப்புகளும் மரக்கன்றுகளை நட்டுக்கிட்டேதான் இருக்காங்க. அதை முறையாகத் தண்ணீர் ஊற்றி, பராமரிச்சு பாதுக்காக்குறங்கறது ரொம்பவே சவாலா இருக்கு. ஆனால், இதோட அருமை தெரியாத சிலர், தெப்பக்குளத்தை அழகுபடுத்துறோம்னு சொல்லி, இங்க இருந்த மரங்களை எல்லாம் வெட்டி அழிச்சிட்டாங்க. இதைப் பார்த்துக்கிட்டு, மன்னார்குடி மக்கள் நொந்துபோயி புலம்பிக்கிட்டு இருக்காங்க. மரங்களை அழிச்சுதான் தெப்பக்குளத்தை அழகுபடுத்தணும்னா, அது தேவையே இல்லை. இது அந்தக் கடவுளாலேயே பொறுக்காது. தெப்பகுளத்துக்கு இரும்பு கேட் அமைக்க, இங்க இருந்த மரங்கள் இடைஞ்சலா இருக்குனு ஒரு பொய்யான காரணத்தை சொல்லிதான், இந்த மரங்களை அழிச்சிருக்காங்க. அவங்க நினைச்சிருந்தா மரங்களை வெட்டாமலே, கேட் அமைச்சிருக்கலாம்.

சாலைகளுக்காக வெட்டப்பட்டும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள்; அரசே விதிகளை மீறுகிறதா?

தெப்பகுளத்தை அழகுபடுத்தணும்ங்கறதை விட, இதைக் காரணமாகச் சொல்லி, இங்கயிருந்த மரங்களை வெட்டணும்ங்கறதுதான், அவங்களுக்கு உள்நோக்கமா இருந்துருக்கு. இப்ப இந்த இடமே வெறிச்சோடி கிடக்கு. மன்னார்குடி மக்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பக்கமா வந்துட்டு போகக்கூடிய வெளியூர் மக்களுக்கும், வெயில் காலத்துல நிழல் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. இனிமே பாருங்க... கோடை காலத்துல இங்க வெப்பம் தகிக்கும்’’ என ஆதங்கப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு