Published:Updated:

`இப்படியொரு உயிர்ச்சூழலை இனி உருவாக்க முடியாது!' - ஊராட்சிக்கு எதிராகக் களமிறங்கிய சேலம் இளைஞர்கள்

பனந்தோப்பு
பனந்தோப்பு

இந்தப் பனைமரத்தின் பொந்துகளில் 500-க்கும் மேற்பட்ட கிளிகளின் குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பசுங்கிளிகள் மாலை நேரத்தில்கூடி பாடும்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே உள்ள நிலவாரப்பட்டியில் பனந்தோப்புகளை அழிக்க உள்ளூர் கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் களமிறங்கியுள்ளது நிலவாரப்பட்டி பனந்தோப்பு பாதுகாப்புக் குழு.

பாதுகாப்புக் குழு
பாதுகாப்புக் குழு

இதுபற்றி பனந்தோப்பு பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்தர், '' நிலவாரப்பட்டி கிராமத்தில் பழைமை வாய்ந்த இரண்டு பனந்தோப்புகள் இருந்தன. அதில் ஒரு பனந்தோப்பை பள்ளிக்கூடம் கட்டுவதற்காக அழித்துவிட்டார்கள்.

தற்போது ஒரு பனந்தோப்பு ஏலக்கரடு பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. இந்தப் பனந்தோப்பில் ஆரம்பகாலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தன. காலப்போக்கில் கடும் வறட்சியால் பல பனைமரங்கள் அழிந்துவிட்டன.

சுரேந்தர்
சுரேந்தர்

தற்போது 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 400-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருக்கின்றன. இதிலும் சில பனைமரங்கள் பட்டுப்போய் மொட்டை மரங்களாக நின்றுகொண்டிருக்கின்றன. இந்தப் பனைமரத்தின் பொந்துகளில் 500-க்கும் மேற்பட்ட கிளிகளின் குடியிருப்புகள் இருக்கின்றன. இந்தப் பசுங்கிளிகள் மாலை நேரத்தில்கூடி பாடும். இந்த இனிமையான ராகத்தைக் கேட்டு மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.

பனைமரத்திற்குக் கீழே அடர்ந்த புதர்கள் இருக்கின்றன. இதில் கீரி, மயில், பாம்பு, உடும்பு, முயல் எனப் பல்லுயிர்கள் பலவருடங்களாகப் பல்கிப் பெருகி வாழ்ந்து வருகின்றன. இந்தப் பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு நிலவாரப்பட்டி கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்து டெண்டர் விட்டிருக்கிறது. இதனால் பல்லுயிரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கிளிகளின் குடியிருப்புகளையும் அழிக்க நினைக்கின்றனர்.

பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி

இதை அழிப்பதற்கு எங்கள் உயிர்போனாலும் அனுமதிக்க மாட்டோம். இப்பகுதியை ஒரேநாளில் அழித்து விடலாம். ஆனால் மீண்டும் இந்த உயிர்ச் சூழலை உருவாக்க முடியாது. அதனால் இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பறவைகளின் குடியிருப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி நிலவாரப்பட்டி கிராமப் பஞ்சாயத் தலைவர் திருமுருகன் கூறுகையில், '' காற்றடித்தால் பனந்தோப்பில் இருந்து ஓலைகள் விவசாய நிலத்தில் விழுகின்றன. அதனால் விவசாயம் செய்ய முடியவில்லையென்று விவசாயிகள் கிராம சபைக் கூட்டத்தில் கூறினார்கள். இதனால் காய்ந்த ஓலைகளையும் பட்டுப்போன மரங்களையும் புதர்களாக மண்டிக்கிடக்கும் முள்மரங்களையும் வெட்ட முடிவெடுத்தோம்.

திருமுருகன்
திருமுருகன்

இதுதவிர அப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. அதனால் புதர்களை அகற்றிவிட்டு மரங்கள் வளர்ப்புத் திட்டத்தில் மரக்கன்றுகளை நடுவதற்காகத் தேவையற்ற மரங்களை அகற்ற இருக்கிறோம். காய்ந்த பனை மரங்களில் கிளிகள் வசித்து வருவதைப் பற்றி யோசிக்கவில்லை. மக்களுக்கு விரோதமாக எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்'' என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு