Published:Updated:

``யானைகிட்ட மாட்டிகிட்டா தப்பிக்க ரெண்டு வழிமுறைகள்!" - சுற்றுச்சூழல் கல்வியாளர்

யானை
யானை

``வனப்பகுதிக்குச் செல்லும்போது வாசனைத் திரவியங்கள், மது, சிகரெட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியிருந்தால் வாசனை நுகர்வில் யானைகள் நம்மைத் தேடி வரக்கூடும்"

கோயம்புத்தூரில் சத்தமின்றி இயங்கிவருகிறது Zoo Outreach Organization என்ற அமைப்பு. இதன் மூலம், வனவிலங்குகளின் நலனுக்கான ஆக்கபூர்வமான பல செயல்பாடுகள் நடைபெறுகின்றன. வனவிலங்குகள் அதன் வாழ்விடத்தில் மகிழ்ச்சியாக வாழவும், வனவிலங்குகளால் மக்களுக்கும் மக்களால் வனவிலங்குகளுக்கும் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும் இந்த அமைப்பு தீவிரமாக இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூத்த சுற்றுச்சூழல் கல்வியாளர் மாரிமுத்துவிடம் பேசினோம்.

சாலி வாக்கர்
சாலி வாக்கர்

``அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட சாலி வாக்கர், யோகா மற்றும் இசை கத்துக்க 1970-களில் இந்தியா வந்தாங்க. அவர் மைசூரில் தங்கியிருந்தப்போ, மைசூரு உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்களில் விலங்குகள் சரியான முறையில் வளர்க்கப்படலைனு வருத்தப்பட்டிருக்கிறார். விலங்குகளின் நலனுக்காகச் செயல்படணும்னு, பல்வேறு உயிரியல் பூங்காக்களின் மேம்பாட்டுக்கு உதவினார்.

1985-ம் ஆண்டு கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்தார், சாலி வாக்கர். பின்னர், விலங்குகளின் நலனுக்காக எங்க அமைப்பைத் தொடங்கினார். `விலங்குகளின் குணாதிசயங்களைத் தெரிஞ்சுகிட்டு அவற்றின்மீது அன்பு காட்டினால்தான் அவை மகிழ்ச்சியாக வாழும். அதனால் யாருக்கும் எந்தத் தொந்தரவுகளும் நேராது'னு படிச்சவங்க மற்றும் பாமர மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விலங்குகளின் அழிவைத் தடுக்கப் பல்வேறு தளங்களிலும் வேலை செய்தார். மேலும், `Zoo's Print' என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார். உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் எவரும் இந்தப் பத்திரிகையில கட்டுரை எழுதலாம்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி

இப்போ ஆன்லைன் பத்திரிகையாக வெளியாகிற இந்தப் பத்திரிகையை இலவசமாகவே படிக்கலாம்"என்று இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நோக்கத்தை விவரிக்கிறார் மாரிமுத்து.

இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களை ஒழுங்குபடுத்த, 1992-ம் ஆண்டு `சென்ட்ரல் ஜூ அத்தாரட்டி' அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு இந்தியா வாழ் அமெரிக்கப் பெண்ணான சாலி வாக்கரின் பங்களிப்பு முக்கியமானது. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாரிமுத்து
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாரிமுத்து

இந்த அமைப்பின் தற்போதைய செயல்பாடுகள் பற்றித் தொடர்கிறார் மாரிமுத்து, ``இப்போ சஞ்சய் மொலுர் என்பவரின் தலைமையில் செயல்பட்டுவரும் எங்க அமைப்பில் 12 பேர் வேலை செய்றோம். விலங்குகளின் நலன் மற்றும் அவற்றின் சுதந்திரமான வாழ்வுக்காக வன உயிர் கல்வியைப் பயிற்றுவிப்பதுதான் எங்க முதல் நோக்கம். அதுக்காக இந்தியாவிலுள்ள பள்ளிகள் பலவற்றுக்கும் சென்று மாணவர்களுக்கு விலங்குகள் மீதான நேசத்தை விதைக்கிறோம். குறிப்பா, மலைப்பகுதியை யொட்டிய அரசுப் பள்ளிகளில் படிக்கும் பழங்குடி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி விழிப்புணர்வு கொடுக்கிறோம்.

விலங்குகளின் குணாதிசயங்களைத் தெரிஞ்சுக்காம, விலங்குகளின் நலனுக்காக முழுமையான பங்களிப்பை யாராலும் கொடுக்க முடியாது. யானைக்கு மோப்ப சக்தி அதிகம். அதனாலதான் பல கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பலா மரங்களின் வாசனையை நுகர்ந்து அதைச் சாப்பிட ஊருக்குள் அவை வந்துவிடுகின்றன. வனப்பகுதிக்குச் செல்லும்போது வாசனைத் திரவியங்கள், மது, சிகரெட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியிருந்தால் வாசனை நுகர்வில் யானைகள் நம்மைத் தேடி வரக்கூடும். இந்தப் பொருள்களை கட்டாயம் வனப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடாதுனு மனிதர்களிடம் வலியுறுத்துறோம். 

விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி

`யானையிடம் மாட்டிக்கிட்டா, சரிவுப் பாதையில் இறங்கி ஓடணும்; குறுக்கும் நெடுக்குமாக ஓடி தப்பிக்கணும். யானைகளை ஈர்க்கும் என்பதால, வீட்டுக்கு வண்ணமயமான பெயின்ட் அடிக்க வேண்டாம்'னு மக்களிடம் சொல்லுவோம். தெரு நாடகக் குழுவினர்களுக்கு நாங்க பயிற்சி கொடுக்கிறோம். அவங்க பல்வேறு மலைவாழ் கிராமங்கள்ல நாடகம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பாங்க. ஆசிரியர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், வனப்பாதுகாவலர்கள் உட்பட பலதரப்பட்டவர்களையும் ஒன்றாக இணைச்சு விலங்குகள் நல்வாழ்வுக்காக பலநாள் கருத்தரங்குகளை நடத்துறோம்.

அழிந்துவரும் வனவிலங்குகளின் நலனுக்காகத் தனிப்பட்ட முறையில் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளையும் செய்றோம். மேற்சொன்ன அனைத்துப் பணிகளையும் இந்தியா தவிர, தென் ஆசிய நாடுகள் பலவற்றிலும் செய்றோம். இந்தப் பணிகளையெல்லாம் முன்பு வெளிமாநிலங்களில்தான் அதிகளவில் செய்துவந்தோம். 

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாரிமுத்து
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாரிமுத்து

கடந்த ஐந்து வருஷமாதான் தமிழ்நாட்டிலும் எங்க பணிகளை அதிகப்படுத்தியிருக்கோம். குறிப்பா, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்தான் அதிக அளவில் வேலை செய்றோம். தமிழ்நாட்டுல யானை, காட்டுப்பன்றி, மயில், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள்தான் மனிதர்களின் வாழ்விடங்களுக்குள் அதிகளவில் நுழையுது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கவும் சிறப்பு கவனம் செலுத்துறோம்" என்கிறார்.

வனவிலங்குகளின் நலனுக்கான இந்த அமைப்பின் செயல்பாடுகள் அனைத்துமே இலவசமாகவே செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. "மூணுல ஒரு பங்கு வனப்பகுதியைக் கொண்ட நாடுதான் செழிப்பான நாடுனு சொல்வாங்க. ஆனா, நம்ம நாட்டில் அஞ்சுல ஒரு பங்குதான் வனப்பகுதி இருக்கு. அதுவும் தமிழ்நாட்டில் வெறும் 4 சதவிகிதம்தான் வனப்பரப்பு இருக்கு. வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு, சட்டத்துக்குப் புறம்பாக விலங்குகள் வேட்டையாடப்படுவது கணிசமாகக் குறைஞ்சுடுச்சு. 

யானை
யானை

அதேசமயம் வனப்பகுதியில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால, அடர்த்தியான வனப்பரப்பின் அளவு குறைஞ்சுகிட்டே வருது. அதனால, சரியான உணவு கிடைக்காம விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகமாகிட்டே இருக்கு. நம்மால் எந்தத் தொந்தரவும் நேராம இருந்தா, விலங்குகளும் அதன் வாழ்விடத்துலயே சந்தோஷமா வசிக்கும். அதுக்கு நாம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்" என்று வேண்டுகோள் விடுக்கிறார், மாரிமுத்து.

`ஊருக்குத்தான் அது யானை... எங்களுக்குக் குழந்தை!' -வேதநாயகி மரணத்தால் கலங்கிய ஈரோடு
அடுத்த கட்டுரைக்கு