Published:Updated:

கூட்டம் கூட்டமாகப் பட்டுப்போகும் யூகலிப்டஸ் மரங்கள்...

யூகலிப்டஸ் மரம்
பிரீமியம் ஸ்டோரி
News
யூகலிப்டஸ் மரம்

காரணம் தெரியாமல் தவிக்கும் ஆய்வாளர்கள்!

நீலகிரியில் பல நூறு ஹெக்டர் பரப்பளவிலான யூகலிப்டஸ் மரங்கள் தானாகவே பட்டுப்போய்க்கொண்டிருப்பது, சூழலியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும்குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சூழலியல் பாதிப்பை ஏற்படுத்துவதால், அகற்றப்பட வேண்டிய அந்நிய மரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றன யூகலிப்டஸ் மரங்கள். ‘விறகுக்காகவும் தைலம் தயாரிக்கவும் ஆங்கிலேயர்களால் இங்கே கொண்டுவரப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள், நீலகிரி மாவட்டத்தில் லட்சக்கணக்கில் இருக்கின்றன. அவற்றை அகற்றிவிட்டு இந்த மண்ணுக்கேற்ற சோலை மரங்களை நட வேண்டும்’ என்பது சூழலியல் ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கை.

ஐயம்மாள், வசந்த் பாஸ்கோ
ஐயம்மாள், வசந்த் பாஸ்கோ

நீதிமன்றமும் இதை வலியுறுத்தியுள்ள நிலையில், வனத்துறையில் நிதி இல்லாமை, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்தத் திட்டம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ‘இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும்?’ என்று சூழலியல் ஆய்வாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களாக நீலகிரியில் உள்ள பல நூறு ஹெக்டேர் யூகலிப்டஸ் மரங்கள் காரணமே இல்லாமல் பட்டுப்போகின்றன. ஆனால், அது நல்லதா கெட்டதா என்பதுதான் தற்போது விவாதமாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக்கொண்ட யூகலிப்டஸ் மரங்களில், முப்பது ரகங்கள் உள்ளன. அதிகபட்சமாக 200 அடி உயரம் வரை வளரும் தன்மைகொண்ட யூகலிப்டஸ் மரம், அதிகளவிலான தண்ணீரை உறிஞ்சக்கூடியது! கடுமையான வெப்பத்தையும் உறையவைக்கும் பனியையும் தாக்குப்பிடிப்பவை. காட்டுத்தீ ஏற்பட்டாலும் தப்பித்து வளரும் தன்மைகொண்டவை. இந்த மரங்கள் மொத்தமாக இப்படி மடிவது, தாவரவியல் ஆய்வாளர்களையே குழப்பமடைய வைத்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஊட்டியை அடுத்த காந்தல் பகுதியில் உள்ள நீலகிரி தைலம் தயாரிப்புக் கூடத்தில் பணிபுரிபவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘யூகலிப்டஸ் மரங்களிலிருந்து காய்ந்து கொட்டும் இலைகளைச் சேகரித்து தைலம் தயாரிப்புக் கூடத்துக்குக் கொண்டுவரும் வேலையை சிலர் செய்துகொண்டிருக்கின்றனர். தினமும் 500 கிலோ வரையிலான யூகலிப்டஸ் இலைகளை அவர்கள் கொண்டு வருவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஒரு நாள் 1,500 கிலோ யூகலிப்டஸ் இலைகளைக் கொண்டுவந்தனர் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. விசாரித்தபோது, நிறைய இலைகள் காய்ந்து கொட்டுவதாகச் சொன்னார்கள். ஆனால், சில வாரங்களிலேயே அதன் அளவு குறைய ஆரம்பித்துவிட்டது. இப்போது தினமும் 200 கிலோ இலைகள்கூட வருவதில்லை. மரங்கள் அனைத்தும் பட்டுப்போவதாகச் சொல்கின்றனர். என்ன காரணம் என்றே தெரியவில்லை’’ என்றனர்.

கூட்டம் கூட்டமாகப் பட்டுப்போகும் யூகலிப்டஸ் மரங்கள்...

இருபது ஆண்டுகளுக்கும்மேலாக தைல இலைகளைச் சேகரித்துவரும் ஊட்டியைச் சேர்ந்த ஐயம்மாள், ‘‘கொஞ்சம் கொஞ்சமா இலை உதிர்ந்து கடைசியில மொத்த மரமும் பட்டுப்போயிடுது. எனக்கு விவரம் தெரிஞ்சதுலேயிருந்து இந்த மரங்கள் இப்படி பட்டுப்போனதே கிடையாது. மொதல்ல ஊட்டியிலதான் பட்டுப்போச்சு. இப்போ தலைகுந்தா, குருத்துக்குளி, ஹெச்.பி.எஃப்னு எல்லா இடங்கள்லயும் உள்ள மரங்களும் இதேபோல பட்டுப் போய்க்கிட்டிருக்கு’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்துப் பேசிய தாவரவியல் ஆய்வாளரும் சூழலியல் எழுத்தாளருமான வசந்த் பாஸ்கோ, ‘‘உலகம் முழுவதும் மரங்களின் கூட்டு மரணம் (Forest Dieback) பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பல நாடுகளில் மரங்கள் அதன் முழு வயதை எட்டும் முன்னரே இறக்கத் தொடங்கிவிடுகின்றன. அதிகளவு கரியமிலவாயு வெளியேற்றப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணம். புவி வெப்பமய மாதலால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், மரங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கிறது. நீலகிரியில் யூகலிப்டஸ் மரங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு, பருவநிலை மாற்றத்தின் முதல் எச்சரிக்கை’’ என்றார்.

நீலகிரி வனத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பிட்ட வகை மரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்க, வனச்சரகர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை, முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகே சொல்ல முடியும்’’ என்றனர்.

அவசரமாக ஆய்வுசெய்யப்பட வேண்டும்!

அழிப்பது பூச்சியா... சூழ்ச்சியா?

துகுறித்து நம்மிடம் பேசிய தாவரவியல் ஆய்வாளர் ஒருவர், “எல்லா சூழல்களிலும் வளரும் வலிமைகொண்ட மரங்கள் மொத்தமாக மரணிப்பது பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. வனத்தில் மற்ற மரங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது இந்த மரங்கள் மட்டும் பட்டுப் போகின்றன என்றால், இந்த மரங்களை அழிக்கும் பூச்சி உருவாகியிருக்க வேண்டும். இந்த மரங்களை அகற்ற மெத்தனம் காட்டும் அதிகாரிகளால் விரக்தியடைந்த ஆய்வாளர்கள் யாரேனும் இந்தப் பூச்சியை இங்கு பரப்பியிருக்கவும் வாய்ப்புண்டு. இந்த மரங்கள் அகற்றப்பட வேண்டியவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், என்ன காரணத்தால் இந்த மரங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட வேண்டிய ஒன்று’’ என்றார்.