Published:Updated:

மொபைல் வீடு தெரியும்... மொபைல் காடு தெரியுமா? - ஐரோப்பாவில் அறிமுகமாகும் புதிய திட்டம்

நாம் வாழக்கூடிய இடம், சுற்றுச்சூழலுடன் மிகவும் இணைந்தும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டும் இருக்க வேண்டும். நகரம், எந்த ஒரு இடர்ப்பாடுகளையும் சந்திக்க விடாமல் 'மொபைல் காடு' காக்கிறது.

mobile forest
mobile forest ( Max Pixel )

தற்போதைய காலகட்டத்தில் நகரமயமாதலில் கட்டடங்கள் அதிகமாகிவிட்டன. அதனால், வசிக்கும் இடங்களைச் சுற்றி பசுமை இல்லாத சூழலே பெரும்பாலும் நிலவிவருகிறது. இதன் மூலம் வெப்ப அலைகள், வறட்சி ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதற்கான தீர்வை நோக்கி ஐரோப்பா நகரங்கள் நகர்ந்து வருகின்றன. நகரங்களில் அதிக அளவிலான மாடித்தோட்டங்கள் மற்றும் வீட்டைச் சுற்றி அதிகமான மரப் பயிர்களை வளர்த்தல் (மொபைல் காடுகள்) ஆகிய திட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிகப்படியான வெப்பம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற காலநிலை மாற்ற நிகழ்வுகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாக அந்த மக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இயற்கையோடு எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்த பார்வை நகரவாசிகளுக்குப் போதுமான அளவில் இல்லை.

ஒரு நகரத்துக்கு முக்கிய பிரச்னையாக இருப்பது அதிக வெப்பநிலை, நீர்ப் பற்றாக்குறை, பெரு வெள்ளம் ஆகியவைதான். இதனால்தான் நகரங்களில் மக்கள் வசிப்பதற்கான சூழல் கடினமாகி வருகின்றன. ஆனால், நகர்ப்புறங்களில் இயற்கையை அதிகரிப்பதன் மூலம் இத்தகைய அச்சுறுத்தல்களிடம் இருந்து பாதுகாக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பின்லாந்தின் வி.டி.டி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் நகர்ப்புற விஞ்ஞானி டாக்டர் லாரா வென்ட்லிங், “இயற்கையோடு எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்த பார்வை நகரவாசிகளுக்குப் போதுமான அளவில் இல்லை. ஆனால், இயற்கை அமைப்புகளின் உதவியைப் பயன்படுத்தி காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நகரங்களுக்கு உதவ முடியும். நகரம் முழுவதும் இயற்கையை மலரச் செய்தால், குளுமை, தூய்மையான காற்று, சுத்தமான நீர், ஆகியவற்றை வழங்க முடியும். புதிய மரங்களை நடவு செய்தல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்துடன் பூங்காக்களை உருவாக்குதல் போன்ற அணுகுமுறைகள் நகரங்களைப் பசுமையாக்க உதவும். இது தவிர வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சும் தன்மை கொண்ட தாவரங்களை மாடிகளில் வளர்ப்பது, மழைநீர் சேகரிப்பு மற்றும் மொபைல் காடுகளை அமைப்பது போன்றவை தனி மனிதன் உருவாக்கி பசுமையை உண்டாக்கலாம். இவ்வாறு பசுமையை உண்டாக்குவது இயற்கை சூழ்ந்த நகரங்கள் உருவாக்க உதவும். இவையெல்லாம் ஒரு சிறிய நன்மையை உருவாக்க மட்டும்தான். ஆரம்பகட்டத்தில் பெரிய அளவில் காடுகளை நகரங்களுக்குள் வளர்ப்பது குறித்த தெளிவு எங்களிடம் இல்லை.

``ஒரு காடு சார்... அதுல ஒரு கேம் சார்..!’’ - காட்டைக் காக்கும் இளைஞரின் முயற்சி
mobile forest
mobile forest
Pixabay

ஆரம்பகட்டமாக மொபைல் காடுகளை உருவாக்க மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. நெதர்லாந்தின் ஐன்ட்ஹோவன் (Eindhoven), பின்லாந்தின் தம்பேர் (Tampere) மற்றும் இத்தாலியின் ஜெனோவா (Genova) ஆகிய மூன்று இடங்களில் ஆரம்பகட்ட சோதனை முறையில் காடுகள் உருவாக்கும் பணிகள் தொடர்ந்தன. அதனால் சீரான நீர் நிர்வாகம் இருக்கிறதா என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சியில் அதிகப்படியான தாவரங்கள் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பணியைச் செய்தது. மழைநீரைக் குளங்களில் சேமிக்க ஆரம்பித்தனர்.

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நகரத்திலும், வெப்பத்தின் தாக்கத்தை குறைத்தல், காற்று மற்றும் தண்ணீரை சுத்தம் செய்தல், மழைநீரைச் சேமித்ததன் மூலம் பெருவெள்ளத்தை தடுத்தல் என அனைத்தையும் ஒருங்கிணைப்பு மூலம் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்காக வானிலை கண்காணிப்பு, தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாடுகள் மூலம் பயனுள்ள தகவல்களைச் சமர்ப்பிக்கும் குடிமக்கள் ஆகியவற்றின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு நகரக் கட்டமைப்புக்கு இயற்கை முக்கியமானது. காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் வகையிலும் மொபைல் காடுகள் வளர்ப்பு உதவும். நெருக்கமான நகரங்களில் வரலாற்று கட்டடங்களும் உள்ளன. அவற்றில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைச் செயல்படுத்துவது கடினம்" என்கிறார்.

ஒரு வருடத்தில் உருவான சிறு `காடு'.. பாராட்டும் மக்கள்.. கும்பகோணத்தை அசத்தும் `ஆனந்த' தம்பதி!

'நாம் வாழக்கூடிய இடமானது சுற்றுச்சூழலுடன் மிகவும் இணைந்தும், இயற்கையை அடிப்படையாகக் கொண்டும் இருக்க வேண்டும். நகரம் எந்த ஒரு இடர்ப்பாடுகளையும் சந்திக்க விடாமல் மொபைல் காடுகள் காக்கிறது" என்கிறார்கள் ஐரோப்பியர்கள். அந்த மக்களால் இந்த முறை பின்பற்றப்பட்டு, மக்களுக்கு அத்தியாவசியமான தேவையான தீர்வுகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர் ஐரோப்பிய மக்கள். இந்தத் திட்டம் 2020-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலும் நகரத்துக்குள் மொபைல் காடுகள் வளர்க்கப்பட்டு, நீர் நிலைகள் சுத்தப்படுத்தப்பட்டால் சுத்தமான காற்று, சுத்தமான நீர், ஆரோக்கியமான உடல்நலம் ஆகியவற்றை மக்கள் பெற முடியும். நகரங்கள் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளைக் காண வேண்டிய நேரம் இது.