Published:Updated:

"துளி மழைநீரைக் கூட வீணாக்கமாட்டேன்!'' மழைநீர் சேகரிப்பில் அசத்தும் புதுக்கோட்டை விவசாயி

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

புதுக்கோட்டை விவசாயி ஒருவர், தன் வீட்டில் தூர்ந்துபோய்க்கிடந்த கிணற்றை சீரமைத்து, வீட்டின் மேற்கூரையில் விழும் ஒரு துளி மழைநீரையும் வீணாக்காமல் சேகரித்து, அதைக் குடிநீராகவும் மரங்கள் வளர்க்கவும் பயன்படுத்தி அசத்திவருகிறார்.

விவசாயி வீரமணியின் வீடு
விவசாயி வீரமணியின் வீடு

புதுக்கோட்டை அருகே உள்ள கொத்தமங்கலத்தில், எங்கும் பசுமை போர்த்தியிருக்கும் மரங்களுக்கு நடுவே இருக்கிறது, விவசாயி வீரமணியின் வீடு. விருந்தாளிகள் அமர்வதற்கு வழக்கமாகப் போடப்பட்டிருக்கும் ஷோபாக்களுக்கு மாற்றாக, அங்கு கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களைக்கொண்டு செய்த அழகிய நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. கஜா புயலுக்கு முன்பு வரையிலும், வீட்டைச் சுற்றி வானளவு உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள், இன்று தென்னங்கீற்றுக் கொட்டகைக்குத் தூண்களாக நிற்கின்றன.

விவசாயி வீரமணியின் வீடு
விவசாயி வீரமணியின் வீடு

புயலால் சாய்ந்து விழுந்த மரங்கள் எதையும் அவர் வீணாக்கவில்லை. புயலில் சாய்ந்த பலா, தென்னை மரங்களைத் தூண்களாகக் கொண்டு தென்னங்கீற்றுக்கொட்டகை அமைத்திருக்கிறார். இப்படி வீரமணியின் வீட்டைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தெரிகிறது. அதில் முக்கியமானதுதான், வீட்டின் மேற்கூரையில் விழும் மழைநீரைச் சேகரித்து கிணற்றுக்குள் விடும் செயல்.

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து, மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி, மழைநீரை வீணாக்காமல் கிணற்றுக்குள் தேக்கி, அதைக் குடிநீராகப் பயன்படுத்துகிறார். கஜா புயலின்போது, மாவட்டத்தில் உள்ள அனைவருமே தண்ணீருக்காகத் தவித்தபோது, வீரமணி குடும்பத்துக்கு அந்த நிலை இல்லை. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் வீரமணியின் இந்தக் கிணற்று நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தினர்.

விவசாயி வீரமணி
விவசாயி வீரமணி

மரம், செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த விவசாயி வீரமணியிடம் இதுபற்றிப் பேசினோம். "எங்க பாட்டன் காலத்துல இந்தக் கிணற்றைக் கட்டியிருக்காங்க. நான் சின்னப் பையனா இருக்கும்போது, இந்தக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்துக்கிட்டே இருக்கும். அப்பெல்லாம், தண்ணீர் கஷ்டமே வந்தது இல்லை. 15 வருஷத்துக்கு முன்னால, இந்தக் கிணறு வீட்டுக்குப் பிரச்னையா இருக்குன்னு சொல்லி, அப்பா கிணற்றை மூடிட்டாரு. அதற்கப்புறம் தண்ணீருக்கு ரொம்பவே கஷ்டப்பட்டோம். இப்போ, கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, 500 அடி போர்வெல் போட்டோம். அதிலயும் தண்ணீர் கிடைக்கலை.

இந்தப் பகுதியில் இன்னைக்கு, நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்குப் போயிருச்சு. தண்ணீருக்கும் ரொம்பவே கஷ்டம் ஏற்பட்டுப்போச்சு. பலரும் வேறு வழி இல்லைனு சொல்லி குடிநீரை காசு கொடுத்து வாங்குறாங்க. எனக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை. போர்வெல்லில் தண்ணீர் இல்லை. என்ன செய்யலாம்னு யோசித்தபோதுதான், மழைநீர் சேகரிப்பு ஐடியா வந்துச்சு. தூர்ந்துகிடந்த கிணற்றை சரிசெய்யலாம்னு திட்டமிட்டேன்.

விவசாயி வீரமணியின் வீடு
விவசாயி வீரமணியின் வீடு

இதுபற்றி வீட்டிலயும் சொன்னேன். மொதல்ல என்னோட மனைவியே, அதெல்லாம் வேண்டாம்ன்னுதான் சொன்னாங்க. முழுசா தூர்ந்து கெடுக்குற கிணற்றை தூர்வாரப் போறானாம்ல என்று உறவினர்கள் எல்லாம் சொல்லி கேலி பண்ணாங்க. ஆனா, அது எதையும் பெரிசா எடுத்துக்கலை. என்னோட முடிவில் ரொம்பவே உறுதியா இருந்தேன். நாங்க குடியிருக்கிற இந்த இடம் இப்போ சோலை மாதிரி இருக்குது.

சோலை மாதிரி இருக்கிற இந்த இடத்தை, தண்ணீர் இல்லாம 10 வருஷம் கழிச்சுப் பார்த்தா எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்துச்சு. உடனே, எதைப்பத்தியும் யோசிக்கலை. கிணற்றைத் தூர்வார ஒரே ஆளா களத்துல இறங்கிட்டேன். மொதல்ல கூலிக்குக்கூட ஆட்கள் யாரும் வரலை. 3 மாசம் வரைக்கும் தனி ஆளாத்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செஞ்சேன். அப்புறம் மனைவி ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க. அதுக்கப்புறம், உறவுக்காரங்க சிலர் உதவிக்கு வந்தாங்க. ஒரு வழியா கிணற்றைத் தூர்வாரி, முழுசா சரி பண்ணிட்டோம். பிறகு, வீட்டின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் வீட்டின் மேற்கூரையில் இருந்து விழும் தண்ணீர் வெளியே செல்லாதபடி, இரும்புத்தகரங்களைப் பக்கவாட்டில் அமைத்து, பைப்புகள்மூலம் மழைநீரை கிணற்றுக்குள் கொண்டு செல்லும் மழைநீர் சேகரிப்பு முறையை ஏற்படுத்தினேன்.

சோலை மாதிரி இருக்கிற இந்த இடத்தை, தண்ணீர் இல்லாமல் 10 வருஷம் கழிச்சுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்துச்சு.
விவசாயி வீரமணி
விவசாயி வீரமணி
விவசாயி வீரமணி

வீட்டின் மேற்கூரையில் விழும் ஒரு துளி மழைநீர்கூட வீணாகாது. மழைநீர் கிணற்றுக்குள் செல்வதற்கு முன்பு 3 வகையான ஃபில்ட்டர்கள் (சல்லடைகள்) வைத்துள்ளேன். மேற்கூரையில் இருந்து வரும் தூசுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, சுத்தமான நீர் மட்டும் கிணற்றுக்குள் செல்லும். கிணற்றுக்குள் மோட்டார் ஒன்றைப் பொருத்தி, அதிலிருந்து தண்ணீரை எடுத்து குடிநீருக்காகவும் மரம், செடி கொடிகளுக்குப் பாய்ச்சவும் தினமும் பயன்படுத்திவருகிறேன்.

அரைமணி நேரம் தூரல் விழுந்தால், அதில் ஒரு துளிகூட வீணாகாமல் சேகரித்தால்தான் தெரியும் எவ்வளவு நீரை நாம் வீணாக்குகிறோம் என்று. ஒரு நாள் மட்டும் நல்ல மழை பெய்தாலே போதும், கிணறு முழுசா நெறஞ்சு 3 மாசத்துக்கு தண்ணீர்ப் பிரச்னை இருக்காது. மழை பெய்யாமல் போனால்தான் கஷ்டம். கஜா புயல் அடிச்சபோது, எல்லா பகுதியிலயும் குடிநீருக்குக் கடுமையான பஞ்சம். அந்தச் சமயத்துல எங்களுக்குத் தண்ணிப் பஞ்சம் இல்லை. இந்தக் கிணற்றுல இருந்து தெரிஞ்சவங்க, தெரியாதவங்க என்று எல்லாரும் எடுத்துக்கிட்டுப் போனாங்க. எனக்கு, தூர்ந்துபோன கிணற்றைத் தூர் வாரி மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தி, மழைநீரைச் சேகரிக்கிறதுக்கு 1 லட்சம் வரையிலும் செலவு ஆச்சு.

மகன்களுடன் விவசாயி வீரமணி
மகன்களுடன் விவசாயி வீரமணி

எல்லாரும் கிணறு அமைத்துதான் மழைநீர் சேகரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தங்கள் வசதிக்கேற்ப தொட்டி அமைத்து மழைநீரைத் தேக்கினால் போதும். அடுத்த தலைமுறைக்கு தண்ணீர்ப் பிரச்னை இருக்காது.

கிணற்றைத் தூர்வார ஆரம்பிச்சப்ப, என்னைக் கேலி செஞ்சவங்க, இன்னைக்கு மழைநீர் சேகரிப்பில் முன்னோடியா இருக்கிறதா சொல்லி பாராட்டுறாங்க. ஒவ்வொருவரும் இந்த மழைநீர் சேகரிப்பு முறையைப் பின்பற்றினால் போதும், நிச்சயம் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை விரைவில் நாம் உருவாக்க முடியும்" என்கிறார்.