Published:Updated:

மனிதனின் உணவுப்பழக்கமா, விலங்குகளிடமிருந்து பறிக்கப்பட்ட உறைவிடமா... எதனால் வந்தது கொரோனா?

விலங்குகள்
விலங்குகள் ( Piqsels )

தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 கொள்ளைநோய் சீனாவில் தோன்றி உலகத்தையே தன்னுடைய பிடியில் வைத்துள்ளது. இந்த நோயின் தோன்றலையும், பரவலையும் அறிந்துகொள்வதின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்கள் வருவதைத் தடுக்கலாம் என்பது குறித்து விளக்குகிறார் விஞ்ஞானி கார்த்திக் பாலசுப்பிரமணியன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா நோய் வந்ததிலிருந்து உலகின் சாதாரண குடிமகன் முதல் வல்லரசுகளின் அதிபர்கள்வரை அனைவரும் திட்டித்தீர்ப்பது சீனாவைத்தான். குறிப்பாக, சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை. இதற்கு வலுசேர்க்கும் விதமாக வாட்ஸ்அப்பில் உலா வரும் பல்வேறு காணொலிகளும் சீனர்கள் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவற்றை உட்கொள்வதாகக் காண்பிக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 கொள்ளைநோய் சீனாவில் தோன்றினாலும் இன்று உலகத்தையே தன்னுடைய பிடியில் வைத்துள்ளது. இப்போது சீனாவையோ, ஓர் இனக்குழுவையோ குறைகூறுவதால் பயனேதுமில்லை. மாறாக இந்த நோயின் தோன்றலையும், பரவலையும் அறிந்துகொள்வதின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.

வௌவால்
வௌவால்
நா.ராஜமுருகன்

இன்றுவரை உறுதிசெய்யப்படாமல் இருந்தாலும், பலரும் கூறுவதுபோல வௌவால்களில் இருந்து இந்த நோய் பரவியதாக வைத்துக்கொண்டாலும், இது வௌவால்களை உண்ணும் உணவுப் பழக்கத்தால் வந்த நோய் அல்ல. வௌவால்களின் உறைவிடத்தில் மனிதன் புகுந்ததுதான் இந்த நோய்க் கிளர்ச்சிக்குக் காரணம். உலகெங்கும் பொருளாதாரக் காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு மனித வாழிடங்களாக மற்றப்பட்டு வருகின்றன. இதனால் பல காட்டுயிர்கள் தங்களின் இயற்கை வாழிடங்களை இழந்து, மனிதர்களால் மாற்றப்பட்ட சூழல்களில் வாழ்கின்றன. நம் கண் முன்னே இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. சென்னையின் கிண்டி மற்றும் சுற்றுப்புறங்களில் தென்படும் புள்ளிமான்களும், மும்பையின் புறநகர் பகுதிகளில் இரவில் நாய்களை வேட்டையாடும் சிறுத்தைகளும் என... இந்தப் பெருநகரங்களின் காட்சிகளே அதற்கு சாட்சிகள்.

நம்மூர் வெளவால்களால் கொரோனா பரவாது... ஏன்? #SaveBats

புள்ளி மான்களோ, சிறுத்தைகளோ சமீபத்தில் வந்தவையன்று. அவை இதே நிலப்பரப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றன. நாம்தான் சமீபத்திய குடியேறிகள். இதே மான்களுக்கோ, சிறுத்தைகளுக்கோ, நாம் ஊட்டி, கொடைக்கானலுக்குப் போகும்போது உணவுப் பொருள்களைக் கொடுத்துப் பழக்கும் குரங்குகளுக்கோ, விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவும் கொரோனா போன்ற விலங்குவழி நோய்கள் (Zoonatic diseases) வரலாம். அப்போது நாம் யாரை குறைகூறுவது? நாம் பிச்சையெடுக்க வைத்திருக்கும் இந்த விலங்குகளையா அல்லது அவற்றின் உறைவிடங்களை அபகரித்துக்கொண்ட நம்மையா? இப்படித்தான்... நம்முடைய மோசமான பல்லுயிர் மேலாண்மைக் கொள்கைகளின் பலனாக உலகையே அழிக்கும் ஒரு கொள்ளைநோயை இங்கு கொண்டுவந்திருக்கிறோம்.

புனேயில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி கார்த்திக் பாலசுப்பிரமணியன்
புனேயில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி கார்த்திக் பாலசுப்பிரமணியன்

நாம் வௌவால்களைக் குறைகூறிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் வௌவால்கள் நமக்காக மாமரங்களில் மகரந்தச் சேர்க்கைகளில் ஈடுபட்டு, நமக்கு இந்த சீஸனுக்கான மாம்பழங்கள் தயாராக உழைத்துக் கொண்டிருக்கின்றன. வௌவால்கள் சூழ்நிலை மண்டலத்துக்குப் பல சேவைகளை இலவசமாக வழங்கிவருகின்றன. மனிதர்கள் இல்லாமல் வௌவால்கள் வாழலாம், ஆனால் வௌவால்கள் இல்லாமல் மனிதர்களால் வாழமுடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் வௌவால்கள் வேலைநிறுத்தம் செய்தால் பலகோடி மதிப்பிலான இழப்பைச் சந்திக்க நேரிடும்.
விஞ்ஞானி கார்த்திக் பாலசுப்பிரமணியன்

வௌவால்கள் மிகச்சிறந்த பூந்துகள் சேர்ப்பிகள் (pollinators). பழந்தின்னி வௌவால்கள், வியாபாரப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுதன் மூலம் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் பொருளாதாரத்துக்கு வழிவகுக்கின்றன. பூச்சி உண்ணி வௌவால்கள் பூச்சிகளை உண்பதன் மூலம் பல பயிர்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் பீடைப் பூச்சிகளைத் தின்று விவசாயிகளுக்கு உதவி செய்கின்றன. மேலும், பழங்களைத் தின்று கொட்டைகளை வேறு இடங்களில் போடுவதால் பல பழமரங்களின் விதைப் பரவலுக்கும் வழிவகுக்கின்றன. வௌவால்களின் எச்சம் மிகவும் பயனுள்ள எருவாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் வௌவால்கள் வேலைநிறுத்தம் செய்தால் பல கோடி மதிப்பிலான இழப்பைச் சந்திக்க நேரிடும். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தங்களுக்கென்று ஒரு தனிச்சிறப்பும், பிரத்யேக பாணியும் இருக்கும். ஆகையால் ஓர் உயிரினம் இன்றி மற்றொன்று தனித்து வாழ இயலாது.

காய்ச்சல்
காய்ச்சல்

கோவிட்-19 போன்ற விலங்குவழி நோய்கள், சீனா போன்ற, பல விலங்குகளை உண்ணும் நாடுகளிலிருந்துதான் வர வேண்டும் என்பது இல்லை. நம் நாட்டில், அதுவும் கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் `காசனுர் காட்டுக் காய்ச்சல்' என்ற உயிர்க்கொல்லி காய்ச்சல் குரங்குகளிலிருந்து மனிதனுக்கு உண்ணிகள் மூலம் பரவியிருக்கின்றன. இந்த நோய் 1950-களின் இறுதியில் கர்நாடகாவின் சிவமொகா மாவட்டத்தின் காசனுர் என்ற ஊரிலிருந்து அறியப்பட்டதால் இதற்கு `காசனுர் காட்டுக் காய்ச்சல்' என்று பெயர். இந்த நோய் ஒவ்வொரு வருடமும் கோடைக் காலத்தில் கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவி வருகிறது. மனித உடலில் தொற்று ஏற்பட்ட பின்பு 3 - 8 நாள்களில் நோய் அறிகுறிகள் தென்படும் என்றும், ஒவ்வொரு வருடமும் சுமார் 500 பேருக்கு இந்தக் காய்ச்சல் வருவதாகவும், இது 10% இறப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

`அது வெறும் காய்ச்சல் அல்ல... அமெரிக்கா மீதான அட்டாக்..!’ - ட்ரம்ப் காட்டம் #Corona

`காசனுர் காட்டுக் காய்ச்சல்' நோய்க்குத் தடுப்பூசி இருந்தாலும், அது 100% நோய்த் தடுப்பைச் செய்வதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நோய்க்கும், கொரோனா போலவே மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் நோய் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1950-களில் முதன்முதலில் அறியப்பட்ட இந்த நோயால் இதுவரை 9,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நோய் ஆரம்பத்தில் கர்நாடகாவின் ஒரு மாவட்டத்தில் இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பரவலை விரிவுபடுத்தி சில மாவட்டங்களுக்குப் பரவி, தற்போது அண்டை மாநிலங்களான கோவா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு என மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் பரவியிருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`காசனுர் காட்டுக் காய்ச்சல்' நோய் பரவியிருக்கும் எந்த மாநிலத்திலும் குரங்குகளையோ, பூச்சிகளையோ உண்ணும் வழக்கம் இல்லை. ஆனால், காடுகளை அழித்து வயல்களாக்குவது, மனித வாழ்விடங்களாக மாற்றுவது தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. விலங்குவழி நோய்கள் விலங்குகளை உண்பதால் வருவதைவிட, விலங்குகளின் வாழ்விடங்களை அழித்து நம் உறைவிடங்களாக மாற்றுவதால் வருவதே அதிகம்.

நம் பேராசையால் உலகின் பல அரிய காடுகள் அழிக்கப்பட்டு மனித வாழிடங்களாக மாற்றப்பட்டுவருவதால் மனிதர்களுக்கும் காட்டுயிர்களுக்குமான புழக்கம் மிகவும் அதிகரிக்கிறது. இதனால் விலங்குகளிலிருந்து வரும் விலங்குவழி நோய்கள் மனிதர்களைத் தாக்க வாய்ப்புகள் மிகவும் அதிகரிக்கிறது. உலகின் பல அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கொரானாவுக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கும் இந்த வேளையில், மற்றுமோர் உயிர்க்கொல்லி நோய் தலைதூக்காமல் இருக்க நாம் இயற்கையை மதித்து காட்டுயிர்களின் வாழ்விடங்களை அபகரிப்பதை நிறுத்த வேண்டும்.

- விஞ்ஞானி கார்த்திக் பாலசுப்பிரமணியன், அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம், புனே

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு