Published:Updated:

`இந்தியாவில் இங்கே மட்டும்தான் இருக்கு;ஆனால்..!’ -புதியவகை உயிரினம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ரா.சதீஸ்குமார்

நீலகிரிக் காடுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டே கெக்கோ எனப்படும் புதியவகை பல்லியினமும் மனிதச் செயல்களால் அழியும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Anandan’s day gecko
Anandan’s day gecko

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் (Nilgiri Biosphere Reserve), ஆசியாவின் பல்லுயிர் பெருக்க சூழல் மண்டலங்களில் மிக முக்கியப் பகுதியாக உள்ளது. இந்தியாவில் உள்ள 14 உயிர்ச்சூழல் மண்டலங்களில் பாதுகாப்பு, நில அமைப்பு மற்றும் இயற்கை கலாசார நிகழ்வுகள் போன்றவற்றின் அடிப்படையில், கடந்த 1986-ம் ஆண்டு, முதன் முதலாக உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 5,520 சதுர கி.மீட்டர் பரந்துவிரிந்துள்ளது.

Nilgiri Biosphere Reserve
Nilgiri Biosphere Reserve

நீலகிரியில் 3,300 வகையான பூக்கும் தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 132 வகை அழியும் பட்டியலில் உள்ளன. 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகை நீர் மற்றும் நிலவாழ் உயிரினங்கள், 300 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள், 39 வகை மீன்கள், 60 வகையான ஊர்வன ஆகியவை அழிவின் விளிம்பில் உள்ளன. இந்தியக் காடுகளில் உள்ள புலிகள் மற்றும் யானைகளில் பாதியளவு நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் உள்ளன.

இன்றளவும் பல உயிரினங்கள் கண்டறியப்படாமல் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், `Zoological survey of India' நிறுவனத்தின் சார்பில், சென்னகேசவமூர்த்தி, நிதேஷ் ,சுருதி சென்குப்தா, தீபக் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினர் நீலகிரி காடுகளில் ஊர்வனவற்றை தேடியலைந்தனர். அப்போது, புதிய வகை (Anandan’s day gecko) பல்லி இனம் ஒன்றை கண்டனர். அதை புகைப்படம் எடுத்து, வேறு இடங்களில் இது போன்று உள்ளதா என ஆய்வுசெய்தனர்.

Anandan’s day gecko
Anandan’s day gecko

அப்போது, இந்த அரியவகை பல்லியினம், கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து Zoological survey of India குழுவில் இருந்த காட்டுயிர் ஆய்வாளர் நிதேஷ் கூறுகையில், “நீலகிரியில் 7 அல்லது 8 வகையான கெக்கோ கண்டறியப்பட்டுள்ளது. [Nilgiri dwarf gecko ] டே கெக்கோ எனப்படும் இந்த வகை பல்லிகள், வால் இல்லாமல் 42 மி.மீ நீளம் கொண்டவை. சூழலுடன் ஒன்றிப்போகும் நிறத்தைப் பெற்றுள்ளன. இந்த வகை பல்லிகள், இந்தியக் காடுகளில் இங்கு மட்டுமே காணப்படுகின்றன.

Nithesh
Nithesh

வளம் மிகுந்த காட்டின் குறியீடாகக் கருதப்படும் இந்த உயிரினம், தற்போது காடுகளை விட்டு கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள்,சாலை ஓரங்களில் காணப்பட்டது. மேலும் ராசாயனங்கள், சாலை விபத்து போன்ற மனிதத் தவறுகள் இந்த உயிரினத்துக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, மிக அரிதாகக் காணப்படும் இந்த உயிரினம், அழியும் அபாயத்தில் உள்ளது” என்றார்.