Election bannerElection banner
Published:Updated:

கரூர்: அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக நீர் எடுப்பு... நீதிமன்றம் கூறியும் அரசின் மெத்தனம் ஏன்?

ஆய்வு செய்யும் அதிகாரிகள்
ஆய்வு செய்யும் அதிகாரிகள் ( நா.ராஜமுருகன் )

`முறையான நடவடிக்கை எடுக்கணும்' என்று நாங்க மனு கொடுத்துள்ளோம். ஆனா, அதிகாரிகள் முழுமையான நடவடிக்கை எடுக்கிற ஐடியாவுக்கு வரலை. வெறும் கண்துடைப்புக்காக மட்டும் அங்கே ஆய்வுக்கு வந்தாங்க. இல்லைன்னா, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்திருக்கணும். அப்படி செய்யலையே.

கரூர் அமராவதி ஆற்றங்கரை ஓரம், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலர் சட்டவிரோதமாகக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து லாரிகளில் விற்பனை செய்து வருவதாக வந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், சமூக ஆர்வலர்களோ, ``நாங்க கொடுத்த புகாரால் நடவடிக்கை எடுக்கலை. சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்ததால், கடமைக்கு நடவடிக்கை எடுத்திருக்காங்க" என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

அமராவதி ஆறு
அமராவதி ஆறு
நா.ராஜமுருகன்

கரூர் நகரை ஒட்டி ஓடுகிறது அமராவதி ஆறு. கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம் இரண்டையும் வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாக அமராவதி ஆறு உள்ளது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது.

இது, அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு, அமராவதி அணையில் தண்ணீர் தேக்கப்படுகிறது. அங்கிருந்து அமராவதி ஆறு வடகிழக்காக கொமரலிங்கம், தாராபுரம் பகுதி வழியாகப் பாய்ந்து, கரூர் நகரின் வழியாகச் சென்று, திருமுக்கூடலூர் அருகில் காவிரியுடன் கலக்கிறது.

அமராவதி ஆறு
அமராவதி ஆறு
நா.ராஜமுருகன்
கரூர்: அரசு குளத்தில் அனுமதியின்றி மோட்டார்? ; செத்து மிதக்கும் மீன்கள்!-கொந்தளிக்கும் விவசாயிகள்

கரூர் நகர மக்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு விளங்கியது. அதோடு, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் தண்ணீரைக் கொண்டு 20,000-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடந்தது. ஆனால், சாயக்கழிவு கலந்து, அமராவதி ஆறு விஷமாக, இங்கு நிலத்தடி நீரும் விவசாயமும் கெட்டுப்போனது. இதனால், சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தை நாடியதால், 100-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் கரூரில் மூடப்பட்டன.

இருந்தாலும், தற்போது இயங்கி வரும் 50-க்கும் அதிகமான சாயப்பட்டறைகளில் இருந்து அமராவதி ஆற்றில் சாயக்கழிவை கலக்கும் கொடுமை தொடர்ந்து நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நிலையில்தான், அமராவதி ஆற்றில் இருந்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலர் சட்டவிரோதமாக மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுத்து வந்தது அம்பலமாகி யிருக்கிறது. அமராவதி ஆற்றில் இருந்து இப்படி சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பது குறித்து, விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்தனர். ஆனாலும், அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆய்வு செய்யும் அதிகாரிகள்
ஆய்வு செய்யும் அதிகாரிகள்
நா.ராஜமுருகன்

அமராவதி ஆற்றங்கரையில் விதிகளை மீறி இயங்கி வரும் சாயப்பட்டறைக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த நீதிபதிகள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக சாட்டையை சொடுக்கியிருந்தனர். அதோடு, சென்னை கூவத்தை ஒப்பிட்டு கடுமையாகக் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், அமராவதி ஆற்றில் முறைகேடாகத் தண்ணீர் எடுக்கப்படுவதைத் தடுக்க, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தண்ணீர் ஏற்றம் செய்வதற்காகப் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை அகற்றி, அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதோடு, தண்ணீர் எடுக்க ஆற்றில் அவர்கள் அமைத்த உறைக்கிணறுகளைச் சுற்றி அமைத்த சிமென்ட் குழாய்களையும் பெயர்த்து எடுத்து வருகிறார்கள். மேலும், `சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமராவதி ஆற்றில் சாயக்கழிவு (பழைய படம்)
அமராவதி ஆற்றில் சாயக்கழிவு (பழைய படம்)
நா.ராஜமுருகன்

அமராவதி ஆற்றங்கரை ஓரம் உள்ள பெரிய ஆண்டாங்கோயில், பெரியார் நகர், ஆண்டாங்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட சட்டவிரோதமான குடிநீர் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, `அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான சண்முகம், ``அமராவதி ஆற்றை அதிகாரிகளின் துணையோடு சாயப்பட்டறை முதலாளிகள், விஷமாக்கிவிட்டார்கள். நாங்கள் எவ்வளவு புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இப்போது, அமராவதி ஆற்றில் முறைகேடாகத் தண்ணீர் எடுத்து வந்த விசயத்தையும் நாங்க தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகாரா தெரிவித்தோம். ஆனால், பழையபடி அவர்கள் நடவடிக்கை எடுக்காம, நாங்க கொடுத்த புகாரை காற்றில் பறக்கவிட்டாங்க. இந்த நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றம் வேறு ஒரு வழக்குக்காகக் கண்டித்ததைத் தொடர்ந்து, நாங்க கொடுத்த புகாரின் பேரில், கடமைக்கு போய் ஆய்வு பண்ணினாங்க. மோட்டார்களை மட்டும் அகற்றிவிட்டு, `சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'னு பேட்டி தர்றாங்க.

சண்முகம் (சமூக ஆர்வலர்)
சண்முகம் (சமூக ஆர்வலர்)
நா.ராஜமுருகன்

`முறையான நடவடிக்கை எடுக்கணும்' என்று நாங்க மனு கொடுத்துள்ளோம். ஆனா, அதிகாரிகள் முழுமையான நடவடிக்கை எடுக்கிற ஐடியாவுக்கு வரலை. வெறும் கண்துடைப்புக்காக மட்டும் அங்கே ஆய்வுக்கு வந்தாங்க. இல்லைன்னா, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுதிருக்கணும். அப்படி செய்யலையே. இப்படிப்பட்ட அதிகாரிகள் இங்கே பணியில் இருக்கும் வரை, அமராவதி ஆற்றை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு