Published:Updated:

`ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுத்தால் மட்டும் ஆபத்து இல்லையா?' - கொதிக்கும் டெல்டா விவசாயிகள்

ஹைட்ரோ கார்பன் அபாயம் எப்போது நிரந்தரமாக நீங்குமென தமிழக மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். குறிப்பாக, கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

காவிரி பாசன மாவட்டங்களையொட்டியுள்ள ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மிகுந்த ஆதங்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ``பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, காவிரி டெல்டா மாவட்டங்களையொட்டியுள்ள பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தொடர்ச்சியாக இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப்  போராட்டம்
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டம்

``நிலப்பகுதியில் மட்டுமல்ல, ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தாலும் கடும் ஆபத்துகள் நேரும்’’ என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன் எச்சரிக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய இவர், ``காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம், கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பெட்ரோ-கேஸ் எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் குழாய்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் குழாய்

இந்நிலையில்தான் இப்பகுதிகளில் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டியது. டெல்டா மக்களின் கடும் எதிர்ப்புகளால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமும் மக்களை அச்சுறுத்தியது. இதுபோன்ற பேராபத்துகள் தொடர்ந்து கொண்டே இருந்ததால்தான், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதை ஏற்றுதான் தமிழக அரசு, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமியற்றியது. ஆனாலும் கூட, இனி எந்த ஓர் ஆபத்தும் இல்லையென தமிழக மக்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஐந்தாம் கட்ட ஏலத்தில், இந்திய அளவில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு 7 இடங்களிலும், ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு 4 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்து, நவம்பர் 17-ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓ.என்.ஜி.சி-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 7 இடங்களில், காவிரி டெல்டாவையொட்டியுள்ள ஆழ்கடல் பகுதியும் இடம்பெற்றுள்ளது. காரைக்கால் - பாண்டிச்சேரி வரையிலான ஆழ்கடல் பகுதியில் 4064.22 சதுர கிலோமீட்டரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, ஓ.என்.ஜி.சி-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில்தானே இதைச் செயல்படுத்தப்போகிறார்கள், இதனால் கவலைப்பட வேண்டியதில்லை என அலட்சியமாக இருந்துவிட முடியாது. இதிலும் பல பேராபத்துகள் ஏற்படும். நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி, நீரியல் விரிசல் முறையில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பாரதிச்செல்வன்
பாரதிச்செல்வன்

இதனால் கடல் நஞ்சாகும். முதல்கட்டமாக நச்சுத்தன்மை வாய்ந்த மீன்களை மக்கள் சாப்பிட வேண்டிய நிலை உருவாகும். இதனால் பலவிதமான நோய்கள் உருவாகி உடல்நலம் பாதிக்கப்படும். ஒருகட்டத்தில் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோய் மீனவர்களின் வாழ்வாதாரம் கைவிட்டுப்போகும். தேவையற்ற வாயுக்களை எரிக்கும்போது காற்று நஞ்சாகும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். எனவே, தமிழக மக்களைப் பாதுகாக்க, எதிர்கால தலைமுறையைக் காப்பாற்ற இத்திட்டத்தைத் தடுத்து தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

ஹைட்ரோ கார்பன் அபாயம் எப்போது நிரந்தரமாக நீங்குமென தமிழக மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். குறிப்பாக, கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு