Published:Updated:

கலங்கடிக்கும் காட்டுத்தீ... ஏன், எப்படி, இனி என்ன?

காட்டுத்தீ
பிரீமியம் ஸ்டோரி
காட்டுத்தீ

பொதுவாகவே ஒரு வருடத்தில் குறிப்பிட்ட சில நாள்கள் காட்டுத்தீக் காலமாகக் (Fire Season) கருதுவார்கள். அதாவது அந்த நாள்களில் காடுகளில் தீப்பற்றிகொண்டு பரவுவதற்கான தட்பவெட்பம் சரியாக அமைந்திருக்கும்.

கலங்கடிக்கும் காட்டுத்தீ... ஏன், எப்படி, இனி என்ன?

பொதுவாகவே ஒரு வருடத்தில் குறிப்பிட்ட சில நாள்கள் காட்டுத்தீக் காலமாகக் (Fire Season) கருதுவார்கள். அதாவது அந்த நாள்களில் காடுகளில் தீப்பற்றிகொண்டு பரவுவதற்கான தட்பவெட்பம் சரியாக அமைந்திருக்கும்.

Published:Updated:
காட்டுத்தீ
பிரீமியம் ஸ்டோரி
காட்டுத்தீ
‘காலநிலை பற்றி அறிவியலுக்குத் தெரியாது’ (‘I don’t think science knows about climate’) டொனால்டு ட்ரம்ப்பின் வார்த்தைகள் இவை. வரலாறு காணாத காட்டுத்தீக்களால் கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் ஆகிய மேற்கு அமெரிக்க மாகாணங்கள் பலவும் எரிந்துகொண்டிருக்க, இப்படிப் பேசியிருக்கிறார் ட்ரம்ப். இதுவரை இந்தக் காட்டுத்தீக்களுக்கு 66 லட்சம் ஏக்கர் காடுகள் இரையாகியிருக்கின்றன, ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், 37 பேர் இறந்துள்ளனர். பல வாரங்களாக எரிந்துகொண்டிருக்கும் இந்தத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகையால் மொத்த மேற்கு அமெரிக்காவும் சூழப்பட்டிருக்கிறது. இதே போன்றுதான் கடந்த வருடம் அமேசான், ஆஸ்திரேலியா கொழுந்துவிட்டு எரிந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாகவே ஒரு வருடத்தில் குறிப்பிட்ட சில நாள்கள் காட்டுத்தீக் காலமாகக் (Fire Season) கருதுவார்கள். அதாவது அந்த நாள்களில் காடுகளில் தீப்பற்றிகொண்டு பரவுவதற்கான தட்பவெட்பம் சரியாக அமைந்திருக்கும். இந்தக் காலகட்டத்தில் காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ‘காட்டுத்தீக்காலம்’ எனக் கருதப்படும் இந்த நாள்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் காட்டுத்தீ சம்பவங்களும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கலிபோர்னியா மாகாணம் இதுவரை சந்தித்திருக்கும் மிக மோசமான 20 காட்டுத்தீக்கள் 2015-க்குப் பிறகு பற்றி எரிந்தவைதான். இப்போது எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்களில் ‘August Complex’ என்ற காட்டுத்தீ மட்டும் 8.4 லட்சம் ஏக்கர் காடுகளை எரித்துள்ளது. இதுவரை 38% தான் இது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கலங்கடிக்கும் காட்டுத்தீ... ஏன், எப்படி, இனி என்ன?

இது இயற்கைப் பேரிடர்தானா?

பல இயற்கையான காரணங்கள் இருந்தபோதும் ‘காட்டுத்தீக்காலம்’ அதிகரித்திருப்பதற்கான காரணங்களுள் காலநிலை மாற்றம்தான் மிக முக்கியமானது எனத் தீர்மானமாகச் சொல்லியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிக வெப்பம், காற்றில் குறையும் ஈரப்பதம், குறைந்த மழை, வேகமான காற்று எனக் காட்டுத்தீ சடசடவெனப் பரவ அனைத்து வாய்ப்புகளையும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. இதே குழுதான் ஆஸ்திரேலியக் காட்டுத்தீ எப்படி நிகழ்ந்தது என ஆய்வு செய்தது. ‘இன்று எட்டிலிருந்து பத்துமடங்கு வரை காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்றால் அதற்குக் காலநிலை மாற்றம் மட்டுமே முழு முதற்காரணம். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்’ என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட முனைவர் மேத்யூ ஜோன்ஸ்.

அறிவியல் இப்படி ஒரு விளக்கத்தை முன்வைக்க, ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதுதான் ‘காலநிலை பற்றி அறிவியலுக்கு எதுவும் தெரியாது’ என்றார் அவர். ‘எல்லாம் தானாகக் கட்டுக்குள் வந்துவிடும், பொறுத்திருந்து பாருங்கள்’ என்று ஆருடமும் சொன்னார். இந்தக் காட்டுத்தீக்களுக்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற காட்டு மேலாண்மைதான் என்கிறார் ட்ரம்ப். 2018-ல் இதேபோல கலிபோர்னியாவில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்தபோது பின்லாந்தை மேற்கோள் காட்டி, “அவர்களைப்போல நாமும் காடுகளைத் தூர்வார வேண்டும்” என்றார். அது என்ன காடுகளைத் தூர்வாருவது என்கிறீர்களா? நாம் தோட்டத்தில் உதிரும் இலைகளையெல்லாம் அவ்வப்போது அப்புறப்படுத்துவோமே, அப்படிக் காடுகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமாம். அந்த இழைகள் மற்றும் கொடிகள்தான் தீப்பற்றிக்கொள்ள முக்கிய காரணம் என்பது ட்ரம்ப்பின் வாதம்.

ட்ரம்ப் சொல்வதுபோல தூர்வாரவேண்டும் என்றில்லை, முறையாகக் காடுகளை மேலாண்மை செய்தால் ஓரளவு காட்டுத்தீக்களைக் கட்டுப்படுத்தமுடியும் என்பது உண்மைதான். ஆனால், அதிலும் கோட்டை விட்டிருக்கிறது அமெரிக்கா. சொல்லப்போனால் ‘இதுவரை இந்தப் பகுதிகளுக்குக் காட்டுத்தீ வந்ததே இல்லை’ என முந்தைய வரலாற்றை மட்டும் பார்த்து, காட்டுத்தீ பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் இப்போது அதிகம் பேர் குடியேறி வருகின்றனர். இவர்கள் அனைவருமே நேரடியாகக் காட்டுத்தீயின் ஆபத்துக்குள்ளா கின்றனர். இப்படி உருவாகும் குடியிருப்புகளுக்கு வெளியே திறந்தவெளி ஸ்டேடியங்கள், புல்வெளிகள் போன்றவற்றை அமைப்பதன் மூலமும் காட்டுத்தீயைப் பரவவிடாமல் தடுக்கமுடியும். அதுவும் பெரும்பாலான இடங்களில் செய்யப்படுவதில்லை. இதனால்தான் இதுபோன்ற பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் நிகழும்போது பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

இன்னொரு சிக்கல், அமெரிக்கா பலகாலமாக எப்படி காட்டுத்தீக்களைக் கையாண்டுவருகிறது என்பதில் இருக்கிறது. 1910-ல் கலிபோர்னியாவில் ஒரு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவம் ஏற்பட்டது. இதை ‘Great Fire of 1910’ எனக் குறிப்பிடுவார்கள். இது அமெரிக்காவில் அப்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான ஏக்கர் காடுகள் தீக்கு இரையாகின. 87 பேர் உயிரிழந்தனர். அப்போது அமெரிக்க அரசு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முக்கியக் கொள்கை ஒன்றைக் கொண்டுவந்தது. அதன்படி காட்டுத்தீக்களைக் கட்டுப்படுத்த அதிக அளவில் பணம் ஒதுக்கப்பட்டது. இதன் விளைவாகப் பல காட்டுத்தீக்கள் முழுவதுமாக எரிந்து முடிப்பதற்குள் அணைக்கப்பட்டன. காட்டுத்தீ முழுவதுமாக எரிந்து மீண்டும் மரங்கள் வளர்ந்து செழிப்பதுதான் இயற்கையான சுழற்சி. இது தடைப்பட்டுவிடுவதால் குறுகிய இடைவெளிக்குள் மீண்டும் மீண்டும் காட்டுத்தீக்கள் பெரிதாகப் பரவுகின்றன என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.

இப்படிப் பல காரணங்களும், தடுப்பு நடைமுறைகளும் இருக்க, எதைப்பற்றியும் கவலைப்படுவதாக இல்லை ட்ரம்ப். கொரோனாவைக் கையாண்டதைவிட அலட்சியமாகக் காட்டுத்தீ விவகாரத்தைக் கையாண்டுவருகிறார். அமேசான், ஆஸ்திரேலியா போன்ற காட்டுத்தீ சம்பவங்கள் சமீபத்தில்தான் நடந்திருக்கின்றன என்றாலும் ‘நம்மைப் போன்ற பிரச்னையை எந்த நாடும் சந்திக்கவில்லை. நம்மைவிடத் தீப்பற்றக்கூடிய மரங்கள் அதிகம் இருக்கும் காடுகளைக் கொண்ட நாடுகள்கூட இப்படியான பிரச்னைகளைச் சந்திப்பது இல்லை’ என்று மாகாண அரசைக் குற்றம் சாட்டுகிறார் ட்ரம்ப். காரணம், கலிபோர்னியாவில் இருப்பது எதிர்க்கட்சி. தேர்தலும் நெருங்கி வருகிறது.

கலங்கடிக்கும் காட்டுத்தீ... ஏன், எப்படி, இனி என்ன?

காலநிலை மாற்றத்தை ட்ரம்ப் உதாசீனப் படுத்துவது இது முதல்முறையும் அல்ல. பலகாலமாகவே காலநிலை மாற்றம் என்று ஒன்று இல்லவே இல்லை, அது ஒரு கட்டுக்கதை என்றுதான் பேசிவருகிறார் ட்ரம்ப். அவர் மட்டுமல்ல வலதுசாரி தலைவர்கள் பலரும் இதே போன்றுதான் காலநிலை மாற்றத்தைக் கையாண்டுவருகின்றனர். கடந்த வருடம் அமேசான் காடுகள் பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது ஸ்டாண்ட்-அப் காமெடி பார்த்துக்கொண்டிருந்தார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. தேர்தல் பரப்புரை யிலேயே மழைக்காடுகளை வேளாண்மை மற்றும் கனிமச் சுரங்கத்துக்குக் கையளிப்பேன் என்று அறிவித்தவர் போல்சோனரோ. ‘காலநிலை மாற்றமா, அது எந்தக் கடையில் கிடைக்கும்’ என்றுதான் இவரும் இருக்கிறார். முதுகெலும்புள்ள சில நாடுகள் மட்டுமே இந்தப் போக்கை எதிர்த்துக் குரல் கொடுத்துவருகின்றன. அவையும் அமெரிக்காவுக்கு எதிராக வாய்திறக்காது.

“சும்மா சும்மா காலநிலை மாற்றம் எனச் சொல்லாதீர்கள். காலநிலை மாற்றம் ஒரு பிரச்னை என இந்தியா சும்மா இருக்கப்போகிறதா, சீனா அதன் நடைமுறைகளை மாற்றப்போகிறதா, இல்லை ரஷ்யாதான் மாறப்போகிறதா?” என்ற வாதத்தை முன்வைக்கிறார் ட்ரம்ப். இப்படி ட்ரம்ப் சொல்வதற்குப் பின்னணியில் இருக்கும் உலக அரசியல் ஆழமானது. இன்று வளர்ந்த நாடுகள் எனக் குறிப்பிடப்படும் பல நாடுகளும் கடந்த நூற்றாண்டில் இயற்கை வளங்களைச் சுரண்டி, அதிக மாசு ஏற்படுத்திப் பெரிய முன்னேற்றம் கண்டுவிட்டன. இன்று காலநிலை மாற்றம் என்ற விவாதம் உருவெடுக்கும்போது அந்த நாடுகளால் மாற்றுவழிகளைத் தேடிச் செல்ல முடிகிறது. ஆனால், வளர்ந்துவரும் நாடுகள், காலநிலை மாற்றத்தை வளர்ச்சிப் பாதையில் ஒரு தடைக்கல்லாகத்தான் பார்க்கின்றன. ஆனால், ‘அவர்கள் செய்தார்கள் என்பதால் நானும் செய்வேன்’ என்பது சரியான வாதம் ஆகாது. இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகள்தான் வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளுக்கு உதவ வேண்டும். மாற்றுவழிகளை முன்னெடுத்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப்போ ‘இந்தியாவைப் பாருங்கள்’ என்று பேசிக்கொண்டிருக்கிறார். சீனாவைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியாவும் தற்போது பின்வாங்குவதாக இல்லை. சமீபத்திய EIA கொள்கை அதற்கு ஒரு சான்று. இப்படி ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கைகாட்டிக் கொண்டே இருந்தால் மீள்வதற்கான இடைவெளியே இல்லாமல் இயற்கைப் பேரிடர்களில் சிக்கும் சுழல் சீக்கிரம் வரும்.

இன்னும், நாம் வாழ்வதற்கு ஒரு பூமிதான் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பார்ட்டியால் பற்றிய தீ!

மனிதனால் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. கார் டயர் உரசிய சிறு பொறியிலிருந்துகூட பெரிய காட்டுத்தீக்கள் பற்றிக்கொண்டுள்ளன. காடுகள் அருகில் இருக்கும் எலக்ட்ரிக் கம்பங்கள் சில காட்டுத்தீக்களைப் பற்ற வைத்துள்ளன. ஆனால், மேற்கு அமெரிக்காவில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் பல காட்டுத்தீக்களில் ஒரு பெரிய காட்டுத்தீ ஒரு ஜாலி பார்ட்டியினால் பற்றிக்கொண்ட தீ. மேற்கத்திய நாடுகளில் 'Gender Reveal' பார்ட்டிகள் தற்போதைய பாப்-கல்ச்சர் ட்ரெண்ட். பிறக்கப்போவது பையனா, பெண்ணா என்பதை முதல்முறை உலகத்திற்குச் சொல்லவே இந்த 'Gender Reveal' பார்ட்டிகள் நடத்தப்படுகின்றன. நீலம் என்றால் ஆண், இளஞ்சிவப்பு என்றால் பெண். கேக்கின் உள்ளே ஒரு நிறத்தை வைத்து அதை வெட்டுவது, விமானத்தில் கலர்ப் பொடி தூவுவது என ஏதாவது ஒரு முறையில் சர்ப்ரைஸாக பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் என்னவென்று உலகத்திற்குச் சொல்லுவார்கள். சமீபத்தில் துபாயில் உள்ள மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவை ஒளிர்வித்து Gender Reveal செய்தது ஒரு ஜோடி. இப்படி வெடிகளைப் பயன்படுத்திய Gender Reveal பார்ட்டி ஒன்றால்தான் 20,000 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் இதுவரை காட்டுத்தீயால் கருகிப்போயிருக்கின்றன. இன்னும் அந்தப் பார்ட்டியால் பற்றிய தீ அணையவில்லை. இப்படியான சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையும் கிடையாது. இதை முதல் முதலாக ட்ரெண்ட்டாக்கியவரே `வேணாம் இதோட நிறுத்திக்குவோம்' எனச் சொல்லும் அளவு இந்தப் பார்ட்டிகளால் பல விபத்துகள் இதுவரை நடந்திருக்கின்றன!

பாரிஸ் ஒப்பந்தம்

பல வருடப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியாக 2015-ல் 200 நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 'காலநிலை மாற்றம்' என்ற ஒற்றைப் பிரச்னைக்குத் தீர்வு காண மொத்த உலகத்தையும் ஒன்றிணைக்கும் ஒப்பந்தம் இது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க உரிய முயற்சிகளை நாடுகள் மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் இந்த ஒப்பந்தம். கடந்த வருடம் அனல்மின் சக்தியைவிடச் சூரிய மின்சக்தியில் அதிக முதலீடுகள் செய்தது இந்தியா. 2030-ல் கார்பன் வெளியேற்றத்தை முடிந்த அளவு குறைப்போம் என வாக்கு கொடுத்திருக்கிறது இந்தியா. ரஷ்யா, சீனாவும்கூட இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், அமெரிக்கா மட்டும் முடியவே முடியாது எனத் தற்போது ஒற்றைக் காலில் நிற்கிறது. ஒபாமா ஆட்சியில் இருக்கும்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் ட்ரம்ப்பின் ஆசை. ஏற்கெனவே ஒபாமா கொண்டுவந்த சூழலியல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தையும் நீக்கிவிட்டார் ட்ரம்ப். காலநிலை மாற்றம் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்கிறார். அமெரிக்காவின் முயற்சிகள் இல்லாமல் காலநிலை மாற்றத்தைத் தடுப்பது என்பது முடியாத காரியம். ஆனால், விரைவில் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகி அதை அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெற ஒரு முக்கிய விஷயமாகச் சொல்லப்போகிறாராம் ட்ரம்ப். மறுபுறம், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2050-க்குள் ஜீரோ கார்பன் வெளியிடும் நாடாக அமெரிக்காவை மாற்ற வேண்டும் என்கிறார். அதனால் மொத்த பூமியின் எதிர்காலமுமே இப்போது அமெரிக்க வாக்காளர்கள் கைகளில்தான் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism