Published:Updated:

`தமிழகத்தில் 17.7% காடுகளே இருக்கின்றன!' - மாமல்லபுரத்தில் நடப்பட்ட 5,000 மரக்கன்றுகள்

ஒரு மரத்தை நட்ட உடனே சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொள்கிறோம். பறவைகளோ பலன் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

மரம் நடுவிழா
மரம் நடுவிழா

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் ஒரே நேரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஊருணி அறக்கட்டளை, மேட்லைஃப் நிறுவனம், அரிமா சங்கம் மற்றும் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். மரங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார் சிற்பக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்.

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி மரம் நடுவிழா
மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி மரம் நடுவிழா

எழில்சோலை அறக்கட்டளை நிறுவனர் மாசிலாமணி 2,000 மரக்கன்றுகளை நிகழ்ச்சிக்குக் கொண்டு வந்திருந்தார். அவருடன் அப்பகுதி விவசாயியான இறையழகனும் மரக்கன்றுகளுடன் வந்திருந்தார். மரங்களின் அவசியம் குறித்து பேசிய மாசிலாமணி, ``எல்லோரும் மரம் நடுகிறோம். மரம் நடும்போதே, இந்த மரம் எவ்வளவு பழம் கொடுக்கும்? எவ்வளவு பணம் கொடுக்கும் எனப் பலனைக் கணக்கிட்டு, அந்த மரத்தை நடுகிறோம். இந்த எதிர்பார்ப்பு மனிதர்களிடம் நிறைய இருக்கிறது. ஆனால், மற்ற உயிரினங்கள் எந்தப் பலனையும் எதிர்பார்ப்பதில்லை.

பறவைகள் எச்சத்தில்தான் பெரிய காடுகளே உருவாகி இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது 17.7 சதவிகிதம்தான் காடுகள் இருக்கின்றன. காடுகளை உருவாக்குவதற்கும் மனிதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உயிரினங்களைப் பாதுகாத்தாலே காடுகள் தானாக உருவாகிவிடும். மனிதர்கள் காடுகளை அழிக்காமல் இருந்தாலே போதும். பறவைகள் எங்கெல்லம் எச்சம் இடுகிறதோ, அங்கெல்லாம் மரங்கள் உருவாகிவிடுகின்றன.

மரக்கன்று நடும் பணியில் இளைஞர்கள்
மரக்கன்று நடும் பணியில் இளைஞர்கள்

மனிதன் நடும் மரங்கள் அந்த அளவுக்கு சரியாக வளருவதில்லை. மரங்களை லட்சக்கணக்கில் செலவு செய்து, நாம் நடுகிறோம். எந்தச் செலவும் செய்யாமல் பறவைகள் காடுகளை வளர்க்கின்றன. பறவைகளைப் பாதுகாக்கும் வகையில் பழ மரக்கன்றுகளை நட வேண்டும்.

ஒரு மரத்தை நட்ட உடனே சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொள்கிறோம். பறவைகளோ பலன் எதையும் எதிர்பார்ப்பதில்லை” என்றார். மேலும், மரங்களை எப்படி நட வேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் மரம் நடுவிழா
மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் மரம் நடுவிழா

நெல்லி, மா, முந்திரி, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 5,000 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டன. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களும் மாணவர்களும் ஆர்வத்தோடு மரங்களை நட்டனர். அவர்கள் நடவு செய்த மரங்களுக்கு மழை, தண்ணீர் ஊற்றி வாழ்த்தியது!