Published:Updated:

நீலகிரி: மேலும் ஒரு செந்நாய் உயிரிழப்பு! - தொடரும் முதுமலை சர்ச்சை

செந்நாய்
செந்நாய்

முதுமலை புலிகள் காப்பகத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்த செந்நாய்கள் விஷம் கலந்த இறைச்சியை உண்டு இறந்திருக்கலாம் என விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் அடிப்படையில் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் ஏற்கெனவே நான்கு செந்நாய்கள் மர்மமான முறையில் இறந்தநிலையில் நேற்று மேலும் ஒரு செந்நாய் இறந்திருக்கும் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செந்நாய்கள்
செந்நாய்கள்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வெளி மண்டலத்துக்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகம், விபூதிமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியின்போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க நான்கு செந்நாய்கள் [Wild Dogs] இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவற்றின் உடலைக் கைப்பற்றி அதிகாரிகள் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஆச்சக்கரை பகுதியில் மேலும் ஓர் ஆண் செந்நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியிலேயே செந்நாயின் உடல்உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் ஐந்து செந்நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிலையில் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

செந்நாய்
செந்நாய்

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், ``சிங்காரா வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் நான்கு செந்நாய்கள் இறந்தநிலையில், இன்று மேலும் ஓர் ஆண் செந்நாய் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே இறந்த நான்கு செந்நாய்களின் வயிற்றிலிருந்ததுபோல், இதன் வயிற்றிலும் புள்ளிமானின் இறைச்சி இருந்தது. விஷமேறிய இறைச்சியை உண்டதால் செந்நாய்கள் இறந்திருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சிங்காரா வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கூடலூர் நீதித்துறை நடுவரிடம் வழங்கப்பட்டுள்ளது. செந்நாய்கள் இறந்தது தொடர்பாக விசாரிக்கவும், வேறு செந்நாய் அல்லது பிற உயிரினங்கள் ஏதேனும் இந்தப் பகுதியில் இறந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய, தனிப்படை அமைத்திருக்கிறோம்" என்றார்.

நீலகிரி: எந்தக் காயமும் இல்லை... அடுத்தடுத்து இறந்துகிடந்த செந்நாய்கள்! - முதுமலை மர்மம்

சூழலியல் ஆர்வலரும் `கூடுகள்’ அமைப்பின் நிறுவனருமான ஊட்டி சிவதாஸ், ``இது போன்ற மரணம் இயற்கையானது அல்ல. மக்கள் வசிப்பிடங்களில் காட்டுயிர்கள் இறப்பது நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தொடர்கதையாக நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. புலிகள் காப்பகம், யானை வழித்தடம் என மிக முக்கியமான இதயப்பகுதியில் இது போன்ற ஒரு துயர நிகழ்வு நடக்கிறது என்பது மிகவும் வருத்தத்துக்கு உரிய செய்தி. அழிவின் பட்டியலில் இருக்கக்கூடியது செந்நாய். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இது, முதுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மிகச் சிறந்த ஓர் ஆளுமையை ஏற்படுத்தி, தன்னுடைய வம்சத்தைக் கட்டுக்குள்வைத்து, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.

செந்நாய்
செந்நாய்

இந்த இழப்பை பொறுத்தவரை இது மிகவும் வேதனைக்கு உரியது. அது மட்டுமல்ல; இதை, தேசிய அளவிலான கானுயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பின் முக்கியமான அம்சமாக எடுத்துக்கொண்டு, இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என வனத்துறையும் மத்திய அரசும் யோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு