Published:Updated:

ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே வைக்கும் பூநாரைகள்; ஏன் தெரியுமா? பறவை சூழ் உலகு - 9

பூநாரை ( photo: Naveen )

பூநாரை இளஞ்சிவப்பு கலந்த வெண்ணிற உடலைக் கொண்டிருக்கும். அலகு மற்றும் கால்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். தடித்த அலகு வளைந்திருக்கும். பறக்கின்றபோது இறக்கைகளில் உள்ள கருநிறம் நன்றாகத் தெரியும்.

ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே வைக்கும் பூநாரைகள்; ஏன் தெரியுமா? பறவை சூழ் உலகு - 9

பூநாரை இளஞ்சிவப்பு கலந்த வெண்ணிற உடலைக் கொண்டிருக்கும். அலகு மற்றும் கால்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். தடித்த அலகு வளைந்திருக்கும். பறக்கின்றபோது இறக்கைகளில் உள்ள கருநிறம் நன்றாகத் தெரியும்.

Published:Updated:
பூநாரை ( photo: Naveen )

இந்தப் பகுதியில் நாம் காண இருக்கும் பறவை நாம் அனைவராலும் விரும்பப்படும் பூநாரை. இதற்கு `மண்வெட்டி வாயன்' என்ற பெயரும் உண்டு. அதனுடைய அலகு மண்வெட்டியைப் போல் வளைந்திருக்கும். ஆங்கிலத்தில் இப்பறவையை `கிரேட்டர் ஃபிளமிங்கோ' (Flamingo) என்றழைப்பர். இப்பறவையின் அறிவியல் பெயர் ஃபோனிகாப்டிரஸ் ரோசியஸ்.

கடலோரங்கள், உப்பளங்கள் மற்றும் ஆழம் குறைந்த குளங்கள், ஏரிகளில் சிறு அல்லது பெரிய குழுக்களாக இரைதேடும். ஆழம் குறைந்த பகுதிகளில் அதனுடைய கழுத்தை தாழ்த்தி தலையை முழுவதுமாக நீரில் மூழ்கி இரைதேடும். இறால்கள், நண்டுகள், பூச்சிகள், புழுக்கள், பாசிகள் போன்றவற்றைத் திண்ணும்.

பூநாரைகள் கூட்டமாக
பூநாரைகள் கூட்டமாக
Photo: Sankar Subramanian

பூநாரை இளஞ்சிவப்பு கலந்த வெண்ணிற உடலைக் கொண்டிருக்கும். அலகு மற்றும் கால்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். தடித்த அலகு வளைந்திருக்கும். பறக்கின்ற போது இறக்கைகளில் உள்ள கருநிறம் நன்றாகத் தெரியும். இப்பறவைகள் நமது தமிழ்நாட்டுக்கு வலசை வருகின்ற ஒரு பறவையாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை பள்ளிக்கரனை சதுப்புநிலம், கோடியக்கரை பறவைகள் சரணாலயம், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் உப்பளங்கள், தூத்துக்குடி மாவட்டம் முயல்தீவு, முள்ளக்காடு, பெருங்குளம், திருநெல்வேலி மாவட்டம் விஜயநாரயணம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி மணக்குடி உப்பளங்கள் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இப்பறவைகளைப் பார்க்க முடியும்.

குளங்களில் தண்ணீர் வற்றிய காலங்களில் திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம், குப்பைக்குறிச்சி போன்ற குளங்களிலும் சிறிய கூட்டங்களாக இப்பறவைகளைக் காண முடியும். கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி உப்பளங்களில் ஒரு சிறிய கூட்டம் வருடம் முழுவதும் காணப்படுகிறது. அதுகுறித்து விசாரித்தபோது வலசை வருகின்ற இளம்பறவைகள் இனப்பெருக்க பருவத்தை அடையும் வரை இங்கேயே தங்கிவிடுகிறது என்று சில பறவைகள் ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

பூநாரைகள்
பூநாரைகள்
photo: Sankar Subramanian

பூநாரைகள் இந்தியாவில் உள்ள கட்ச் வளைகுடாவில் கூடுகளை அமைக்கின்றன. அங்கு லட்சக்கணக்கில் இப்பறவைகள் இனப்பெருக்கம் செய்வதால் அப்பகுதியை பூநாரைகளின் நகரம் என்றழைக்கிறார்கள். தரையிலிருந்து 30 செ.மீ உயரத்துக்கு மண்ணைக் கொண்டு சிறிய பாத்திரம் அல்லது சட்டி போன்ற அமைப்பில் கூடுகளை இப்பறவைகள் அமைக்கின்றன. கூடுகள் காயக் காய சுடப்பட்ட மண்பாத்திரம்போல் இக்கூடுகள் மாறிவிடும் என்கிறார்கள் பறவைகள் ஆய்வாளர்கள். மனிதன் மண்பாண்டங்களைக் கண்டறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்பறவைகள் மண் சட்டிப் போன்ற கூடுகளை அமைத்துள்ளன. இதைக் கண்டுதான் மனிதன் மண்பாத்திரங்களை உருவாக்கியிருப்பான் என்று தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்பறவையானது வருடத்துக்கு ஒரேயொரு முட்டை மட்டும்தான் இடுகிறது. முட்டை குஞ்சு பொரிக்காமல் போனாலோ, மற்ற விலங்குகள் எடுத்துச் சாப்பிட்டுவிட்டாலோ மீண்டும் அந்தப் பருவத்தில் முட்டை இடுவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பூநாரை
பூநாரை
Photo: Prabu

பூநாரைகள் குஞ்சு பருவத்தில் சாம்பல் நிறத்தில்தான் இருக்கும். அவை சாப்பிடுகின்ற உணவுகளில் இருக்கின்ற கரோட்டினாய்டு நிறமிகள், இவைகளுக்கு இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. இந்த கரோட்டினாய்டு நிறமிதான் நாம் சாப்பிடுகின்ற கேரட்டுக்கும் ஆரஞ்சு நிறத்தை அளிக்கின்றன. கூட்டமாக இப்பறவைகள் நடத்துகின்ற அணிவகுப்பை காண்பதற்கு கண்கோடி வேண்டும்.

தனது நீண்ட கழுத்தை மேலே உயர்த்தி, தன் நீண்ட கால்களைக் கொண்டு அங்குமிங்கும் நடந்து திரிவது, சமயத்தில் இரண்டு பறவைகள் ஒன்றையொன்று நேருக்கு நேராக சந்திக்கும்போது அவற்றின் அலகுகள் இதயம் போன்று காட்சியளிப்பது, அலகை தண்ணீரில் மூழ்கடித்து இரையைத் தேடுவது, தன் வண்ணமயமான இறக்கைகளை விரித்து வைத்துக்கொண்டு தலையை முன்நீட்டி நடந்து செல்வது என இப்பறவைகள் நடத்தும் அணிவகுப்போடு ராணுவம்கூட போட்டி போட முடியாது.

பூநாரைகள்
பூநாரைகள்
Photo: Prabu

தன் நீண்டு ஒடுங்கிய கழுத்தை முன்னே நீட்டிக்கொண்டு கூட்டமாக `V’ வடிவத்தில் பறக்கும் இப்பறவைகளுக்கு முன்னால் வானூர்தி அணிவகுப்பு தோற்றுப்போகும். கடந்த ஈஸ்டர் தினத்தன்று மாலை வேளையில் என் மகள் தீக்ஷிதா, மகன் தரணிதரன், மனைவி முத்து மற்றும் நண்பர் பிரபு ரஞ்சித் எடிசன் அவருடைய மனைவி கிரேஸ், மகன்கள் ஜெனோ மற்றும் ஜெஃப்ரி விஜயநாரயணம் குளத்துக்குச் சென்று அங்கு ஆயிரக்கணக்கான பூநாரைகள் நடத்திய அணிவகுப்பை நன்றாக இருட்டும் வரை சற்றுத் தூரத்தில் அமர்ந்துகொண்டு பார்த்தோம். இருட்டிய பின்பும் எங்கள் யாருக்கும் அந்த இடத்தைவிட்டு வர விருப்பமில்லை. இருட்ட இருட்ட குளக்கரையில் உள்ள ஊர்களில் ஆங்காங்கே சீரியல் விளக்குகள் மின்னத் தொடங்கின. ஆனால், அவற்றால் பூநாரைகளின் வண்ணத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று இப்பறவைகள் செய்யும் அணிவகுப்பை பார்த்துவிட்டு வாருங்கள். 2013-ம் ஆண்டிலிருந்து பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமானது மும்பை நகரில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பூநாரை திருவிழாவை நடத்துகிறார்கள். பூநாரைகள் மற்றும் இதர நீர்வாழ் பறவைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவை பரப்புவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் குளத்தில் சிலர் இப்பறவைகளை அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காகத் தாங்கள் வைத்துள்ள நான்கு சக்கர வாகனங்களை சகட்டு மேனிக்கு அங்குமிங்கும் ஓட்டிச் செல்கிறார்கள். இது தவறான செயல். இந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கில் ஆள்காட்டி குருவிகள் தரைகளில் முட்டையிட்டுக் கொண்டிருக்கும். ஆனால், தற்போது அவற்றைப் பார்க்க இயலவில்லை.

பூநாரைகள்
பூநாரைகள்
Photo: Naveen

நாம் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது அவற்றின் கூடுகளை கவனிப்பதில்லை. அதனால் அப்பறவைகள் பெரிய ஆபத்தைச் சந்திக்கின்றன. இந்தக் குளத்தில் மீன் குத்தகைதாரர்களும் தங்கள் பங்குக்கு வெடிகளை வெடித்து பறவைகளைத் துரத்துகின்றனர். இது போன்ற பறவைகள் அனைத்துக் குளத்துக்கும் செல்வதில்லை. மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சில குளங்களைத் தேர்வு செய்து அக்குளங்களுக்கு மட்டும்தான் வருடம்தோறும் வருகிறது.

உயர்மின் கோபுரங்கள்
உயர்மின் கோபுரங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் செப்டம்பர் மாதத்தில் நூற்றுக்கணக்கில் இப்பறவைகளைப் பார்க்க முடியும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பூநாரைகளின் வருகை குறைந்துள்ளது. குளத்தில் ஆங்காங்கே அளவுக்கு மீறிய ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டுள்ளது. அரசும் தன் பங்குக்கு பெரிய பெரிய பள்ளங்களை எடுத்து அவற்றில் உயரழுத்த மின் கோபுரங்களை அமைத்து குளத்துக்கு நடுவே உயரழுத்த மின்சார வயர்களைக் கட்டுவதற்கு உண்டான வேலைகளைச் செய்து வருகிறது. தமிழர்களின் பழைமையான வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டுள்ள சிவகளை கிராமம், இக்குளக்கரையில்தான் அமைந்துள்ளது என்பது கூடுதல் செய்தி.

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புக் கூடாது என்று நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. அரசாங்கமும் நீர்நிலைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளை வகுத்துள்ளது. உயரழுத்த மின் கோபுரங்கள் ஆக்கிரமிப்புகளில் வராது போலும். சட்டமும் தன் கடைமையை செய்யாது போலும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism