Published:Updated:

டூவீலர் பிரேக் கம்பியில் சுருக்கு வலை; 9 மணி நேரம் சிக்கித் தவித்த சிறுத்தை!-கேரளாவில் தொடரும் சோகம்

சிறுத்தை
சிறுத்தை

கேரளாவில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் வேதனையே இன்னும் தீராத நிலையில், சிறுத்தை ஒன்று சுருக்கு வலையில் சிக்கி 9 மணி நேரம் துடிதுடித்த சம்பவம் காட்டுயிர் ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பி தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சுருக்கு வலையில் சிக்கித்தவிப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்குக் குழுவுடன் வந்த வனத்துறையினர், சிறுத்தை சுருக்கு வலைக்கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை உறுதி செய்தனர்.

leopard rescue
leopard rescue

உடனடியாக சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சுருக்குக் கம்பி அகற்றப்பட்டது. ஆனால், சிறுத்தை காயத்துடன் தப்பி அருகில் உள்ள புதரில் சென்று பதுங்கியது. சிறுத்தைக்குச் சிகிச்சை அளிக்கவேண்டியிருந்ததால் பிடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பின்னர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பெரும் சவாலுக்குப்பின் சிறுத்தையை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், விசாரணை மேற்கொண்டு சுருக்கு வைக்கப்பட்டிருந்த தோட்ட உரிமையாளரையும் கைது செய்தனர்.

leopard rescue
leopard rescue

இது குறித்து வயநாடு வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே மூலங்காவு, ஓடப்பள்ளம் பகுதியில் தனியார் காப்பி தோட்டத்தில் காட்டுப்பன்றி மற்றும் மான்களை வேட்டையாட இருசக்கர வாகனத்தின் பிரேக் கம்பியைச் சுருக்குவலையாக வைத்துள்ளனர்.

இந்த வழியாக வந்த சிறுத்தை வலையில் சிக்கியுள்ளது. சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு மக்கள் தகவல் தெரிவித்தனர். இது சுமார் 4 வயதுடைய ஆண் சிறுத்தை. சுருக்கு வைத்தது தொடர்பாக, தோட்ட உரிமையாளர் வர்க்கீஸ் (56) என்பவரைக் கைது செய்துள்ளோம். சிகிச்சைக்குப்பின் சிறுத்தையை வனத்திற்குள் விடுத்துள்ளோம்," என்றார்.

leopard rescue
leopard rescue

முத்தங்கா காட்டுயிர் சரணாலயம் பாதுகாப்பு ஆர்வலர்கள், ``காட்டுயிர்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. வனவளம் மிகுந்த இந்த முச்சந்திப்புப் பகுதியில் வனக்குற்றங்களும் குறைந்தபாடில்லை. தமிழக, கேரள, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் மூன்று மாநில எல்லையில் இணைந்து பணியாற்றி வன விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்" என ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு