Published:Updated:

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ - வனத்துறையின் `கவுன்டர் ஃபயர்' யுக்தி!

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ

``ஒரு காட்டுல தீ பரவி வரும்போது நடுவுல ஓடையோ, ஆறோ இருந்தா மறு கரைக்கு சீக்கிரம் பரவாது. அதே மாதிரி ஒரு எடத்துல ஏற்கெனவே தீ ஏற்பட்டு எரிஞ்சி முடிஞ்சிருந்தா மறுபடியும் எரிய ஒண்ணும் இருக்காது."

உலகின் நுரையீரலான அமேசானில் பற்றி எரிந்த காட்டுத்தீ அணைந்து அடங்கும் முன்னரே, ஆஸ்திரேலியாவும் பற்றிக்கொண்டது. விவரிக்கவியலா இந்த இரண்டு பேரழிவுகளின் வினையை இனிமேல்தான் இப்புவி அனுபவிக்கப்போகிறது என ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

காட்டுத் தீ
காட்டுத் தீ

குரங்கணியின் கோரத்துக்குப் பிறகு, காட்டுத்தீயில் படிப்பினைகளைக் கற்றுக்கொண்ட தமிழக வனத்துறை, காட்டுத்தீ தொடர்பான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இருந்தும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நிலவிய வறட்சியால் கர்நாடக வனத்தோடு தமிழகத்தின் முதுமலையிலும் சில நூறு ஏக்கர்கள் தீக்கிறையாயின.

காடு என்பது நம் கற்பனையில் இருப்பதைப்போல் ஓடையும் ஆறும் ஓடிக்கொண்டு எப்போதும் பச்சைபசேலென இருக்காது. பசுமை மாறாக்காடுகள் நீங்கலாக மித வெப்ப மண்டல பகுதிகளில் புதர்க்காடுகள் (Scrub Jungle), இலையுதிர்க் காடுகள், மழை மறைவுப் பகுதிளில் உள்ள காடுகள் என ஒவ்வொன்றும் அந்தந்தப் பருவகாலத்துக்கு ஏற்ப இருக்கும்.

வறட்சியின் பிடியில் முதுமலை
வறட்சியின் பிடியில் முதுமலை

இதேபோல் இந்தக் காடுகளில் வாழும் உயிரினங்களும் லட்சக்கணக்கான ஆண்டு பரிணாமத்தில் இடத்திற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றிருக்கும். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் ஒரு சிறிய தவறும் பேரழிவாய் மாறி மொத்தத்தையும் சீர்குலைக்கும். இதில் முதன்மையானது காட்டுத்தீ என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊட்டியின் கல்லட்டி மலைச்சரிவில் இருந்தே தொடங்குகிறது முதுமலை. சுமார் 600 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் புலிகள் காப்பகத்தையொட்டியே கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளத்தின் முத்தங்கா காட்டுயிர் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன.

வறட்சியின் பிடியில் முதுமலை
வறட்சியின் பிடியில் முதுமலை

வழக்கமாக, மரகதப் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் இந்தக் காடுகள், தற்போது பனிக்கால பருவத்துக்கு ஏற்ப இலைகளை உதிர்த்து காய்ந்து வறண்டு காணப்படுகின்றன. நீர்நிலைகளில் நீரின் இருப்பு மெல்ல குறைந்துவருகிறது. தண்ணீர் மற்றும் புற்களைத்தேடி மான், யானை, காட்டு மாடு உள்ளிட்டவை கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொங்கியுள்ளன.

இந்த ஆண்டு உறைபனியின் தாக்கம் மிகக் குறைவு என்றாலும் கடுமையான வெயில் காரணமாக புற்கள் அனைத்தும் காய்ந்து கடும் வறட்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. சிறிய தீப்பொறி பட்டால்கூட மொத்தமாக எரிந்து சாம்பலாகும் அளவுக்கு சருகாக உள்ளது காடு.

காட்டுத் தீ
காட்டுத் தீ

இப்படிப்பட்ட சூழலில் கொளுத்தும் வெயிலில் முதுமலை சாலையோர புல்வெளிகளில் வனத்துறை சீருடை அணிந்த சிலர், அணியாத பலர் எனக் கையில் தீப்பந்தங்களுடன் காட்டிற்கு தீ வைத்துக்கொண்டிருந்தனர். எரிந்துகொண்டிருந்த தீயை சிலர் பசுந்தழைகளைக்கொண்டு அணைத்துக்கொண்டும் இருந்தனர்.

இவர்களின் அருகில் சென்று விசாரித்தேன். புற்களுக்குத் தீயை பற்றவைத்துக்கொண்டே நம்மிடம் பேசிய பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாறன், ``முக்கால்வாசி காட்டுத்தீ மனுஷங்கனாலதான் உண்டாகுது. சிலர் வேணும்னுன்னே பத்தவச்சிட்டு போயிருவாங்க. சில சமயம் நமக்கே தெரியாம பண்ற சில தவறால காட்டுத்தீ உண்டாகுது.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ

இந்தமாதிரி காடு காஞ்சி கெடக்கிறப்ப ஒரு சின்ன தீப்பொறி போதும் மொத்தமா எல்லாத்தையும் சாம்பல் ஆக்கிடும். போன வருஷம் பந்திப்பூர்ல புடிச்ச தீ முதுமலையையும் விட்டுவைக்கல. அதை அணைக்கப் பட்ட பாடு இருக்கே. பாவம் வாயில்லா இந்த ஜீவன்கள் எங்க போகும்... அதான் தீ வராம இருக்க வேலை செய்றோம்" என்றார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரை முந்திக்கொண்டு மற்றொரு பழங்குடி நம்மிடம் பேசத் தொடங்கினார். ``ஒரு காட்டுல தீ பரவி வரும்போது நடுவுல ஓடையோ, ஆறோ இருந்தா மறு கரைக்கு சீக்கிரம் பரவாது. அதே மாதிரி ஒரு எடத்துல ஏற்கெனவே தீ ஏற்பட்டு எரிஞ்சி முடிஞ்சிருந்தா மறுபடியும் எரிய ஒண்ணும் இருக்காது. அதனால தீ கட்டுக்குள்ள அடங்கும். அதே மாதிரிதான் சாலை ஓரத்துல, காட்டுக்குள்ள காஞ்சி கிடக்கிற புற்களை 10 அடிக்கு எரிச்சிருவோம். ஒருவேளை காட்டுத்தீ பரவி வந்தா இந்த இடத்தோட நிக்கும். வண்டியில போறவுங்க பத்தவச்ச பீடி, சிகரெட், தீக்குச்சினு வீசினாக்கூட தீ பரவாது. தரையில் கிடக்கும் உதிர்ந்த இலைகளும் காய்ந்த புற்களுமே தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யும். சில இடங்கள்ல இதை எரிச்சிட்டா தீ பரவாது. ஆனா, ரொம்ப கவனமா இந்த வேலையைச் செய்வோம். கொஞ்சம் அசந்தாலும் தீ நம்ம காட்டுக்குள்ள வராது..." என்றார்.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ

அருகில் நின்றுகொண்டிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், ``கடந்த ஆண்டு பந்திப்பூரில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல், ஊட்டி மைசூர் சாலையை தற்காலிகமாக மூடியதுடன், முதுமலை புலிகள் காப்பகமும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டது. முதுமலை வனத்தின் உள்ளே 120 கி.மீ தூரத்துக்கும், வெளிவட்டப் பகுதியில் 400 கி.மீ தூரத்துக்கும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணியில் தீத்தடுப்பு ஊழியர்கள், வேட்டை தடுப்புப் பணியாளர்கள், சிறப்பு பணியாளர்கள் 120 பேர் ஈடுபட்டுள்ளனர். `கவுன்டர் ஃபயர்' எனும் எதிர் தீ முறை நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள ஒன்றுதான். அது காட்டுத்தீயைத் தடுக்க பெரும் உதவியாக உள்ளது. மேலும் மழைக்குப்பிறகு இந்த இடங்களில் புற்கள் நன்கு செழித்து வளரும்" என்றார்.

இதுகுறித்துப் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜனார்த்தனன், ``வளர்ந்த நாடுகள்கூட காட்டுத் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறுகின்றன. வனவளங்களைக்கொண்ட வளரும் நாடுகள் காட்டுத்தீ ஏற்படாமல் பாதுகாக்க 100 சதவிகித முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், தமிழக வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்படாமல் உள்ளன.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ

காட்டுத்தீயைத் தடுக்க வறட்சி காலங்களில் தீத்தடுப்பு கோடுகள் சிறந்த தற்காப்பு. மேலும் தீமூட்டும் செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்க வேண்டும். பல இடங்களில் ஃபயர் வாட்சிங் டவர் அமைத்து மழைக்காலம் வரை கண்காணிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு