Published:Updated:

16 மடங்கு அதிகரித்த ரேடியேஷன்... என்ன நடக்கிறது செர்னோபில்லில்?

செர்னோபில்
செர்னோபில்

இந்நிலையில், சென்ற வாரம் இந்த அணுஉலை சுற்றியுள்ள காடுகளில் சிறிய அளவிலான காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை தீயணைப்பு ஊழியர்கள் கட்டுப்படுத்தினர்.

செர்னோபில் அணுஉலை மண்டலத்தில் கதிர்வீச்சு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். என்ன நடந்தது?

சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனின் ப்ரிப்யாட் நகருக்கு அருகில் உள்ளது செர்னோபில் அணு உலை. இந்த அணு உலை ஒரு விபத்தால் ஏப்ரல் 26, 1986 வெடித்துச் சிதறியது. சுமார் 9 நாள்களுக்கு இந்த அணு உலை எரிந்துகொண்டிருந்தது. இந்த வெடிப்பால் 20 வகையான கதிர்வீச்சு பொருள்கள் காற்று மண்டலத்தில் கலந்தன. இதற்கு முன்பு யாரும் பார்த்திராத சுற்றுச்சூழல் பேரழிவை இந்த வெடிப்பு ஏற்படுத்தியது. மின் நிலையத்திலிருந்து 30 கி.மீ-க்குள் மக்கள் வாழ அனுமதிக்கப்படவில்லை. கதிரியக்கத்தால் மக்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் பல்வேறு விதமான குறைபாடுகள் ஏற்பட்டன. பல உயிர்களைக் கொன்று குவித்த இந்த அணுஉலை வெடிப்பு வரலாற்றில் பெரும் சோகத்தை உண்டாக்கியது.

செர்னோபில் காட்டுத்தீ
செர்னோபில் காட்டுத்தீ

இந்நிலையில், சென்ற வாரம் இந்த அணு உலை சுற்றியுள்ள காடுகளில் சிறிய அளவிலான காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை தீயணைப்பு ஊழியர்கள் கட்டுப்படுத்தினர். பின்னர், காட்டுப்பகுதிக்கு அருகில் சிறிய அளவில் தீயிட்டு விளையாடிய நபரால் காட்டுத்தீ வேகமாகப் பரவியுள்ளது. இந்தக் காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கடினம் என்று தெரிவித்தனர் தீயணைப்பு ஊழியர்கள். இந்தக் காட்டுத்தீ பரவ காரணமான 27 வயது நபரை காவல்துறை கைது செய்து விசாரிக்கையில், 'விளையாட்டிற்காகத்தான் சிறிய அளவில் தீ பற்ற வைத்தேன். பின்னர், பலமாக வீசிய காற்றினால் இந்தத் தீ வேகமாகப் பரவும் என்று எதிர்பார்க்கவில்லை' என்றார் அந்த நபர்.

Vikatan

இந்தக் காட்டுத்தீயினால் செர்னோபிலைச் சுற்றியுள்ள தடைசெய்யப்பட்ட மண்டலத்தில் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"இது ஒரு மோசமான செய்தி - செர்னோபில் பகுதியில் தீப்பிடித்துள்ளதால் கதிர்வீச்சு இயல்பைவிட அதிகமாக உள்ளது" என்று உக்ரைனின் சுற்றுச்சூழல் ஆய்வு சேவையின் தலைவர் யெகோர் ஃபிர்சோவ் என்று சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

செர்னோபில்
செர்னோபில்

அந்த ஃபேஸ்புக் பதிவில் கெய்கர் கவுன்டருடன்கூடிய வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. கெய்கர் கவுன்டர் என்பது கதிர்வீச்சைக் கண்டறிந்து அளவிட பயன்படும் கருவி. இந்த கெய்கர் கவுன்டர் கருவியின்படி செர்னோபில்லில் இயல்பைவிட 16 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு உள்ளது என்று கூறியுள்ளனர். இந்தத் தீ சுமார் 100 ஹெக்டேர் (247 ஏக்கர்) காடுகளுக்குப் பரவியுள்ளது என்று ஃபிர்சோவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கதிர்வீச்சு அதிகரிப்பு உக்ரைன் தலைநகர் 'க்யிவ்'வில் உள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. செர்னோபில்லிலிருந்து தெற்கில் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது க்யிவ் நகரம். அரசு தரப்பில் க்யிவ்வில் கதிர்வீச்சு அளவினை பரிசோதனை செய்தபோது கதிரியக்க அளவு குறைவாக உள்ளதாகவே தெரிவித்துள்ளது. 'செர்னோபில் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் க்யிவ்வில் பயப்படத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டு ஜன்னல்களை திறப்பதால் எந்த கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்படாது' என்று யெகோர் ஃபிர்சோவ் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு