Published:Updated:

நீலகிரி: எந்தக் காயமும் இல்லை... அடுத்தடுத்து இறந்துகிடந்த செந்நாய்கள்! - முதுமலை மர்மம்

இறந்துகிடக்கும் செந்நாய்கள்
இறந்துகிடக்கும் செந்நாய்கள்

காட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்குவகிக்கும் செந்நாய்களின் மர்ம இறப்பு குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டம், முதுமலை சிங்கார வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். விபூதி மலை அருகில் சென்று கொண்டிருக்கையில் செந்நாய் (Wild Dog) ஒன்று‌ இறந்து கிடந்ததைப் பார்த்தனர்.

செந்நாய்
செந்நாய்

தொடர்ந்து, அதன் அருகிலேயே மேலும் சில செந்நாய்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்தன.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தங்கள் மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இறந்துகிடக்கும் செந்நாய்
இறந்துகிடக்கும் செந்நாய்

நிகழ்விடத்துக்குச் சென்றவர்கள், நான்கு செந்நாய்கள் இறந்துகிடப்பதை உறுதி செய்து, கால்நடை மருத்தவர்களை வரவழைத்தனர். அதன் பிறகு செந்நாய்களுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

செந்நாய்கள் இறப்பு குறித்து வனத்துறையினர், ``சிங்காரா வனச்சரகம், பொக்காபுரம், விபூதிமலை வனத்தில் நான்கு செந்நாய்கள் இறந்து கிடந்தன. அவற்றுக்கு சுமார் 4 வயது இருக்கலாம். மசினகுடி அரசு கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார்.

செந்நாய்கள்
செந்நாய்கள்

ஆய்வுக்காக உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இறப்புக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை‌ மேற்கொண்டுவருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

இது குறித்து காட்டுயிர் ஆர்வலர் ஊட்டி சுரேஷ் நம்மிடம் பேசும்போது, ``இறந்த செந்நாய்களின் உடலில் எந்தக் காயமும் இல்லை. விஷம் கலந்த இறைச்சியை உண்ட காரணத்தால்தான் அவை இறந்திருக்கக்கூடும். மேலும், செந்நாய்கள் கூட்டமாக வாழும் பழக்கம்கொண்டவை.

செந்நாய்
செந்நாய்

இந்தப் பகுதியில் மேலும் சில செந்நாய்கள் இறந்திருக்கின்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். காட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்குவகிக்கும் செந்நாய்களின் மர்ம இறப்பு குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு