பேராவூரணியில் ஏரி தூர்வாரும் பணிக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ரூ.10,000 நன்கொடையாகக் கொடுத்து ஊர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.வெளிநாட்டைச் சேர்ந்த ஒருத்தர், நம் மண் மீதும் மக்கள் மீதும் இவ்வளவு அக்கறையுடன் இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதியினர் நெகிழ்ந்துவருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர், பிரான்சிஸ் கோடி. இவர், தற்போது கனடா நாட்டில் வசித்துவருவதுடன் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல்துறை பேராசிரியராகவும் பணிபுரிந்துவருகிறார். அவ்வப்போது தமிழகம் வரும் இவர், இங்குள்ள சில பல்கலைக்கழகங்களில் தற்காலிகப் பேரசிரியராகவும் பணிபுரிகிறார். சுற்றுச்சூழல் மீது ஆர்வம்கொண்ட பிரான்சிஸ் கோடி, அதை செயல்படுத்தத் துடிக்கிற நபர்களிடம், சமூக ஆர்வலர்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்கக்கூடியவர். தமிழ்நாட்டின்மீது கொண்ட பிரியத்தால், தமிழ் பேச கற்றுக்கொண்டு, தற்போது அழகாகத் தமிழிலேயே பேசிவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த மாதம் சென்னை வந்த இவர், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கிறார். அப்போது அவர்கள், பேராவூரணி இளைஞர்கள் கைஃபா என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் நீர்நிலைகள் தூர் வாரும் பணியைத் தொடங்கியதுடன், முதற்கட்டமாக பேராவூரணி பெரியகுளம் ஏரி தூர்வாரும் பணியைச் செய்து வருகின்றனர் எனக் கூறியிருக்கின்றனர்.

இதைக் கேட்டு, 'ஆஹா... அப்படியா' என ஆர்வமான பிரான்சிஸ், உடனே பெரியகுளம் ஏரிக்குச் சென்று தூர் வாரும் பணியைப் பார்வையிட்டதுடன், இதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துக் கூறி ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர், ''தண்ணீர் பிரச்னையில் இருந்து மீள, நீர் நிலைகளைப் பராமரிப்பது அவசியம். இதுதொடர்பாக என்ன உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள் செய்கிறேன்'' என்று கூறி புறப்பட்டிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர், இதேபோல் கைஃபா அமைப்பின்மூலம் நாடியம் ஏரியைத் தூர் வார உள்ள செய்தியையும், அந்த ஊர் மக்கள் திருவிழா நேரத்தில் நடத்தப்படும் ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிக்குத் தடை விதித்து, அதற்கு ஆகும் செலவை ஏரியை மீட்டெடுக்க பயன்படுத்த இருக்கிறோம், இதை ஊர் கூட்டத்திலேயே முடிவுசெய்து, ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி அறிந்து, அவர்களை எண்ணி வியந்துபோனதுடன், உடனே நாடியம் ஊரைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரை சந்தித்து, ஏரி தூர் வாரும் பணிக்கு தன்னுடைய தொகையாக ரூ 10,000 நன்கொடை வழங்கி அசத்தியிருக்கிறார்.

இதுகுறித்து பிரான்சிஸ் கோடியிடம் செல்போன் மூலம் பேசினோம். 'வணக்கம்' என அழகாக தமிழிலேயே பேசத் தொடங்கியவர், “நான் கனடாவில் வசிக்கிறேன். அடிக்கடி தமிழகம் வருவது வழக்கம். அதோடு, தமிழர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி ஆராய்ச்சியும் செய்துவருகிறேன். தற்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதற்குக் காரணம், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளை நாம் பராமரிக்காமல்போனதுதான் முக்கியக் காரணம்.
அந்தக் காலத்தில், தமிழக மக்கள் நீர்நிலைகளைக் கண் போல காத்துவந்தனர். அதில், நீரை நிரப்பி சேமித்துவந்தனர். காலப்போக்கில் எண்ணிலடங்காத நீர்நிலைகள் பராமரிப்பின்றி காணாமல் போய்விட்டன. இதை உடனே மீட்டெடுத்து, தூர் வாரி, அதில் தண்ணீரை நிரப்ப வேண்டும். அதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் நல்ல மழையும் பொழியும். பேராவூரணி இளைஞர்கள் இணைந்து பெரிய குளம் ஏரியை தூர் வாரத் தொடங்கியுள்ளது கேள்விப்பட்டு, கடந்த மாதம் நேரில் சென்று பார்வையிட்டேன். அப்போது, இன்னும் பல ஏரிகளைத் தூர் வார இருப்பதாகச் சொன்னார்கள். அவர்களின் செயலை நினைத்து பெருமிதம் அடைந்தேன்.

இதேபோல், நாடியம் கிராமத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த மாட்டோம், அதற்கு ஆகும் செலவை ஏரியை மீட்டெடுக்கப் பயன்படுத்துவோம் என முடிவெடுத்திருந்ததைக் கேள்விப்பட்டேன். அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏரியைத் தூர் வாரும் பணிக்காக என்னால் முடிந்த உதவியைச் செய்ய நினைத்து, நீலகண்டன் என்பவர் வசம் ரூ.10,000 வழங்கினேன். இது, சிறு துளிதான். ஆனால், அப்பகுதி மக்கள் இதைப் பெரும் வெள்ளமாக மாற்றுவார்கள். பேராவூரணி பகுதி இளைஞர்களின் கூட்டு முயற்சியைக் கண்டு வியக்கிறேன். எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய சக்தி அவர்களிடம் தெரிகிறது. இது, தமிழகம் முழுவதும் தொடர வேண்டும். சீக்கிரமே தமிழகத்தின் தண்ணீர் தாகம் தீர,டெல்டா எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும்'' என்றார்.
நாடியம் நீலகண்டனிடம் பேசினோம். எங்க பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, நீர்நிலைகளைக் காக்கும் பெரும் பணியைத் தொடங்கி, செய்துவருகின்றனர். இதைக் கேள்விப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர், தாமாக முன்வந்து நன்கொடை வழங்கி, எங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது, ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது என்றார்.

ராம்குமார் என்பவரிடம் பேசினோம்.''பெரியகுளம் ஏரிக்கு வந்த இவர், கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டதுடன் எல்லோரும் இணைந்து ஒரு இமாலய சாதனையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். இதை எப்போதும் தொடர வேண்டும் என வாழ்த்தி உற்சாகபடுத்தினார். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், நம் மண் மீதும் மக்கள் மீதும் இவ்வளவு அக்கறையுடன் இருப்பது வியப்பை ஏற்படுத்தியது'' என்றார்.