Published:Updated:

தண்ணீர் குடிக்க வந்தபோது கிணற்றில் விழுந்தது!- இறந்த குட்டியுடன் 3 நாள்கள் தவித்த காட்டுமாடு!

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தண்ணீர் தேடிவந்த காட்டுமாடு குட்டி கிணற்றில் விழுந்து இறந்த நிலையில், 3 நாள்கள் கிணற்றில் சிக்கித்தவித்த மற்றொரு காட்டுமாட்டினை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த காட்டுமாட்டை மீட்கும் வனத்துறையினர்.
கிணற்றில் விழுந்த காட்டுமாட்டை மீட்கும் வனத்துறையினர். ( கே.அருண் )

5௦ சதவீத வனப்பகுதிகளைக்கொண்ட நீலகிரி மாவட்டத்தில் உறை பனியின் தாக்கம், வறட்சி, காட்டுத் தீ என பல இடர்களில் இருந்து கோடை மழையில் கொஞ்சம் தப்பி பிழைத்தது. கை கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழையோ தாமதமாகி வருகிறது. நீலகிரியில் உள்ள அணைகள், ஏரிகள், ஓடைகள் என எல்லாவற்றிலும் நீர் வற்றி வருகிறது. தண்ணீர் தேடி காலி குடங்களுடன் மக்கள் ஒருபுறம் அலைகிறார்கள். மறுபக்கம் காட்டுயிர்கள் உணவையும் தண்ணீரையும் தேடி ஊருக்குள் அலைகின்றன.

இறந்த குட்டியுடன் கிணற்றில் தவிக்கும் காட்டுமாடு
இறந்த குட்டியுடன் கிணற்றில் தவிக்கும் காட்டுமாடு
கே.அருண்

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள உபதலை பகுதியில் தண்ணீரைத் தேடிவந்த காட்டுமாடுகள் கிணற்றில் தவறி விழுந்து மூன்று நாள்கள் தத்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்று மெல்ல மீண்டது காட்டுமாடு இனம். வன அழிப்பு காரணமாக தேயிலை தோட்டங்களை நிரந்தர வாழிடமாக மாற்றி பழகிக்கொண்டன காட்டுமாடுகள். ஆனால் தண்ணீர் தேடி அலைகின்றன.

இதே போல் குன்னூர் அருகே உள்ள உபதலை பகுதி தேயிலை தோட்டம் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் குடிக்க இரவு நேரத்தில் காட்டு மாடு கூட்டம் ஒன்று வந்தன. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த காட்டுமாடு குட்டி ஒன்று நீர் அருந்தும்போது கிணற்றுக்குள் தவறி விழுந்தது. மற்ற காட்டு மாடுகள் ஓடிவிட்டன. குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் காட்டுமாடும் கிணற்றுக்குள் மாட்டிகொண்டது. குட்டி நீரில் மூழ்கி இறந்த நிலையில் தாய் காட்டுமாடு உணவு ஏதும் இல்லாமல் மூன்று நாள்களாக சிக்கிதவித்து வந்தது

இறந்த குட்டியுடன் கிணற்றில் தவிக்கும் காட்டுமாடு
இறந்த குட்டியுடன் கிணற்றில் தவிக்கும் காட்டுமாடு
கே.அருண்

காட்டுமாடு கிணற்றில் இருப்பதைக் கண்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் வந்து பார்த்தபோது 3 வயது மதிக்கத்தக்க காட்டுமாடு குட்டி இறந்து கிடப்பதையும் அருகில் மற்றொரு காட்டுமாடு கிணற்றைவிட்டு வெளியேற முடியாமல் தவிப்பதையும் பார்த்தனர்.கிணற்றில் விழுந்த காட்டுமாட்டை மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ஆட்களைக்கொண்டு வழிவெட்டி காட்டுமாட்டினை வெளியேற்ற முயற்சி செய்தனர். எந்த பயனும் இல்லை. பின்னர், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உயிருக்கு போராடிய காட்டு மாட்டினை மீட்டனர்.

கிணற்றில் விழுந்த காட்டுமாட்டை மீட்கும் வனத்துறையினர்.
கிணற்றில் விழுந்த காட்டுமாட்டை மீட்கும் வனத்துறையினர்.
கே.அருண்

மூன்று நாள்களாக மேய்ச்சல் இல்லாமல் கிணற்றில் தவித்த காட்டுமாடு மிகுந்த சோர்வுடன் காட்டுக்குள் சென்றது. பின்னர் நீரில் மூழ்கி இறந்த காட்டுமாடு குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.