Published:Updated:

இருக்கு... வைரஸ் தாக்குதலுக்கும் புவி வெப்பமயமாதலுக்கு தொடர்பு இருக்கு! எப்படி?

Virus
Virus ( Bgr.com )

2017-ல் மெக்ஸிகோ குகைகளில் இருந்து 10,50,000 ஆண்டுகள் பழைமையான பாக்டீரியா ஒன்றைக் கண்டறிந்திருப்பதாக அறிவித்தனர் நாசா விஞ்ஞானிகள்.

`ஏழாம் அறிவு' படத்தின் தொடக்கத்தில் சீனாவில் திடீரென ஓர் நோய் பரவும், அது பல ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய நோய் என்றும் மீண்டும் அது தற்போது பரவுகிறது என்றும் ஒரு காட்சி வரும். தற்போதும் அது போன்ற ஒரு வைரஸ் (Virus) சீனாவில் பரவிப் பலரின் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கிறது. எபோலோ தொடங்கி கொரோனா வரை அவ்வப்போது புதிய வைரஸ்கள் வருவதும் பலரைப் பலி கொண்டபின் அவற்றுக்கான மருந்துகளை நாம் கண்டுபிடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. சரி, இது போன்ற வைரஸ்கள் எங்கிருக்கின்றன எப்படி திடீரென்று பரவுகின்றன என்று யோசித்ததுண்டா? இது போன்ற வைரஸ் பரவல்களுக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் தொடர்புண்டு என்றால் நம்ப முடிகிறதா?

Anthrax
Anthrax
fooyoh.com

ஆம், இது போன்ற வைரஸ் திடீரென்று பரவுவதற்குப் புவி வெப்ப மயமாதலும் ஒரு காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைபீரியாவின் துருவப்பகுதியில் ஆன்த்ராக்ஸ் நோய் தாக்கப்பட்டு 12 வயதுச் சிறுவன் இறக்க, 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். நோய் பரவியது அந்தப் பகுதியில் வாழும் கலைமான்களால்தான் என்று தெரிய வந்தது. 75 வருடங்களுக்கு முன்பு ஆன்த்ராக்ஸ் நோய் தாக்கப்பட்ட கலைமான் ஒன்று இறந்து அங்குள்ள பனியில் உறைந்துபோனது. 2016-ம் ஆண்டு அந்தப் பகுதியில் வெயில் அதிகமாகவே உறைந்திருந்த பனியும் கரையத் தொடங்கியது. அப்போது 75 வருடங்களுக்கு முன்பு உறைந்த அந்தக் கலைமானின் உடலிலிருந்த ஆன்த்ராக்ஸ் நோய்க் கிருமிகளும் வெளிப்பட்டு அந்தப் பகுதியிலிருந்த மற்ற கலைமான்களுக்குப் பரவி அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது. இப்படித்தான் பழங்காலத்தில் பரவிய நோய்கள் தற்போது மறுவடிவம் பெற்று சேதங்களை விளைவிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

75 ஆண்டுகளாக அந்த வைரஸ் எப்படி உயிரோடிருந்தது? வைரஸ்களில் பல வகை உண்டு. எல்லா வைரஸ்களும் அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஒத்துப்போவதில்லை. ஆனால், பெரும்பாலான வைரஸ்களுக்கும் கிருமிகளுக்கும் பொதுவான குணம் ஒன்று உண்டு. அதீத வெப்பத்திலும் அதீத பனியிலும் வைரஸ்கள் செயலற்ற நிலைக்குச் சென்றுவிடும். அதனால்தான் உணவு கெடாமல் இருப்பதற்காகச் சூடுபடுத்தி வைப்போம் அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைப்போம். அப்படிச் செயலற்ற நிலையில் இருக்கும் வைரஸ்கள் தனக்கு ஏதுவான சூழல் வரும்வரை செயலற்ற நிலையிலேயே இருக்கும். சில வைரஸ்கள் குறிப்பிட்ட காலத்தில் இறந்துவிடும். பல வைரஸ்கள் அப்படியே உயிரோடிருக்கும். அந்தக் கலைமான் பனியில் புதைந்த நிலைக்குச் சென்றதல்லவா, அந்த நிலைக்குப் பெயர் `பெர்மாஃப்ராஸ்ட்' (Permafrost). இந்த பெர்மாஃப்ராஸ்ட்களை வைரஸ்களுக்கான சொர்க்கம் எனலாம். அந்த ஆழத்தில் குளிர் அதிகமாக இருக்கும், பிராணவாயு இருக்காது மற்றும் இருட்டாக இருக்கும். இவையனைத்தும் வைரஸ்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலைகள். இதுபோன்ற பெர்மாஃப்ராஸ்ட்கள் துருவப் பகுதி எங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஏராளமான உயிரினங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் வைரஸ்களோடு புதைந்திருக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கருத்து.

reindeer
reindeer
planet zoo wiki
மாஸ்க், வீடியோ கேம்...  கொரோனா வைரஸை வைத்து அக்கறையும் `வியாபார' உத்திகளும்!

வருடம்தோறும் கோடைக்காலத்தில் 50 செ.மீ வரை பெர்மாஃப்ராஸ்ட்கள் உருகுகின்றன. இதனால் மேலோட்டமாக உள்ள படிமங்கள் தெரிய வரும். ஆனால், புவி வெப்பமயமாதலால் மிக வேகமாகப் பனிக்கட்டிகள் உருகி பழமையான பெர்மாஃப்ராஸ்ட்கள் வெளிவரக் கூடும். அப்படி வரும்போது அலாவுதீனின் அற்புத விளக்கிலிருந்த வெளிவந்த பூதம் போல் பல வைரஸ்கள் பூமிப் புதையல்களில் இருந்து வெளிவரும்.

தற்போது சீனாவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸையும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வுக் கூடத்தில் மறு உருவாக்கம் செய்துள்ளனர். இதன் தன்மைகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தால் மருந்து கண்டறிவதும் எளிதாகிவிடும்
bacteria
bacteria
scitechdaily.com
வெடித்து வெளியேறும் தொன்மையான வைரஸ்கள்... மனிதனுக்குக் காத்திருக்கும் `பெர்மாஃப்ராஸ்ட்' ஆபத்து!

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மட்டும் அல்ல பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வைரஸ்கள், பாக்டீரியாக்கள்கூட கடந்த ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2005-ம் ஆண்டு நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 32,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாக்டீரியாக்களுக்கு உயிர் கொடுத்தனர். அவை ஆபத்தான வகையைச் சேர்ந்தவை இல்லை என்பதால் பனியில் உறைந்திருந்த அவற்றிக்கு உயிர் கொடுத்தனர். 2007-லிலும் 8 மில்லியன் வருடங்கள் பழைமையான பாக்டீரியா ஒன்றுக்கு உயிர் கொடுத்தனர். பனியில் உறைந்திருக்கும் அனைத்து வைரஸ் பாக்டீரியாக்களும் கொடியன அல்ல. ஆனால், அதே பனியில் இருந்து நம்மால் தற்காத்துக்கொள்ள முடியாத அளவு கொடிய வைரஸ்களும் வெளிவரக்கூடும்.

பழைமையான பாக்டீரியாக்கள் உறைபனியில் மட்டுமல்ல வேறு வகைகளிலும் மறைந்திருக்கக் கூடும். 2017-ல் மெக்ஸிகோ குகைகளில் இருந்து 10,50,000 ஆண்டுகள் பழைமையான பாக்டீரியா ஒன்றை கண்டறிந்திருப்பதாக அறிவித்தனர் நாசா விஞ்ஞானிகள். அவை மெக்ஸிகோ குகைகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருந்த பளிங்குக் கற்களில் அடைபட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவை அடைபட்டிருக்காவிட்டால் பல்கிப் பெருகி பெரும் சேதத்தை விளைவித்திருக்கும் எனத் தெரிவித்தனர் விஞ்ஞானிகள்.

சரி, ஏன் இந்த வைரஸ்களின் தாக்குதலை நம் உடலால் தாங்க முடியவில்லை? நம்முடைய உடலில் எப்போதும் பரவலாகப் பரவும் பாக்டீரியாக்களின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதோடு அந்த வைரஸ் தாக்குதல்களுக்கு உடல் பழகிப்போய் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பிருக்கும் வைரஸ்களோ, புதிய வைரஸ்களோ தாக்கும்போது அதன் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைகள் பற்றித் தெரியாததால் நம் உடலால் உடனடியாக எதிர்த்தாக்குதலில் ஈடுபட முடியாமல் போகும்போதுதான் அது கொடியதாக மாறுகிறது. இந்த வைரஸ்களின் நடவடிக்கை பற்றி விஞ்ஞானிகளாலும் கண்டறியத் தாமதமாகும்போதுதான் அதற்கான தீர்வு கண்டறிவதும் சிரமமாகிறது.

corona
corona
`கொரோனா வைரஸ் போராட்டத்தில் முக்கிய திருப்புமுனை!'- சாதித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

தற்போது, சீனாவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸையும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் மறு உருவாக்கம் செய்துள்ளனர். இதன் தன்மைகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தால் மருந்து கண்டறிவதும் எளிதாகிவிடும். அதன் முதல் படியை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். விரைவில் இதற்கான தீர்வை கண்டறிவார்கள் என நம்பலாம்.

அடுத்த கட்டுரைக்கு