Published:Updated:

`மணல், சிமென்ட் தேவையில்லை!' - நிலச்சரிவைத் தடுக்க அரசின் சூப்பர் பிளான்

ரா.சதீஸ்குமார்

ஊட்டி குன்னூர் சாலையில் மந்தாடா பகுதியில் மணல், சிமென்ட் என எதுவும் பயன்படுத்தாமல் புதிய தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்டுள்ள கம்பிவலை தடுப்பு சுவர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கம்பிவலை தடுப்பு சுவர்
கம்பிவலை தடுப்பு சுவர்

மலை மாவட்டமான நீலகிரி மண் சரிவு அபாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. தொடர்ந்து ஒருவாரம் மழை பெய்தாலே பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்படும். நிலச்சரிவு அபாயம் உள்ள சரிவுப்பகுதிகள் அதிகளவில் உள்ளன.

ஊட்டி குன்னூர் சாலை
ஊட்டி குன்னூர் சாலை
கே.அருண்

எனவே, நீலகிரியில் பொக்லைன் இயந்திரங்களை இயக்க, ஆழ்துளைக் கிணறு அமைக்க, கிணறு தோண்ட, கட்டடங்கள் கட்ட தடைகளும் பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்ட பல கட்டுமானங்கள் பெருமழை சமயங்களில் பாதிப்புக்குள்ளாகி சேதமடைந்தன.

நீலகிரியில், பெரும்பாலான சாலைகள் மலைபபாங்கான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளின் முகுப்புப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சாலைகள் மிக குறுகலாகவும், அதிக கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதும், செங்குத்தாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஊட்டி - குன்னூர் சாலை தற்போது விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கம்பிவலை தடுப்பு சுவர்
கம்பிவலை தடுப்பு சுவர்
கே.அருண்

குன்னூர் முதல் ஊட்டி வரையில் சாலை குறுகலாக இருந்த இடங்கள், விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறிந்து அங்கு தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மந்தாடா பகுதியில் பெரிய தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. வழக்கமான தடுப்பு சுவர்போல் இல்லாமல் இந்தத் தடுப்பு சுவர் கற்கள் கம்பி வலைகளின் உதவியுன் கட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில் “ கேபியன் வால் [Gabion wall] எனப்படும் கற்கள் மற்றும் துரு பிடிக்காத வலைக்கம்பிகளைக் கொண்டு கட்டப்படுவதாகும். நாகாலாந்து மாநிலத்தில் இந்த முறையில் சுவர்கள் கட்டப்பட்டு நல்ல முறையில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இதே முறையைப் பயன்படுத்தி மந்தாடா பகுதியில் 86 மீட்டர் நீளம் ,13 மீட்டர் உயரத்தில் கட்டியுள்ளோம். பொறியாளர்களைக் கொண்டு வடிவமைத்து சாலை விரிவாக்கத்தில் கிடைத்த கற்கள், ஜியோ பேப்ரிக், துருபிடிக்காத கம்பி வலை போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

கம்பிவலை தடுப்பு சுவர்
கம்பிவலை தடுப்பு சுவர்

இந்த முறை கட்டுமானத்துக்கு மணல், சிமென்ட் அதிகம் தேவைப்படாது. மேலும், எவ்வளவு மழை பெய்தாலும் இடிந்து விழாமல் நீரை வெளியேற்றி தாங்கி நிற்கும். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது” என்றனர்.