Published:Updated:

`வெறும் 20 ரூபாய்தான்... இனி வைக்கோலை எரிக்க வேண்டாம்!' - டெல்லி பிரச்னைக்கு நிபுணர்களின் தீர்வு

A farmer sprays bio-decomposer
A farmer sprays bio-decomposer ( AP Photo/Manish Swarup )

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Agriculture Research Institute) வைக்கோலை மட்க வைப்பதற்காக அறிமுகப்படுத்தியிருப்பதுதான் `பூசா டீகம்போஸர்’ என்னும் கேப்சூல்கள்.

ஒவ்வோர் ஆண்டும் குளிர்காலம் தொடங்கும்போது டெல்லி காற்று மாசு குறித்த செய்திகளை நாம் பார்க்காமல் கடந்துபோக முடியாது. குறிப்பாக, டெல்லிவாசிகளை இந்தக் காற்று மாசு அச்சுறுத்தும் ஒரு விஷயமாகவே மாறிவிட்டது. இந்தியாவின் தலைநகரம் என்பதால் உலக அளவிலும் இதுகுறித்து ஆண்டுதோறும் பேசப்பட்டு வருகிறது. இந்தக் காற்று மாசுக்குக் காரணமாக அரசு கையை காட்டுவது வட இந்திய விவசாயிகளைத்தான். காரணம், கரீப் பருவத்தில் எஞ்சிய காய்ந்த நெல் தாள்களை (வைக்கோல்) இவர்கள் அப்படியே தீ வைத்து எரிப்பதால், அதிலிருந்து எழும் புகை காற்றில் கலக்கிறது. இதனால் காற்று மண்டலம் புகை மண்டலமாக மாறி டெல்லிவாசிகளின் சுவாச பாதையைப் பதம் பார்த்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது இது.

டீகம்போஸர் கேப்சூல்
டீகம்போஸர் கேப்சூல்

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் உள்ள விவசாயிகள் வைக்கோலைத் தீயிட்டு எரிப்பதால்தான் இந்தப் புகை மாசு உருவாகிறது என்பது அரசு வைக்கும் குற்றச்சாட்டு. இதைத் தடுக்க காவல் துறையினரை அமர்த்தி எச்சரிக்கை விடுத்தாயிற்று; விவசாயத்துக்கு மானியம் கொடுக்க மாட்டோம் என்று பயமுறுத்தியாயிற்று. ஆனால், எதற்கும் மசியவில்லை இந்த மூன்று மாநில விவசாயிகள். கடைசியாக டெல்லி மாநில அரசு `பூசா டீகம்போஸர்' என்ற இயற்கையாக வைக்கோலை மக்கச்செய்யும் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி இந்த ஆண்டு வைக்கோலை வயலிலேயே மக்க வைக்கப்போகிறீர்களா அல்லது மீண்டும் எரிக்கப்போகிறீர்களா என்பது தெரியவில்லை. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மிக முக்கியமானது. நம்ம ஊர்களில் கரும்பு தோகையை எரிக்கும் விவசாயிகளுக்குக்கூட இது பயன்படும்.

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Agriculture Research Institute) வைக்கோலை மட்க வைப்பதற்காக அறிமுகப்படுத்தியிருப்பதுதான் `பூசா டீகம்போஸர்’ என்னும் கேப்சூல்கள். பூஞ்சணத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயற்கை மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். இதைத் தயார் செய்வதற்கு 5 நாள்களாகும்.

இதுகுறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது, ``இந்த டீகம்போஸர் கேப்சூல்கள் 7 விதமாகத் திரியும். ஒரு பாக்கெட்டில் நான்கு கேப்சூல்கள் இருக்கும். இது கடினமான வைக்கோலையும் இரண்டிரண்டாக துண்டாக்கி மக்க வைக்கும் திறன் கொண்டது. இதன்விலை 20 ரூபாய்தான். 25 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதைச் சூடுபடுத்த வேண்டும். அதோடு 150 கிராம் வெல்லத்தைச் சேர்த்து கலக்கி விட வேண்டும். பிறகு, இந்தக் கலவையை ஆற விட வேண்டும். நுண்ணுயிரிகளைப் பெருக்க இந்த வெல்லம் உதவும். இதோடு 50 கிராம் கடலை மாவைச் சேர்க்க வேண்டும். பிறகு, டீகம்போஸர் கேப்சூல்களைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கரைசலை நிழலான இடத்தில் வைத்து அதன் வாய்ப்பகுதியைக் காடாத் துணியால் கட்டிவிட வேண்டும். நான்கு நாள்கள் கழித்து ஐந்தாவது நாள் திறந்து பார்த்தால் கரைசலின் மேல் ஏடு படர்ந்திருக்கும்.

வேஸ்ட் டீகம்போஸர்
வேஸ்ட் டீகம்போஸர்

நெல் அறுவடையின்போது வைக்கோலை அப்படியே போட்டுவிடாமல் அதை கட் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கும் இயந்திரத்தின் மூலம் துண்டுகளாக்கிப் போட்டால் மக்கிப்போவது இன்னும் எளிதாகும். வைக்கோலை நறுக்குவதற்கு என்றே பிரத்யேக கருவிகள் உள்ளன. இவை 50 சதவிகித மானியத்தில் கிடைக்கின்றன. விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தலாம்” என்கின்றனர்.

இதுகுறித்து மேலும் தகவல் அறிய முன்னாள் தேசிய இயற்கை விவசாய மையத்தின் இயக்குநர் விஞ்ஞானி கிருஷ்ண சந்திராவிடம் பேசியபோது, ``பூசா டீகம்போஸர் கரைசலை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். ஆனால், ஏற்கெனவே எனது கண்டுபிடிப்பான வேஸ்ட் டீகம்போஸர் கரைசலைப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். மேற்சொன்னவை கேப்சூல் என்றால் இது பசை போன்று இருக்கும். இதன் விலையும் 20 ரூபாய்தான். இதை 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து அதோடு வேஸ்ட் டீகம்போஸரையும் கலந்து 5 நாள்கள் தினமும் காலை மாலை என இருவேளை கலக்கி வந்தால் கரைசல் தயார்.

கிருஷ்ண சந்திரா
கிருஷ்ண சந்திரா

தயாரான 200 லிட்டரில் 180 லிட்டர் கரைசலை எடுத்து அப்படியே தெளிக்கலாம். அல்லது 5 லிட்டருக்கு ஒரு லிட்டர் டீகம்போஸர் கரைசல் என்ற விகிதத்தில் தெளிக்கலாம். ஒரு மாதத்தில் மக்கிவிடும். மீதியிருக்கும் 20 லிட்டர் கரைசலோடு 180 லிட்டர் தண்ணீர், 2 கிலோ வெல்லம் சேர்த்து மீண்டும் கரைசலைத் தயார் செய்துகொள்ள முடியும். இப்படி வாழ்நாள் முழுவதும் இந்த கரைசலை மல்ட்டிபிகேஷன் செய்துகொண்டு போகலாம். இதனால் மண்ணுக்கு ஊட்டமும் மகசூலும் நன்றாகக் கிடைக்கும். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் இதை உணர்ந்து பயன்படுத்த முன் வரவேண்டும்” என்றார்.

A Pusa Institute of Technology worker sprays bio-decomposer which converts agricultural waste into compost in his field
A Pusa Institute of Technology worker sprays bio-decomposer which converts agricultural waste into compost in his field
AP Photo/Manish Swarup

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``சோதனை முயற்சியாக இந்த டீகம்போஸர் கரைசலை விவசாயிகள் பயன்படுத்த அறிவுறுத்தியிருக்கிறோம். இதுவரை ஹரியானா, பஞ்சாபில் 100 ஹெக்டேரிலும், டெல்லியில் 800 ஹெக்டேரிலும், உத்தரப் பிரதேசத்தில் 10,000 ஹெக்டேரிலும் பயன்படுத்தப்பட்டு நல்ல முடிவு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு IARI, Pusa, New Delhi, contact: 011 25843375

வெறும் 20 ரூபாயில் தீர்வு தரும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மண்ணை வளமாக்குவதுடன், சுற்றுச்சூழலையும் காக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு