Published:Updated:

யானை - மனித எதிர்கொள்ளலைக் குறைக்க தேனீக்கள்... புதிய முயற்சியை கையிலெடுக்கும் அரசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அதிகரிக்கும் மனித - யானை எதிர்கொள்ளல்..!
அதிகரிக்கும் மனித - யானை எதிர்கொள்ளல்..!

தேனீ கூண்டுகளை வேலியாகப் பயன்படுத்தி யானை- மனித எதிர்கொள்ளலைக் குறைப்பதுதான் திட்டம்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான எதிர்கொள்ளல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், அதைத் தடுப்பதற்கு தேனீக்களைப் பயன்படுத்தும் புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம்.

யானை
யானை

கடந்த சில ஆண்டுகளாகவே யானை- மனித எதிர்கொள்ளல் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அதிகரிக்கும் வன ஆக்கிரமிப்பும், வன அழிப்பும், யானைகளின் வலசைப் பாதைகளை மறித்து கட்டடங்கள் கட்டும் போக்கும் யானைகள் வாழ்வைச் சிதைத்து யானை-மனித எதிர்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது. இந்த மோதலில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்படுகின்றன. மனிதர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்' என அவ்வப்போது வனவிலங்கு மற்றும் யானைகள் நல ஆர்வலர்கள் தீவிரமாகக் குரல்கொடுத்து வருகின்றனர். ஆனாலும், அரசால் யானை-மனித எதிர்கொள்ளலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

தேனீக்கள்
தேனீக்கள்

இப்படியான சூழலில்தான், காட்டு யானைகள் - மனிதர்கள் இடையே நிகழும் எதிர்கொள்ளல் சம்பவங்களைத் தடுக்க தேனீக்களை பயன்படுத்தும் புதிய முயற்சியை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் கையிலெடுத்திருக்கிறது. அந்த ஆணையம் தனது தேசிய தேன் திட்டத்தின் துணைத் திட்டமாக இந்த யானை- மனித மோதலைக் குறைக்கும் (RE-HAB (Reducing Elephant – Human Attacks using Bees) திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தின் செலூர் கிராமத்தில் நான்கு இடங்களில் இந்தத் திட்டம் முதன் முதலாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. தேனீ கூண்டுகளை வேலியாகப் பயன்படுத்தி யானை- மனித எதிர்கொள்ளலைக் குறைப்பதுதான் திட்டம். இந்தத் திட்டத்தின் மொத்த செலவே 15 லட்சம் ரூபாய்தான்.

யானை மனித எதிர்கொள்ளல்
யானை மனித எதிர்கொள்ளல்
Pixabay

இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் சக்சேனா, "இந்த இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் 15 முதல் 20 தேனீ கூண்டுகளை இணைத்து ஒரு கம்பி மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியைத் தாண்டி யானைகள் ஊருக்குள் நுழைய முயற்சி செய்யும்போது, இந்த கம்பி தேனீ கூண்டுகளை அசைக்கும். இதையடுத்து, தேனீக்கள் வெளியேறி அவை யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுத்து யானைக் கூட்டத்தைக் காட்டுக்குள்ளேயே விரட்டிவிடும்.

இதற்காக இந்தத் தேனீ கூண்டுகள் தரையிலும் மரங்களிலும் தொங்க விடப்பட்டுள்ளன. தேனீ கூட்டம், யானைகளை எரிச்சலூட்டி மற்றும் அச்சுறுத்தி விரட்டிவிடும் என்பது அறிவியல் பூர்வமாகவும நிரூபிக்கப்பட்டுள்ளது. தேனீக்கள் தங்களின் மென்மையான கண், துதிக்கை மற்றும் காது பகுதிகளில் கொட்டிவிடும் என யானைகள் அஞ்சுகின்றன. இதனால் தேனீக்கள் கூட்டம், யானைகளை அச்சுறுத்தலாக இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு