Published:Updated:

`அந்த ஒற்றைப் புலி எப்போது வரும் எனத் தெரியவில்லை!' -ஆடு, மாடு வேட்டையால் கதிகலங்கும் கூடலூர் மக்கள்

தீப்பந்தங்களுடன் வனத்துறையினர்.
தீப்பந்தங்களுடன் வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் புலியைக் கண்காணிக்க வனத்துறையினர் விடிய விடிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ளது ஸ்ரீமதுரை கிராமம். முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள இப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம்.

சாலையோரம் உலவும் புலி
சாலையோரம் உலவும் புலி
மாதிரி படம்

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இரவு நேரத்தில் ஊருக்குள் வரும் புலி ஒன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. அதேசமயம் வனத்துறையினரின் தூக்கத்தையும் தொலைக்கச் செய்துள்ளது. இரவில் ஊருக்குள் வரும் இந்தப் புலி இதுவரை 5 மாடுகளையும் பத்துக்கும் அதிகமான ஆடுகளையும் கொன்றுள்ளது. ஆனால், புலி நடமாட்டம் குறித்த எந்தத் தடயமும் இல்லை. கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகவில்லை. அடுத்து எப்போது புலி தாக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர் கூடலூர் மக்கள்.

திறந்த ஜீப்... நெருங்கி வந்த புலி... முதுமலையில் பதறிய சுற்றுலாப் பயணிகள்! - திக் திக் நிமிடங்கள்

புலியின் நடமாட்டம் குறித்துப் பேசும் ஸ்ரீமதுரை பகுதியைச் சேர்ந்த சிவகுமார், ``கடந்த 6 மாதங்களுக்கு மேலாக புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. முதுமலை புலிகள் காப்பக எல்லைப் பகுதியில் எங்கள் கிராமங்கள் உள்ளதால், வனப்பகுதியிலிருந்து அடிக்கடி புலிகள் வெளியேறும். அப்படி வெளியேறிய புலி ஒன்று கடந்த மாதத்தில் மட்டும் 5 மாடுகளைக் கொன்றுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி கீச்சலூர் பகுதியில் கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை புலி கடித்துக் கொன்றது. சில தினங்கள் கழித்து கொரவயல் பகுதியில் கட்டி வைத்திருந்த காளை மாட்டைக் கடித்து இழுத்துச் சென்றது. மேலும், ஆடுகளையும் கொன்றுள்ளது. இரவு நேரங்களில் புலி நடமாடுவதைப் பார்த்தோம். இதனால் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் நடமாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம்" என்றார் அச்சத்துடன்.

தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு
தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு

இதுகுறித்து வனத்துறையினர், ``இந்தக் கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வனத்துறையிடம் புலியைப் பிடிக்கக் கோரி மனு அளித்தனர். புலி நடமாட்டம் உள்ளதாகச் சொல்லப்படும் பகுதிகளில் தானியங்கி கேமராக்களைப் பொருத்திக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். அந்தந்தப் பகுதிகளில் 9 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தினமும் கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முள்ளம்பன்றி, காட்டுப்பன்றிகளின் உருவங்கள் கேமராக்களில் பதிவாகி உள்ளது. ஆனால், புலியின் உருவம் கேமராவில் பதிவாகவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறை ஊழியர்கள் இரவு முழுவதும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களுக்குள் சென்று பல்வேறு இடங்களில் தீ மூட்டியும் தீப்பந்தங்களைக் கொண்டு புலி நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படும் பகுதிகளில் ரோந்தும் செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்கின்றனர் உறுதியான குரலில்.

பின் செல்ல