Published:Updated:

எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் 35 நூல்கள்... மின்சாரமே பயன்படுத்த விரும்பாத பேராசிரியை!

பேராசிரியர் முனைவர். ஹேமா சேன்
பேராசிரியர் முனைவர். ஹேமா சேன் ( Reshmi Chakraborty )

பருத்திப் புடவையில் இன்றும் தன்னுடைய வேலைகளை இயன்ற அளவுக்குத் தாமே செய்துகொண்டிருக்கும் ஹேமா சேனுடைய 70 ஆண்டுக்கால அனுபவம் அனைத்தையுமே, அவருடைய வீட்டிலிருக்கும் எண்ணெய் விளக்குகள் கூறும்.

உங்களால் மின்சாரமே இல்லாத ஒரு வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா? ஒருவேளை மின்சாரமின்றி வாழ வேண்டுமெனில், எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்? ஒரு மணிநேரம்! அதிகபட்சமாக ஒருநாள். மின்சாரமின்றி வாழ்வது சாத்தியமே இல்லையென்ற நிலை வந்துவிட்டது. மின்சார உற்பத்திக்குப் பின்னால் பெரும் அரசியலும் பொருளாதாரச் சந்தையும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இவை எதைப் பற்றியுமே கவலைகொள்ளாமல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறிய மின் விளக்குகூட இல்லாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார் பூனேவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

பேரா.ஹேமா சேனுடைய வீட்டிலுள்ள பழைமையான தோட்டம்...
பேரா.ஹேமா சேனுடைய வீட்டிலுள்ள பழைமையான தோட்டம்...
Reshmi Chakraborty

79 வயதான, முனைவர் ஹேமா சேன், ஓர் ஓய்வுபெற்ற தாவரவியல் பேராசிரியர். தங்கள் குடும்பம், தம்முடைய தாத்தா, பாட்டி காலத்திலிருந்தே இப்படியே வாழ்ந்ததாகக் குறிப்பிடும் ஹேமா சேன், இயற்கையின் மீது கொண்ட ஆர்வத்தால் தாமும் இதேபோல் வாழப் பழகிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். 1960-ம் ஆண்டு, பூனேவிலுள்ள ஃபெர்குஸ்ஸன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் ஹேமா. மேற்கொண்டு, சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் பூனேயிலுள்ள புத்வார் பெத் என்ற பகுதியில், தன்னுடைய மின்சாரமில்லாத சிறிய வீட்டில், வாழ்ந்து கொண்டிருக்கிறார். மின் வசதியை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பைக்கூட அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இயற்கையின் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அவருக்கிருந்த காதலே, இப்படியொரு இயல்பான வாழ்வியலைக் கடைபிடிக்க அவரை உந்தியது.

``உணவு, உறைவிடம், உடை ஆகியவைதான் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள். முன்பெல்லாம், மின்சாரமே கிடையாது. அது சமீபத்தில் வந்ததுதான். ஆகவே, அது இல்லாமல் என்னால் சமாளித்துக்கொள்ள முடியும்" என்று தன்னுடைய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மட்டும் சுமார் 452 மெட்ரிக் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகின்றது. தேசிய உற்பத்தியில் 59 சதவிகிதம், மின்சார உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 55 முதல் 80 சதவிகிதம் வரை வீட்டுப் பயன்பாடுகளுக்கே செல்கின்றது.

1962 முதல் 2000-ம் ஆண்டு வரை, கார்வாரே கல்லூரியில் தாவரவியல் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதேநேரம், பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், பல்வேறு பகுதிகளில் துறைசார்ந்து உரையாற்றியுள்ளார். எலும்புப் பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு வரும்வரை ஓய்வில்லாமல் தொடர்ந்து தாவரவியல் துறை சார்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். தடியில் உடலைக் கொஞ்சமாகச் சாய்த்தவாற்று ஊன்றிக்கொண்டு நடக்கும் அந்த நடுங்கும் கைகள், விளக்கொளியிலேயே பல நூல்களை எழுதிவிட்டன. மாணவர்கள், நூல்கள், அறிவுக்கான தேடல் இந்த மூன்றை மட்டுமே தன்னுடைய வாழ்வு முழுவதும் துணையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தார். பருத்திப் புடவை மட்டுமே அணிகிறார். இன்றும் தன்னுடைய வேலைகளை இயன்ற அளவுக்குத் தாமே செய்துகொண்டிருக்கும் அவருடைய 70 ஆண்டுக்கால அனுபவம் அனைத்தையுமே, அவருடைய வீட்டிலிருக்கும் எண்ணெய் விளக்குகள் கூறும்.

மின்சாரம் இல்லாத வாழ்வைக் கடைப்பிடித்த தன் தாத்தா, பாட்டியின் வாழ்வியலை அவர் தொடக்கத்தில் உணரவில்லை. பின்னர், அதே பாதையில் அவர்களைப் பின்பற்றத் தொடங்கியதும்தான், இந்த வாழ்வியலின் உன்னதம் அவருக்குப் புரியத் தொடங்கியது. நகரமயமாகிவிட்ட இன்றைய சூழலில், சுற்றியும் கோயில் மணியோசைகள், தினசரி இரைச்சல்கள் என்று பிசியாகிவிட்ட நகருக்கு நடுவே வாழ்ந்துகொண்டிருக்கும்போது கூட, அவர் மின்சாரத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. அவருக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. அசோக மரம், இனிப்புப் புளிய மரம் போன்றவை நிறைந்த பழைய தோட்டத்திற்கு நடுவேயுள்ள அவருடைய வீட்டில், ஒரு நாய், இரண்டு பூனை மற்றும் அங்கேயே உலவிக் கொண்டிருக்கும் கீரிப் பிள்ளையோடு தனியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

பௌத்தம் குறித்து மராத்திய மொழியில் அவர் எழுதிய நூல்
பௌத்தம் குறித்து மராத்திய மொழியில் அவர் எழுதிய நூல்
Reshmi Chakraborty

அன்றாடம், காலையில் பறவைகளுடைய இன்னிசையில் கண் விழித்து, தன்னுடைய வேலைகளைத் தொடங்கிவிடும் ஹேமா சேன் என்ற மூதாட்டியின் இயற்கை மீதான காதலுக்கு இதைவிடச் சிறந்த சொர்க்கம் நிச்சயமாக இருக்கவே முடியாது. அவருடைய பெற்றோர் இறந்தபிறகு, அவருக்குத் துணையாக சகோதரர் ஒருவர் இருந்தார். அவரும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உயிரிழந்துவிட்டார்.

தன்னுடைய வாழ்க்கைமுறையோடு ஒன்றிப் போகக்கூடிய அனைவரையும் இரு கைகளையும் விரித்து வரவேற்க எப்போதும் காத்திருக்கின்றார். அதோடு, நல்ல எண்ணத்தோடு ஒருவர் அறிவுரை கூறுதாகவே இருந்தாலும்கூட, இந்த வாழ்க்கைமுறைக்கு முரணான அறிவுரையாக இருப்பின், அதை நேரடியாகப் புறக்கணிக்கவும் அவர் தயங்குவதில்லை.

தாவரவியல் துறையில் முனைவர் படிப்பை முடித்தவர், தன்னுடைய 46 வயதில் வரலாறு குறித்த முதுகலைப் படிப்பையும், வரலாற்றின் மீதான ஆர்வத்தினால் முடித்தார். தாவரவியல் முதல் வரலாறு வரை பல்வேறு நூல்களை, தன்னுடைய அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் விளக்குகளின் கீழேயே அவர் எழுதி வெளியிட்டுள்ளார். பூனே பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில், தாவரவியல் சார்ந்து அவர் எழுதிய சில நூல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நான் எதை உறுதியாக நம்புகின்றேனோ, அதன்படி வாழ்கின்றேன். நான் யாருக்கும் எந்த அறிவுரையும் வழங்கப் போவதில்லை. நான் நம்புவதன்படி வாழ்கிறேன். அவ்வளவே.
முனைவர்.ஹேமா சேன்

புராணங்களும் மரங்களும் குறித்து அவர் பல்வேறு உரைகளை நிகழ்த்தியுள்ளார். தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி என்று எந்தவித மின்சாதனப் பொருளையுமே அவர் இதுவரை பயன்படுத்தியதே இல்லை. புத்தகங்கள், ஆய்வு போன்றவற்றையே அவருடைய அறிவுத் தேடலுக்கான திறவுகோல்களாக அவர் கருதினார். அவற்றின் மூலமே தன்னுடைய அறிவையும் விசாலப்படுத்திக்கொண்டார். அவர் பயன்படுத்திய, அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரேயொரு சாதனம், பேட்டரிகளில் இயங்குகின்ற வானொலிப்பெட்டி மட்டும்தான். அதோடு, நீண்டகாலமாக நேயராக இருப்பதற்காக, ஆல் இந்தியா ரேடியோவால், அவர் கௌரவிக்கப்பட்டார்.

இரண்டு இரும்பு பீரோக்கள் நிறைந்து வைக்க இடம் போதாமல் தரைகளில் அப்படியே போடப்பட்டிருக்கும் நூல்கள் என்று அவருடைய சின்னஞ்சிறு வீடு முழுவதும் புத்தகங்களா நிறைந்திருக்கும். அவற்றையே தன்னுடைய உற்ற நண்பர்களாகக் கருதுகிறார் முனைவர்.ஹேமா சேன். நீண்டகால நிலைத்தன்மை மிக்க வளர்ச்சி குறித்த நூலை 2018-ம் ஆண்டு வெளியிட்டார். இதுவரை 25 துறைசார் நூல்களையும் வரலாறு, பௌத்தம் போன்றவற்றோடு சேர்த்து 10 இதர நூல்களையும் எழுதியுள்ளார்.

தன்னை ஒரு சூழலியல் ஆர்வலராகவோ, பசுமைப் போராளியாகவோ அடையாளப்படுத்துவதை ஹேமா விரும்புவதில்லை.

``நான் எதை உறுதியாக நம்புகின்றேனோ, அதன்படி வாழ்கின்றேன். நான் யாருக்கும் எந்த அறிவுரையும் வழங்கப் போவதில்லை. யாரையும் இதேபோல் வாழுங்கள் என்று கேட்கப் போவதுமில்லை. நான் நம்புவதன்படி வாழ்கிறேன். அவ்வளவே." என்கிறார் முனைவர்.ஹேமா சேன்.

அடுத்த கட்டுரைக்கு