Published:Updated:

`தாயகம் இமயமலை... காட்டை அழிக்கும் அழகு தாவரம்..!'- அதிர்ச்சியில் நீலகிரி

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

இமயமலையை தாயகமாகக் கொண்ட Polygonum molle எனப்படும் ஹிமாலயன் முடிச்சுச் செடிகள் மேற்குத் தொடச்சி மலைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது.

இமய மலையை தாயகமாகக் கொண்ட Polygonum molle
இமய மலையை தாயகமாகக் கொண்ட Polygonum molle

கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமான நீலகிரி மலையில் பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான சோலை மரக்காடுகள், புல்வெளிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது பல்வேறு நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான அந்நிய தாவரங்கள் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Polygonum molle செடிகள்
Polygonum molle செடிகள்

இந்த மண்ணுக்கு தொடர்பே இல்லாத அந்நிய தாவரங்கள் தற்போது சூழலியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. காட்டின் வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பல்லுயிர் பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காடுகளில் குறிப்பிட்ட களைத்தாவரங்கள் மட்டுமே பல்கிப்பெருகி பெரும் கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கெனவே நீலகிரி காடுகளில் யூகலிப்டஸ், வேட்டில், லேண்டனா, பார்த்தீனியம், செஸ்ட்ரம், ஸ்காட்ச் புரூம் போன்ற பல களைத்தாவரங்கள் ஆக்கிரமித்து புல் மற்றும் பிற தாவரங்களின் வளர்ச்சியைப் பாதித்து யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு பெரும் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது.

சாலை ஓரங்களில் ஆக்கிரமித்துள்ள களை தாவரம்
சாலை ஓரங்களில் ஆக்கிரமித்துள்ள களை தாவரம்

இந்த நிலையில், தற்போது நீலகிரி காடுகளை அச்சுறுத்தும் வகையில் இமய மலையைத் தாயகமாகக்கொண்ட Polygonum molle (Sikkim knotweed) எனப்படும் ஹிமாலயன் முடிச்சு செடிகள் அப்பர் நீலகிரி எனப்படும் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் காடுகளும் காட்டுயிர்களும் கடுமையாகப் பாதிக்கும் அபாயம் இருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தாவரவியலாளர் ஷைனி மரியம் ரஹெல் கூறுகையில், ``மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ள 27 களைத்தாவரங்களில் `பாலிகனம் மோலே’ மிக வேகமாகப் பரவி வருகிறது. நீர் நிலைகள், ஓடைகள், ஆறுகள் போன்றவற்றை ஆக்கிரமித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

ஆக்கிரமித்துள்ள களை தாவரம்
ஆக்கிரமித்துள்ள களை தாவரம்

இது குறித்து காட்டுயிர் எழுத்தாளரும் ஆய்வாளருமான வசந்த் பாஸ்கோ கூறுகையில், ``இமய மலையை தாயகமாகக் கொண்ட Polygonum molle இமய மலை முடிச்சி செடி என அழைக்கப்படுகிறது. அழகு தாவரமாக நீலகிரிக்கு கொண்டுவரப்பட்ட இந்த தாவரம் இன்றைக்கு நீலகிரி காடுகளையே அழிக்கும் அளவுக்கு பரவி வருகிறது. கொத்தாக உள்ள பூக்களில் ஆயிரக்கணக்கான விதைகள் காற்றில் பரவுகிறது. இவற்றை அகற்றுவது மிக கடினமான பணி. வனத்துறை முறையாக ஆய்வு செய்து திட்டம் வகுத்து அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் பதிப்பு ஏற்படும்” என்றார்.

வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``முதுமலை, அவிலாஞ்சி போன்ற வனப்பகுதிகளில் உள்ள களைத் தாவரங்கள் மெல்ல அகற்றப்பட்டு வருகிறது. தற்போது வேகமாக பரவிவரும் இந்தக் களைத்தாவரத்தின் பாதிப்புக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றனர்.