Published:Updated:

ஐன்ஸ்டீனின் குளிர்சாதனப்பெட்டி; உலகையே மிரட்டிய அணு குண்டு தயாரிக்க வித்திட்டது எப்படி?

இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

தனது கண்டுபிடிப்பு சமூகத்தில் எதுமாதிரியான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எது நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் இந்த முன்னெடுப்பை எடுத்தாரோ, அதுவே இப்படியொரு பெருநாசத்துக்கு வித்திட்டுவிட்டது.

ஐன்ஸ்டீனின் குளிர்சாதனப்பெட்டி; உலகையே மிரட்டிய அணு குண்டு தயாரிக்க வித்திட்டது எப்படி?

தனது கண்டுபிடிப்பு சமூகத்தில் எதுமாதிரியான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எது நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் இந்த முன்னெடுப்பை எடுத்தாரோ, அதுவே இப்படியொரு பெருநாசத்துக்கு வித்திட்டுவிட்டது.

Published:Updated:
இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

1945-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணு குண்டுகளுக்குப் பின்னால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இருப்பதாக ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. இந்தப் பேரழிவு நடந்து முடிந்த அடுத்த சில மாதங்களில், வெளியான `டைம்' இதழின் அட்டைப் படத்தில், அணு குண்டு வெடித்தபோது காளான் வடிவத்தில் வானுயர எழுந்த புகையின் முன்னால், ஐன்ஸ்டீன் படத்தையும் அவர் கண்டுபிடித்த E=mc2 என்ற சூத்திரமும் இடம் பெற்றிருந்தது.

அந்த இதழில் வெளியான கட்டுரை, ``ப்ரவுன் நிற கண்களைக் கொண்ட, கூச்ச சுபாவமுள்ள, கிட்டத்தட்ட புனிதரைப் போன்ற தன்மையுடைய, குழந்தைத்தனமுடைய ஒருவரின் செயல், வரலாற்றில் மிகப்பெரிய பின்விளைவுகளைக் கொடுத்துள்ளது. ஐன்ஸ்டீன் நேரடியாக அணு குண்டு தயாரிப்பதில் பங்கெடுக்கவில்லை.

டைம் இதழின் அட்டைப்படம
டைம் இதழின் அட்டைப்படம

ஆனாலும், அவரை இரண்டு காரணங்களுக்காக, அதன் தந்தை என்று கூறலாம்.

1. அமெரிக்கா, இதற்கான ஆய்வைத் தொடங்கக் காரணமாக இருந்ததே அவருடைய முன்னெடுப்புதான்.

2. அணு குண்டு தயாரிக்கக் காரணமாக இருந்ததே அவர் கண்டுபிடித்த E=mc2 சூத்திரம்தான்" என்று அவரையே இதற்கான தொடக்கப்புள்ளியாகப் பேசியது.

அதேபோல், நியூஸ்வீக் என்ற இதழ், ``இவை அனைத்தையும் தொடங்கி வைத்த மனிதன்" என்று ஐன்ஸ்டீனை சாடியது.

ஐன்ஸ்டீன், ஒரு விஞ்ஞானியாக புதியனவற்றைக் கண்டுபிடிப்பது மட்டுமே தன் வேலையென்று இருந்துவிட்ட நபர் இல்லை. அவர், தன்னுடைய கண்டுபிடிப்பு சமூகத்தில் எதுமாதிரியான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எது நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் இந்த முன்னெடுப்பை எடுத்தாரோ, அதுவே இப்படியொரு பெருநாசத்துக்கு வித்திட்டுவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`வண்ணத்துப்பூச்சியின் விளைவு' (Butterfly Effect) என்று அறிவியலில் ஒரு கூற்று சொல்லப்படும். அதாவது, எங்கோ நடக்கும் நிகழ்வு, பல்வேறு சங்கிலித் தொடர்களாக அடுத்தடுத்த பல்வேறு நிகழ்வுகளுக்கு வித்திடும். இதை `ரிப்பிள் எஃபெக்ட்' (Ripple Effect) என்றும் சொல்வார்கள். குளத்தில் கல்லைத் தூக்கிப் போட்டவுடன், கல் விழுந்த இடத்தைச் சுற்றி நீர் அலைகள் வட்டமாக எழும்புவதைப்போல, ஒரு நிகழ்வு நடப்பதைப் பொறுத்து, அதைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடப்பது.

சரி, இப்போது இதையெல்லாம் எதற்காகச் சொல்ல வேண்டும்? இதற்கும் ஐன்ஸ்டீனுக்கும் அணுகுண்டுக்கும் என்ன சம்பந்தம்?

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்

சம்பந்தம் இருக்கிறது. அமெரிக்கா அணு குண்டு கண்டுபிடிக்க உந்துதலாக இருந்ததே, ஜெர்மனி அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததுதான். ஜெர்மனியில் இருந்த அவருடைய ஹங்கேரிய நண்பர் ஒருவர், இந்தத் தகவல் தெரிந்தவுடன், ஐன்ஸ்டீனுக்குத் தகவல் கொடுத்ததோடு, அப்போதைய அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு கடிதம் எழுதி எச்சரியுங்கள் என்று ஐன்ஸ்டீனைக் கேட்டுக்கொண்டதும், லியோ ஸிலார்ட் என்ற அந்த நண்பர்தான். ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் 1920-களில் பணிபுரிந்தபோது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து ஒரு குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்தார்கள். ஒரு ஃப்ரிட்ஜ் தயாரிப்பதில் ஐன்ஸ்டீன் ஈடுபட்டபோது தொடங்கிய அந்த வண்ணத்துப்பூச்சி விளைவுதான், இறுதியில் அமெரிக்கா அணு குண்டு தயாரிப்பது வரை கொண்டு சென்றது.

இந்த சங்கிலித் தொடர் தொடங்கிய நேரத்தில், 1920-களில் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இருந்தார். ஹங்கேரியின் புத்தபெஸ்டில் பிறந்த லியோ ஸிலார்ட், ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய படையில் முதல் உலகப் போரின்போது தனது சேவையை முடித்துவிட்டு, பெர்லின் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வாளர்களான ஐன்ஸ்டீன் மற்றும் மேக்ஸ் ப்ளாங்க் ஆகியோரின் கீழ் ஆய்வு மாணவராக இருந்தார்.

பெர்லினில் அப்போது பயன்பாட்டிலிருந்த ஒரு குளிர் சாதனப்பெட்டி சேதமடைந்திருந்தது தெரியாமலிருந்த ஒரு குடும்பம், உறங்கிக்கொண்டிருக்கும்போது, அதிலிருந்து வெளியான நச்சுமிகுந்த வாயுவால் இறந்துபோனார்கள். மிதைல் குளோரைட், அம்மோனியா, கந்தக டை ஆக்சைட் போன்ற நச்சு வாயுக்கள் அப்போது குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அந்த நச்சு வாயுக்கள் வெளியாகி ஒரு குடும்பமே உயிரிழந்ததைப் பார்த்து உடைந்துபோன ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இதற்கு வேறு வழி இருக்க வேண்டும், இவ்வளவு ஆபத்தான நச்சு வாயுக்கள் இல்லாத ஒரு குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று லியோவிடம் கூறுகிறார்.

1926-ம் ஆண்டில், ஐன்ஸ்டீன்-லியோ ஸிலார்ட் இணைந்து ஒரு குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். அவர்கள் கண்டுபிடித்த அந்த குளிர்சாதனப் பெட்டி வியாபார சந்தையில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், அந்தக் கண்டுபிடிப்பின்போதுதான், ஐன்ஸ்டீன்-ஸிலார்ட் நட்பு பலப்பட்டது.

சிகாகோ பல்கலைக்கழகத்
தில் சக ஆய்வாளர்களோடு லியோ ஸிலார்ட்
சிகாகோ பல்கலைக்கழகத் தில் சக ஆய்வாளர்களோடு லியோ ஸிலார்ட்

அதற்குப் பிறகு, 1932 டிசம்பர் மாதத்தில் ஐன்ஸ்டீன், முற்றிலுமாக ஜெர்மனியை விட்டு வந்து அமெரிக்காவில் குடியேறிவிட்டார். நாஜிக்கள் ஒரு பத்திரிகையில் அவருடைய படத்தைப் போட்டு, ``இன்னமும் தூக்கிலிடப்படவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவருடைய தலைக்குப் பரிசுகூட அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அங்கிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறினார். அதைத் தொடர்ந்து 1933-ம் ஆண்டில், லியோ ஸிலார்ட், அவருடைய ஆய்வு ஒன்றில் அணுக்கரு தொடர்வினை (Nuclear Chain reaction) என்ற கருத்துருவை உருவாக்குகிறார். அதற்கான பேடன்ட் உரிமத்தை ஜெர்மனி அணு குண்டு தயாரிக்க உதவிடக் கூடாது என்ற நோக்கத்தில், 1936-ம் ஆண்டு பிரிட்டிஷ் கடற்படை நிர்வாகக் குழுவிடம் கொடுத்து, அதை ரகசியமாக வைக்குமாறு கூறினார். பிறகு, அங்கிருந்து 1937-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார்.

அவர் அங்கிருந்த நேரத்தில், 1939-ம் ஆண்டு, ஜெர்மனி போலந்து மீது படையெடுப்பதற்கு முன்பு, ஜெர்மனி விஞ்ஞானிகள் யுரேனியம் அணுக்களைப் பிளந்து, அணு குண்டு உருவாக்கும் முயற்சியில் ஒரு படி முன்னேறியிருந்தார்கள்.

லியோ ஸிலார்ட், அவருடைய நண்பரும் அவரைப் போலவே புத்தபெஸ்டிலிருந்து அமெரிக்கா தப்பி வந்த சக விஞ்ஞானியுமான யூஜீன் விக்னெரும், ஜெர்மனியின் இந்த முன்னேற்றம் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டுவரப் போகிறதோ என்று அஞ்சினார்கள். ஆனால், அமெரிக்காவில் அகதிகளாக இருக்கும் இரண்டு ஹங்கேரிய விஞ்ஞானிகளின் பேச்சை யார் கேட்பார்கள் என்ற கவலையும் அவர்களுக்கு இருந்தது. அப்போதுதான், ஐன்ஸ்டீனுக்கு ராணி எலிசபெத்தோடு இருக்கும் நட்புறவு பற்றிய நினைவு ஸிலார்டுக்கு வந்தது.

எப்படியாவது ஐன்ஸ்டீனிடம் இந்தத் தகவலைக் கொண்டு சேர்த்து, அவர் மூலமாக எச்சரிக்க வேண்டும் என்று இருவரும் திட்டமிட்டார்கள். ஜூலை 16, 1939 அன்று இருவரும் ஐன்ஸ்டீனிடம் இதுகுறித்து ஆலோசித்தார்கள். இருவரும் அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஜெர்மனி அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்துச் சொன்னபோது ஐன்ஸ்டீன், ``இது இவ்வளவு விரைவாக சாத்தியப்படும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று அதிர்ந்துபோனார். அவருடைய கண்டுபிடிப்பு ஒரு ஆயுதமாகும் என்று கற்பனைகூடச் செய்திருக்கவில்லை.

அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு கடிதம் எழுதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் லியோ ஸிலார்ட்
அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு கடிதம் எழுதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் லியோ ஸிலார்ட்
Time Life Pictures

லியோ ஸிலார்ட், யூஜீன் விக்னெர் இருவரோடும் சேர்ந்து, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு, நாஜி விஞ்ஞானிகள் அணு ஆயுதத்தை உருவாக்கிவிட்டால் என்ன ஆகும் என்பதை எச்சரித்து, அமெரிக்கா உடனடியாக அணு ஆற்றல் குறித்த ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்று 1939, ஆகஸ்ட் 2-ம் தேதியன்று ஐன்ஸ்டீன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் கிடைத்து இரண்டே மாதங்களில், அக்டோபர் 21, 1939 அன்று, யுரேனியம் குறித்த ஆலோசனைக் குழுவை ரூஸ்வெல்ட் உருவாக்குகிறார். இந்தக் குழுதான், அணு ஆயுதம் தயாரித்த முதல் திட்டமான மேன்ஹேட்டன் புராஜக்ட் தொடங்குவதற்குத் தொடக்கப்புள்ளியாக இருந்தது.

ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி வெறும் 6,000 டாலர்கள் மட்டுமே. ஆகையால், ஸிலார்டின் உந்துதலின் பேரில், ஐன்ஸ்டீன் மீண்டும் மீண்டும் பல கடிதங்களை அதிபருக்கு எழுதுகிறார். அதில் ஒரு கடிதத்தில், இந்த ஆராய்ச்சிக்குப் போதிய நிதியுதவி அளிக்கவில்லை என்றால், ஸிலார்ட் அணு ஆற்றல் குறித்த கண்டுபிடிப்புகளை வெளியிட்டுவிடுவார் என்று மிரட்டல் தொணியிலும் இருந்தது. இதற்குப் பிறகுதான் மேன்ஹேட்டன் புராஜக்ட் வேகமெடுத்தது. அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டது, ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவுகளும் நிகழ்ந்தன.

ஆனால், அணு ஆயுதம் தயாரிக்கும் இந்தத் திட்டத்தில் கடைசி வரைக்கும் அமெரிக்கா ஐன்ஸ்டீனை சேர்த்துக்கொள்ளவில்லை. இது குறித்த தகவல்களை அவரிடமிருந்து ரகசியமாகவே பாதுகாத்தது. அப்போது எஃப்.பி.ஐ அவருக்கென உருவாக்கியிருந்த 1,800 பக்க ஃபைலில், எஃப்.பி.ஐ அதிகாரிகள் கட்டாயம் ஐன்ஸ்டீனை மேன்ஹேட்டன் புராஜக்டில் சேர்க்கக் கூடாது என்று கூறியிருந்தார்கள். ``இனவாதத்தை (racism), முதலாளித்துவத்தை, போரை நேரடியாக விமர்சிக்கும் இந்த விஞ்ஞானியை ரகசிய திட்டத்தில் சேர்த்துக்கொள்வது ஆபத்தானது. அவரை மேன்ஹேட்டன் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. இதுகுறித்து எந்தத் தகவல்களையும் அவரோடு பகிர்ந்துகொள்ளவே கூடாது" என்று எஃப்.பி.ஐ பரிந்துரைத்தது.

இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது, பெர்லினில் ஐன்ஸ்டீன் லியோ ஸிலார்டோடு இணைந்து கண்டுபிடித்த ஒரு குளிர்சாதனப் பெட்டிதான். பல்வேறு காரணங்களால், அன்று அது சந்தைக்கு வராமலே போய்விட்டது. ஆனால், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அவர்கள் கண்டுபிடித்த அந்தக் குளிர்சாதனப்பெட்டி, இப்போது CFC போன்ற பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாடுகளில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறி அதை வடிவமைப்பதற்கு ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.

அமெரிக்க அதிபருக்கு ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்
அமெரிக்க அதிபருக்கு ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்

காலப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்து, லியோ ஸிலார்ட் ஐன்ஸ்டீன் இருவருக்குமான நட்புறவு ஏற்படுவதைத் தடுத்துவிட்டால், அமெரிக்கா அணு ஆயுதம் தயாரித்த வரலாற்றுச் சம்பவத்தையே தடுத்து நிறுத்திவிட முடியும். ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் இருந்தபோது இவரோடு சேர்ந்து கண்டுபிடித்த ஒரு ஃப்ரிட்ஜுக்கும் அணு குண்டுக்கும் இடையிலான சங்கிலித் தொடர்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது. அமைதியையும் சமத்துவத்தையும் மட்டுமே விரும்பிய தன்னுடைய கண்டுபிடிப்பு மோசமான ஆயுதமாகப் பயன்பட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் எடுத்த முயற்சியே ஒரு வரலாற்றுப் பிழைக்கு வித்திட்டுவிட்டது என்பதை நினைத்து ஐன்ஸ்டீன் நொறுங்கிப் போய்விட்டார்.

அணு ஆயுதம் உண்டாக்கிய பேரழிவைக் கண்ட ஐன்ஸ்டீன், ``ஜெர்மானியர்கள், அணு குண்டு கண்டுபிடிப்பதில் தோற்றுப் போவார்கள் என்று எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், நான் அதிபருக்கு அந்தக் கடிதத்தை எழுதியிருக்கவே மாட்டேனே!" என்று மிகவும் மனமுடைந்து கூறியுள்ளார்.